

கிசுகிசுவுக்கும் கவலைக்கும் தான் எத்தனை ஒற்றுமைகள் உள்ளன. இரண்டுமே அமைதியற்ற மனதின் வெளியீடுகள்தான். அமைதியற்ற மனதைப் பொறுத்தவரை வெவ்வேறு வெளிப்பாடுகள் மற்றும் செயல்களால் ஆக்கிரமிக்கப்பட்டே இருக்கும். அதிகரித்தபடி இருக்கும் தூண்டுதல்கள், மாறும் விருப்பங்கள் எனக் கிசுகிசு அமைதியற்ற மனதின் எல்லா அம்சங்களையும் கொண்டிருக்கும். தீவிரம் மற்றும் நேர்மையுணர்வுக்கு முற்றிலும் எதிரானது கிசுகிசு. மற்றவர்கள் குறித்து நல்லதாகவோ விஷமமாகவோ பேசுவதென்பது தன்னிடமிருந்து தப்பிப்பதுதான். அந்த தப்பித்தல் நிம்மதியின்மையால் ஏற்படுவதே.
தப்பித்தலின் அடிப்படை இயற்கையே நிம்மதியின்மைதான். மற்றவர்களின் விவகாரங்கள் மீதான கவனம்தான் பெரும்பாலான நபர்களை ஆக்கிரமித்திருக்கிறது. இந்த கவனம்தான் எண்ணற்ற பத்திரிகைகள் மற்றும் செய்தித்தாள்களையும் அதில் வரும் கிசுகிசு பத்திகள், கொலைச் செய்திகள், விவாகரத்துத் தகவல்களைத் தேடி வாசிக்கிறது. நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய நினைப்பது போன்றே, அவர்களைப் பற்றியும் தெரிந்துகொள்வதற்கு பதற்றமாக முயல்கிறோம். அதிகாரத்தின் மீதான வழிபாடு மற்றும் போலிப் பகட்டின் மோசமானதும் நுட்பமானதுமான வடிவங்கள் இங்கிருந்தே தோன்றுகின்றன.
அமைதியற்ற மனதின் வெளிப்பாடு
இப்படியாகத்தான், நாம் மேலதிகமாக வெளியரங்காக மாறி அகத்தில் வெற்றாக மாறிவிடுகிறோம். வெளியரங்காக நாம் ஆகும் நிலையில், கூடுதலான தூண்டுதல்களும் கவனச் சிதறல்களும் ஏற்படும். இதனால் கிளர்ச்சியடையும் மனம் அமைதியாக ஆவதேயில்லை. ஆழமான தேடுதலுக்கோ கண்டுபிடித்தலுக்கோ திறனற்றதாகவும் ஆகிவிடுகிறது. கிசுகிசு என்பது அமைதியற்ற மனதின் வெளிப்பாடு.
அமைதியற்ற மனதின் வெளிப்பாடுதான் கிசுகிசு. ஆனால் மவுனமாக இருப்பது மட்டுமே அமைதியான மனதைத் தெரிவிக்கும் அம்சம் அல்ல. ஏனெனில் துறத்தலோ விலக்குதலோ அமைதியை ஏற்படுத்தாது. அமைதி என்பது புரிந்துகொள்வதன் மூலமே உருவாகும். அதற்கு உடனடியான விழிப்புணர்வு தேவை. கவலையில்லாமல் இருக்கும்போது, நம்மில் பெரும்பாலானவர்கள் உயிர்ப்பற்றவர்களாக உணர்கிறோம். ஒரு பிரச்சினையோடு உழன்று கொண்டிருப்பதுதான் இருப்புக்கான அடையாளமாகப் பெரும்பாலானவர்களால் உணரப்படுகிறது.
கவலைப்படுவதால் பிரச்சினை தீர்ந்துவிடுமா?
ஒரு பிரச்சினையில்லாமல் நம்மால் வாழ்வைக் கற்பனையே செய்ய முடிவதில்லை; ஒரு பிரச்சினையால் நாம் எத்தனை அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கிறோமோ அத்தனை சுதாரிப்புடன் இருப்பதாக நாம் நினைத்துக்கொள்கிறோம். ஒரு பிரச்சினை குறித்து ஓயாமல் இருக்கும் பதற்றத்தை உருவாக்கும் சிந்தனையே மனத்தை மந்தமாகவும் ஆக்குகிறது. அத்துடன் நுண்ணுணர்வைக் குலைத்து நம்மைச் சோர்வடையவும் செய்கிறது.
ஒரு பிரச்சினையுடன் ஓயாத ஈடுபடுதல் ஏன் உருவாகிறது? கவலைப்படுவது ஒரு பிரச்சினையைத் தீர்த்துவிடுமா? அல்லது ஒரு பிரச்சினைக்கான விடை என்பது மனம் அமைதியாக இருக்கும்போது கிடைத்துவிடுமா?
ஆனால் பெரும்பாலான நபர்களுக்கு, அமைதியான மனமென்பது அச்சப்படக்கூடிய விஷயமாக இருக்கிறது; அவர்கள் அமைதியாக இருக்கப் பயப்படுகிறார்கள். அவர்கள் தங்களிடம் எதைப் பார்த்து பயப்படுகிறார்கள் என்றே தெரியவில்லை. அவர்களைப் பொறுத்தவரை வேதனைப்படுவது ஒரு தடுப்புமுறையாக இருக்கிறது. கண்டறிவதற்கு அச்சப்படும் மனமே தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் நிலையில் எப்போதும் வைத்துக்கொள்ளும். நிம்மதியின்மை என்பது அதன் பாதுகாப்புக் கவசமே. தொடர்ந்த விரிசல்களின் வழியாகவும் பழக்கம் வாயிலாகவும் சூழ்நிலைகளின் தாக்கம் காரணமாகவும் மனதின் பிரக்ஞை அடுக்குகள் தொடர்ந்து கொந்தளிப்பாகவும் நிம்மதியற்றதாகவும் ஆகிவிடுகின்றன.
நவீன வாழ்வும் இருப்பும் இந்த மேலோட்டமான சிதறலான உணர்வை ஊக்கப்படுத்துவதாக உள்ளன. அதுவும் சுயபாதுகாப்புக்கான இன்னொரு கருவி வடிவமாக உள்ளது. இதனால் புரிதல் தடுக்கப்படுகிறது. கவலையும் கிசுகிசுவைப் போலவே, தீவிரம் போன்ற தோற்றத்தைக் கொண்டதே. ஆனால் அதை நெருக்கமாகப் பார்க்கும்போது, அது வெறும் கவர்ச்சியிலிருந்தே எழுகிறது என்பதையும் நேர்மையுணர்விலிருந்து எழுவதில்லை என்பதையும் பார்க்க முடியும்.
கவர்ச்சி என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருப்பது; அதனால்தான் கவலைக்கான, கிசுகிசுவுக்கான பொருட்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. மனதின் அமைதியற்ற நிலை புரிந்துகொள்ளப்படும்போது கிசுகிசுவும் கவலையும் முடிவுக்கு வந்துவிடும்.
பரபரப்பிலிருந்து புரிதலை அடைய முடியாது. சுய அறிவிலிருந்தே புரிதல் வரும். ஊகமும் பரபரப்பைப் போலவே நிம்மதியின்மையின் அடையாளம் தான். நிம்மதியற்ற மனம், எத்தனை பேறுகளைப் பெற்றிருந்தாலும் புரிதலையும் சந்தோஷத்தையும் குலைத்துவிடவே செய்யும்.
தமிழில்: ஷங்கர்