

சுதாகுசலம் எனும் நாட்டில் அரங்கம் எனும் ஊரில் ஜினதத்தன் என்பவர் இருந்தார். அவ்வூருக்கு ஒருநாள் சருவகுப்தி பட்டாரகரெனும் சமணத் துறவி மழைக்காலத் தங்குதலுக்காக வந்தார்.
துறவிக்கு ஆகாரமளித்தல் புண்ணியமெனத் தினமும் ஜினதத்தன் ஆகாரம் அளித்து வந்தார். ஜினதத்தன் வசதியானவர் இல்லை. துறவி ஜினதத்தனின் வறுமை நீங்கச் சில மந்திரங்களைக் கூறி, அதை எப்படிப் பயன்படுத்த வேண்டுமெனக் கூறினார்.
ஒரு ஆலமரத்தில் ஊஞ்சல் ஒன்றைக் கட்டி அதன் கீழ் வேல், வாள் ஆகியவற்றின் கூர்நுனியை மேல்நோக்கியவாறு நட்டு வைக்க வேண்டும். பின் ஊஞ்சல் மேலேறி மந்திரத்தைச் சொல்லி சொல்லி ஊஞ்சலின் கயிற்றை ஒவ்வொன்றாக அறுக்க வேண்டும். இறுதிக் கயிறை அறுத்ததும் ஒரு தேவதை தோன்றி அவருக்கு வேண்டியதை நல்கும் என்றார்.
ஜினதத்தன் அவ்வாறே செய்து ஊஞ்சலில் ஏறி ஒரு கயிற்றை மந்திரம் சொல்லி அறுத்தான். உடனே ஊஞ்சல் ஒருபக்கமாக சாய கீழே பார்த்தார். கீழேயுள்ள கூராயுதங்களைக் கண்டு நடுங்கி ஊஞ்சலிலிருந்து இறங்கி விட்டார்.
இறங்கியவர் துறவி மீது நம்பிக்கை ஏற்பட, மீண்டும் ஊஞ்சலில் ஏறி மந்திரத்தைக் கூறி ஊஞ்சலின் கயிற்றை அறுக்க அது மறுபடி சாய, பயந்து கீழே இறங்கினார். துறவி மீது நம்பிக்கையும் உயிர் பயமும் மாறி மாறி வர, ஊஞ்சலில் ஏறுவதும் இறங்குவதுமாகத் தடுமாறிக் கொண்டு இருந்தார்.
இச்செயலைக் கவனித்துக்கொண்டிருந்த அஞ்சனசோரன் எனும் திருடன் ஜினதத்தனிடம் விவரம் கேட்டு அறிந்தான். சமண முனிவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை அறிந்திருந்த அவன், தன்னிடமிருந்த பெரும் பொருட்களை ஜினதத்தனிடம் தந்து மந்திரத்தைக் கற்றுக்கொண்டான்.
முனிவர் வாக்கில் நம்பிக்கைகொண்ட அஞ்சனசோரன் ஊஞ்சலைக் கட்டி கீழே கூரிய வாள்,வேல்களை அமைத்து ஊஞ்சலில் அமர்ந்து மந்திரங்களை கூறி அனைத்துக் கயிற்றையும் அறுத்தான். கடைசி கயிறு அறுந்து விழும் பொழுது தேவதை தோன்றி அவனைக் காத்தது, அனைத்துச் செல்வங்களையும் கொடுத்தது.
அஞ்சனசோரன் திருடன். ஆனால் சமணமுனிவர் வாக்கை நம்பினான். பலன் பெற்றான். திருட்டுத் தொழிலை விட்டான். ஜைன அறத்தைக் கேட்டு நற்காட்சி பெற்று, தவம் மேற்கொண்டு முக்தி அடைந்தான்.