Last Updated : 23 Jan, 2014 12:00 AM

 

Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM

ஆடி வந்த ஆயிரங்காளி

நதியில் ஆடி வந்தது அந்தப் பெட்டி. அதில் அருளை வாரி வழங்கும் வண்ணம் சாந்த சொரூபியாக இருந்தாள் ஆயிரங்காளி. அவள் வந்த கதை, தென்னாட்டில் வசிக்கும் கதை ஆகியவற்றைக் கோயிலின் தலபுராணம் தெரிவிக்கிறது.

பல ஆண்டுகளுக்கு முன் வடநாட்டு மன்னன் ஒருவன், மாதா காளி தேவிக்கு கோயிலொன்றை அமைத்து, தினமும் ஆயிரம் பொருட்களால் அர்ச்சனை செய்தான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவகை நிவேதனம் செய்ய வேண்டும். முதல் நாள் பழம். அதற்கு மறு நாள் இனிப்பு வகை என மாற்றி மாற்றி நிவேதனம் செய்ய வேண்டும். ஒரு நாள் வைத்த அதே பொருள் அடுத்த நாள் நிவேதனத்திற்குக் கூடாது. இப்படி தொடர்ந்து பூஜித்தான், அம்பிகை மனம் இரங்க பொது நலம் வேண்டினான் அம்மன்னன். இப்படியாக ஐந்து ஆண்டுகள் நியம நிஷ்டையுடன் வழிபட்டான் மன்னன். ஆறாம் ஆண்டின் முதல் நாள் பூஜை செய்ய அமர்ந்த மன்னனிடம் மந்திரி திடுக்கிடும் செய்தியொன்றைக் கூறினார். இது வரை விதவிதமான பொருட்களை நிவேதனம் செய்து விட்டோம். ஆனால் புதியதாக எதனை நிவேதனத்துக்கு வைப்பது என்று தெரியவில்லை என்றார்.தவறினால் தெய்வ குற்றம் வந்து விடுமே என்று மன்னரும் மக்களும் தவித்தனர். அப்போது ஆயிரம் பேர் கொண்ட கூட்டம் ஒன்று மன்னனை அணுகியது. அவர்களின் தலைவன் மன்னரிடம் தாங்கள் ஆயிரம் பேர் என்றும், தேவி காளியாக இருப்பதால் மனிதர்களை பிரசாதமாக அளிக்கலாம் என்றும் கூறினர். இதனைக் கேட்டு சிலிர்த்துப்போனான் மன்னன். பின்னர் ஆயிரம் பேரும் குளித்து முடித்து தயாராக வந்து இக்காளி அம்மன் முன் அமர்ந்தார்கள். அப்போது ஓர் அசரீரி எழுந்தது.

“அரசே நின் வேண்டுதலின்படி, நின் நாடு என்றும் செழித்து விளங்கும். எனக்கு மனப்பூர்வமாகக் தங்களை அர்ப்பணிக்க வந்தவர்களை நான் என் மக்களாகவே கருதுகிறேன். நீ பூஜிக்கும் என் திருவடிவை, உன் இறுதிகாலத்தில் ஒரு பேழையில் வைத்து ஆற்றில் விட்டுவிடு.” அசரீரியாக எழுந்ததும் அம்மன் வாக்குதான் என்பது அங்கிருந்தோருக்கு விளங்கியது.

நாடு செழிப்பாகவே இருந்ததால் மன நிறைவோடு ஆட்சி செய்தான் மன்னன். தன் வாழ்வு நிறைவடையும் காலத்தில் அம்மன் திருவடிவினை அழகான பேழை ஓன்றில் வைத்து ஆற்றில் விட்டான். அம்மனைச் சுமந்து கொண்டு தொட்டில் போல் அசைந்து ஆடியபடியே ஆற்றில் மிதந்தது பெட்டி. உள்ளே ஆனந்தமாக தியானத்தில் இருந்தாள் காளி. குறிப்பிட்ட ஓர் இடம் வந்ததும் தியானம் கலைந்து கண் விழித்தாள் தாய். தங்களையே நிவே தனமாக அர்ப்பணிக்க வந்த அந்த அற்புத மக்கள் இப்பகுதியில்தானே இருக்கிறார்கள் என அவர்களைக் காண விரும்புகிறாள் அன்னை. அவள் விருப்பம் புரிந்தது போல் அங்கேயே நின்றது பெட்டி. அன்று தன் முன் வந்து நின்றவர்களின் தலைவர் போல் இருந்த பெரியவரின் கனவில் தோன்றினாள் காளிதேவி. பெட்டிக்குள் தான் வந்தியிருப்பதைச் சொன்னாள். உரிய மரியாதைகளோடு அம்பிகையை அழைத்து வந்தார்கள். தன் மக்கள் என்று சொன்ன தாயை, தங்கள் வீட்டு பெண்ணாகவே பாவித்து சகல சீர் வசதிகளுடன் அழைத்துக்கொண்டு வந்தார்கள். பெட்டியைத் திறக்க முற் பட்டபோது, அசரீரி மீண்டும் ஒலித்தது.

“ஐந்து ஆண்டுகள் மன்னன் பூஜித்த பின் நீங்கள் என் முன் வந்ததால் அந்த நாளில் மட்டுமே இனி நான் வெளியில் வருவேன். ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நான் காட்சி அளித்தாலும் என் அருள் என்றென்றும் இங்கே நிலைத்திருக்கும். உங்கள் இனத்தவரே என்னைத் தொடர்ந்து பூஜிக்கட்டும். அதே சமயம் இங்கே வந்து என்னை யார் வழிப்படாலும் அவர்கள் வேண்டுவன யாவும் கிடைக்கும்” என்று கூறினாள்.

தங்கள் வீட்டுப் பெண்ணாகவே அன்னையை நினைக்கும் இந்த ஊர் பெண்கள் மட்டும் அன்னைக்கு ஆயிரம் பானைகளில் பொங்கலிடுகிறார்கள். பதிலுக்கு, தாய் வீட்டு சீதனம்போல் மங்களப்பொருட்களை கோயில் சார்பாக பெறுகிறார்கள்.

வடநாட்டு மன்னன் பூஜித்த இக் காளிக்கு பெட்டியில் இருந்த ஓலைச் சுவடியில் கண்ட செய்தியின்படி இன்றும் எதைப் படைத்தாலும் ஆயிரமாயிரமாக செய்கிறார்கள். வாழை பழம் என்றால் ஆயிரம், ஆப்பிள் என்றால் ஆயிரம், லட்டு என்றாலும் ஆயிரம்.

தினம் தினம் இப்படிச் செய்ய சாதாரண குடி மக்களால் இயலாது என உணர்ந்த அருள் காளி, ஊர் பெரியவரின் கனவில் தோன்றி ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை ஆயிரமாயிரமாய் நிவேத்தியம் செய்யப் பணித்து, அன்று மட்டுமே வெளி வரு கிறாள். இத்திருநாளில் ஐந்து லட்சம் மக்கள் கூடுகிறார்கள்.

இவள் குடிகொண்ட இடம் காரைக் காலில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள திருமலைராயன்பட்டினத்தில் இருக்கிறது. லட்சோப லட்சம் மக்களுக்கு அருளை நொடிக்கு நொடி வாரி வழங்கிக் கொண்டிருக்கிறாள் ஆயிரங்காளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x