சங்கரரின் பார்வையில் ஸ்ரீமத்பகவத்கீதை

சங்கரரின் பார்வையில் ஸ்ரீமத்பகவத்கீதை
Updated on
1 min read

பகவத் கீதைக்கு எண்ணற்ற உரைகள் எழுதப்பட்டிருக்கின்றன. சமஸ்கிருதத்தில் உள்ள கீதையின் ஸ்லோகங்களின் பொருளை வேறு மொழியில் சொல்வதே ஒரு விதத்தில் சவாலான வேலையாகும். அந்த அளவுக்குக் கீதையில் தத்துவம் சார்ந்த கலைச் சொற்கள் நிரம்பியிருக்கின்றன. கருமம், சன்யாசம், யோகம், ஷேத்ரம், குணம், பிரகிருதி முதலான பல சொற்கள் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்களைத் தருகின்றன.

எந்த இடத்தில் எந்தப் பொருளைக் கொள்ள வேண்டும் என்பதைச் சொல்ல தேர்ந்த மொழியறிஞர் இருந்தால் மட்டும் போதாது. தத்துவத்திலும் தேர்ச்சி பெற்ற மொழியறிஞர் வேண்டும். இதனால்தான் கீதை உள்ளிட்ட பல தத்துவ நூல்களைப் பொருள் உணர்ந்து படிப்பது கடினமாகிறது. இந்தக் கஷ்டத்தைப் போக்கி மூல நூலின் பொருளையும் உணர்வையும் தருவதே உரையாசிரியரின் முதன்மையான பணி.

இந்தியாவில் எல்லா விதமான தத்துவங்களைச் சேர்ந்தவர்களும் பகவத் கீதைக்கு உரை எழுதியிருக்கிறார்கள். பொருளை மட்டும் வழங்குவது மொழியாக்கம். பொருளோடு விளக்கமும் தருவது பாஷ்யம் எனப்படும் உரை.

சங்கரர், மத்வர், ராமானுஜர் ஆகியோர் எழுதிய உரைகள் கீதைக்கு எழுதப்பட்ட உரைகளில் முதன்மையானவையாகக் கருதப்படுகின்றன. இவற்றில் சங்கரரின் உரை வரலாற்று ரீதியாக முதலில் தோன்றியது என்னும் முக்கியத்துவத்தையும் பெறுகிறது.

அத்வைத, வேதாந்த, பக்தி நூல்கள் பலவற்றை எழுதியுள்ள சங்கரர் கீதைக்கு எழுதிய உரையிலும் அத்வைத சிந்த்தாந்தத்தை நிறுவுகிறார். சொற்களின் பொருள்கள், அவற்றுக்கான நுட்பமான விளக்கங்கள் என சங்கரரின் உரை வாசிப்பவருக்குத் தத்துவத்தின் வாசலை அகலமாகத் திறந்துவைக்கிறது.

மணிப்பிரவாள நடையில் அமைந்துள்ள இந்த நூல் கீதையைப் பதம் பிரித்துப் பொருள் சொல்வது, ஒவ்வொரு சொல்லுக்கும் தனித்தனியே பொருள் அறிய ஏதுவாக இருக்கிறது. சொல்லுக்கான பொருள் வழங்கப்பட்டு, அதன் கீழ் ஸ்லோகத்துக்கான சங்கர பாஷ்யத்தின் பொழிப்புரையும் கொடுக்கப்பட்டுள்ளது.

சில சொற்களுக்கான விளக்கங்கள் தத்துவ ரீதியான தெளிவைத் தருவதுடன் சிந்தனையையும் தூண்டுகின்றன. உதாரணம் பாருங்கள்:

அக்ரோத – பிறர் வைதலாலும் அடித்தலாலும் ஏற்பட்ட கோபத்தை அடக்குதல் கோபமின்மையாகும்.

அபைசுனம் – மற்றவர்களிடம் மற்றவர்களைக் குறித்துக் குறை கூறுதல் புறங்கூறுதலாகும்.

ஸத்யம் – பிரியமற்றதையும் பொய்யையும் நீக்கி உள்ளதை உள்ளபடி கூறுதல் சத்யமாகும்.

சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜாவின் தமிழாக்கத்தில் வந்திருக்கும் இந்தத் தொகுப்பு நூல்கள் சங்கரரின் பார்வையில் கீதையை அறிய உதவும் அரிய பொக்கிஷம்.

ஸ்ரீ மத்பகவத்கீதை

ஸ்ரீ சங்கர பாஷ்யத்தின் அந்வயமும்

தமிழ் அனுவாதமும்

தமிழில்: “ஸ்ரீ குருபாததூளிகா”

சுதர்சனா ராமசுப்பிரமணிய ராஜா

மொத்த விலை: 950/-

ஸ்ரீமதி லிங்கம்மாள் ராமராஜு சாஸ்த்ரப்ரதிஷ்ட்டா டிரஸ்ட்,

இராஜபாளையம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in