Last Updated : 02 Mar, 2017 10:19 AM

 

Published : 02 Mar 2017 10:19 AM
Last Updated : 02 Mar 2017 10:19 AM

இஸ்லாம் வாழ்வியல்: கோபம் வேண்டாம்

ஒரு நாள் மாலை நேரத் தொழுகைக்குப் பிறகு நபிகளார் தமது தோழர்களுக்கு நல்லுரை வழங்க ஆரம்பித்தார்.

“தோழர்களே, ஆதத்தின் சந்ததியினர் பல்வேறு குணாம்சங்களில் படைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் தாமதமாகவே கோபத்திற்குள்ளாவார்கள். ஆனால், வெகு விரைவிலேயே இயல்பு நிலைக்குத் திரும்பிவிடுவார்கள். இன்னும் சிலரோ சட்டென்று கோபப்படுவார்கள். கோபப்பட்டதுபோலவே அதே வேகத்தில் நிதான நிலைக்கும் திரும்பிவிடுவார்கள்.

அதேபோல, சிலர் தாமதமாகக் கோபப்பட்டு, தாமதமாகவே இயல்பு நிலை அடைவார்கள். சிலர், சட்டென்று கோபப்படுவார்கள். தாமதமாக நிதான நிலைக்குத் திரும்புவார்கள்” என்று சக மனிதப் பண்புகளை எடுத்துரைத்த நபிகளார், தமது தோழர்களை நோக்கித் தொடர்ந்து சொன்னார்:

“நான் சொல்வதை நன்றாகக் கவனியுங்கள் தோழர்களே. யார் தாமதமாகக் கோபப்பட்டு, வெகு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுகிறாரோ அவரே மனிதரில் மிகச் சிறந்தவராவார். யார் அதிவிரைவாகக் கோபப்பட்டுத் தாமதமாக தன்னிலையை அடைகிறாரோ அவரே மனிதரில் மிக மோசமானவராவார் ” என்ற நபிகளார் அறவுரையைத் தொடர்ந்தார்.

சிலர் அடுத்தவரிடம் கடன்பட்டால் அதனை அழகிய முறையில் திருப்பித் தந்துவிடுவார்கள். அதேபோல, கொடுத்த கடனையும் இவர்கள் மிகவும் கண்ணியமான முறையில் கேட்டுப் பெறுவார்கள். இன்னும் சிலர் கடனைத் திருப்பித் தருவதில் அவ்வளவாக அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. ஆனால், தாங்கள் கொடுத்த கடனைக் கேட்பதில் இவர்களும் கண்ணியமாக நடந்துகொள்வார்கள்.

சிலர் வாங்கிய கடனை, கொடுத்த வாக்குறுதிக்கு ஏற்பச் சரியாகத் திருப்பிவிடுவார்கள். அதே நேரத்தில் கொடுத்த கடனைத் திரும்பப் பெறுவதில் தரக்குறைவாக நடந்து கொள்வார்கள்.

அவரே மனிதரில் தீயவர்

“இவர்களில், கடனைத் திருப்பித் தருவதிலும், அதை வசூலிப்பதிலும் யார் கண்ணியமாக நடந்துகொள்கிறார்களோ அவரே மனிதரில் சிறந்தவராவார். கடனைத் திருப்பிச் செலுத்துவதிலும், அதை வசூலிப்பதிலும் யார் தரக்குறைவாக நடந்துகொள்கிறாரோ அவரே மனிதரில் தீயவராவார்!”என்று அறிவுறுத்திய நபிகளார், கடைசியாகச் சொன்னார்:

“கோபம் ஆதமின் சந்ததிகளின் இதயத்திலிருந்து தெறித்து விழும் தீப்பொறிக்கு ஒப்பானது. கோபத்தில் மனிதன் தன்னிலைய இழக்கும்போது, அவனது கண்கள் சிவந்துவிடுவதையும், மூக்கு சற்றே பெரிதாகிவிடுவதையும் நீங்கள் கவனித்திருக்கலாம். ஒருவரிடம் இத்தகைய அறிகுறிகளை நீங்கள் காண நேரிட்டால், அவரது கோபம் தணியும்வரை அவர் எங்கும் செல்லாதவாறு அவரைத் தடுத்து நிறுத்துங்கள்.”

மனிதனின் அகத்தன்மையையும், அவற்றிலிருந்து விடுபட்டு அவன் வெற்றிகொள்வது சம்பந்தமாகவும் நபிகளார் சொன்ன நீண்ட அறிவுரை இது. “கோபம் மனிதரிடையே மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகிறது. அதன் தொடர்ச்சியாகப் பேரழிவையும் உருவாக்குகிறது. அதனால்தான், தனது எதிரியை வீழ்த்துவதைவிட, கோபத்தை ஆட்கொள்ளும் மனிதரே மாவீரன்” என்கிறார் நபிகளார்.

நபிகளாரிடம் வந்த ஒருவர் தான் நினைவில் கொண்டு பின்பற்றத்தக்க விதத்தில் தனக்கு மிகச் சுருக்கமாக ஓர் அறிவுரை சொல்லும்படி கேட்கிறார். அதற்கு நபிகளார், “கோபப்படாதீர்கள்!” என்று வார்த்தையில் அறிவுரை வழங்குகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x