

சோழர் கால வரலாற்றை ஆழ்ந்து படித்தவர்களுக்கு ‘கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்ற பழமொழிக்குப் புதிய அர்த்தமொன்று கிடைக்கும். அக்காலக் கோயில்கள் செயல்பட்ட விதம் குறித்து கி.பி 10 முதல் 12 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகள் நிறைய செய்திகளை அளிக்கின்றன.
மின்விளக்குகள் இல்லாத காலத்து இரவுகளில், தஞ்சை பெரிய கோயில், ரங்கம், சிதம்பரம், காஞ்சிபுரம், ராமேஸ்வரம் போன்ற பெரிய கோயில்கள் எப்படி இருந்திருக்கும்? எல்லாக் கோயில்களிலும் எண்ணெய் மற்றும் நெய் தீபங்களே இரவின் இருளை நீக்கி, பகல் போல் வெளிச்சம் தந்தன. அந்தி விளக்கு, சந்தி விளக்கு, நந்தா விளக்கு எனப் பல வகைகள் இருந்தன. இவற்றுக்கான எரிபொருள், பெரும்பாலும் மன்னர், அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தந்த தான தர்மங்களில் இருந்து வந்தவையே.
ஒரு நந்தா விளக்குக்கு 90 ஆடுகள்
அணையா விளக்கான ஒரு நந்தா விளக்கைப் பரிபாலிக்க 90 ஆடுகள் தானமாக வழங்கப்பட்டன. இந்த ஆடுகள், கோயில் சுற்று வட்டார கிராமங்களில் இருந்த ஆடு மேய்ப்பவர்களிடம் கொடுக்கப்பட்டது. இதற்குப் பதிலாக அவர்கள் நாள்தோறும் ஒரு ஆழாக்கு நெய்யை ஆலயத்துக்கு அளித்தல் வேண்டும்.
இப்படி ஒரு விளக்கிற்கு 90 ஆடுகள் எனில், ஆயிரக்கணகான தீபங்களுக்கு எத்தனை எத்தனையோ ஆடுகள் விடப்பட்டிருக்கும். இதன் மூலம் எண்ணிலடங்காத ஆடு மேய்ப்போர் பயன் பெற்றுள்ளனர். இந்த தீபங்களை ஏற்றும் பணி, நூற்றுக்கணக்கானோர் குடும்பங்களுக்கு வாழ்வாதாரத்தைத் தந்தது.
கோயிலில் நடக்கும் அபிஷேகம், பூ அலங்காரம், பிரசாதம், அன்னதானம் என அனைத்துப் பணிகளையும் சுற்றி அந்த ஊரைச் சேர்ந்த குடும்பங்களின் வாழ்வாதாரம் பிணைக்கப்பட்டிருந்தது. தானங்களைப் பரிபாலனம் செய்பவர், கோயிலை அழகுபடுத்துபவர், கோலமிடுபவர், மேளதாளம் வாசிப்பவர், வாய்பாட்டு வாசிப்பவர், நடனமாடுபவர் எனத் தொழில்நுட்ப கலைஞர்கள் பலரும் பணியாற்றிப் பயன்பெற்றனர்.
ஆலயத்திற்குத் தானமாக வரும் பணம், தங்கம் போன்றவற்றை கிராமசபைகளுக்கும், மக்களுக்கும் தேவையான காலங்களில் வட்டிக்குக் கடனுதவி செய்து நவீன கால வங்கிகள் போல் செயல்பட்டன கோயில்கள். முக்கியமாக, இயற்கைச் சீற்றங்களின்போது, கிராமங்களின் மறுவாழ்விற்காகக் கோயில் சொத்து பயன்பட்டது.
மக்கள் கடவுளுக்கு அளித்த காணிக்கை அவர்களுக்கே பயன்பட்டது. இதற்கு ஆதாரமாகத் தஞ்சையின் ஆலங்குடியில் கிடைத்த சோழர் காலத்துக் கல்வெட்டுகளில், ‘பொதுமக்கள் கால தோஷம் காரணமாகக் கோவிலின் பண்டாரத்திலிருந்து எல்லா தங்க நகைகள், வெள்ளி பாத்திரங்கள் மொத்தம் 1011 கழஞ்சு தங்கம், 464 பலம் வெள்ளி கடனாக பெற்றுக் கொண்டனர்’ எனப் பொறிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலகட்டத்தில் குடிமக்களில் ஒரு பகுதியினருக்கு வருவாயை உருவாக்கும் அரசாங்கம் போலவும், கல்வி நிலையங்களாகவும், வறியவருக்கு அன்னசாலையாகவும், யாத்ரீகர்களுக்கு உறைவிடமாகவும் ஆலயங்கள் திகழ்ந்துள்ளன என்பதைக் கல்வெட்டுப் பதிவுகள் மூலம் அறிய முடிகிறது.