

ஆளும் குணமும் ஆன்மிக பலமும் அதிகமுள்ளவர்களே! உங்களுக்கு மனமகிழ்ச்சியை தரும் சந்திரனும், பணவரவைத் தரும் குருவும் பரஸ்பரம் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் இந்த ஆண்டு பிறப்பதால் கடந்த ஆண்டு ஏற்பட்ட பண நெருக்கடி குறையும். வீடு மாறுவீர்கள். பிள்ளைகளிடம் உங்களுக்கு தெரிந்ததையெல்லாம் திணிக்காமல் அவர்களின் வயதிற்கு ஏற்ப பேசுவது நல்லது. அடிமனதில் இருந்த சோம்பல், அலட்சியம் நீங்கி சுறுசுறுப்பாவீர்கள்.
ஆனால் கேது ஜூன் வரை ராசிக்குள் நிற்பதால் உடம்பில் இரும்பு, சுண்ணாம்பு சத்துக் குறையும். சனியும் ராகுவும் சரியில்லாததால் மனைவியுடன் சண்டை பிடிக்க நேரிடும். விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் குறிக்கோளுடன் சிலர் பழகுவார்கள். புகழ்பவர்களை நம்பாதீர்கள். சின்ன சின்ன பிரச்சினைகளுக்கெல்லாம் நீதிமன்றம் செல்ல வேண்டாம். எதுவாக இருந்தாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாமே. ஜூன் மாதத்திலிருந்து எதிர்பார்த்த பணம் வரும். வாகனத்தை மாற்றுவீர்கள்.
ஷேர் மூலம் பணம் வரும். சகோதர உறவுகளை விட்டுப்பிடிப்பது நல்லது. வருடத்தின் பிற்பகுதியில் சகோதரிக்கு திருமணம் முடியும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சிறுசிறு விபத்து, சிறுநீர் தொற்று வந்து போகும். சட்டத்திற்கு புறம்பான வகையில் எந்த உதவிகள் வந்தாலும் ஏற்றுக் கொள்ள வேண்டாம். புதன் இந்த ஆண்டு சாதகமாக இருப்பதால் நண்பர்கள் எண்ணிக்கை கூடும். ஆனாலும் யாரிடமும் மனம் விட்டு பேச முடியாமல் போகும். சுக்கிரன் வலுவாக இருப்பதால் புது டிசைனில் நகை வாங்குவீர்கள்.
வீடு கட்டுவதற்கு ப்ளான் அப்ரூவலாகி வரும். வியாபாரத்தில் போராடிதான் லாபம் பெற வேண்டி வரும். விளம்பர யுக்திகளை கையாளுவது நல்லது. பங்குதாரர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வருடப் பிற்பகுதியில் லாபம் கூடும். உத்தியோகத்தில் அடுத்தடுத்து சவால்களை சந்தித்தாலும் உயர்வு உண்டு. சிலருக்கு அயல்நாட்டு வாய்ப்பு வரும்.
வழிபாடு - வலம்புரி விநாயகர்
மதிப்பெண் 64/100