வாழ்விலே நிம்மதி

வாழ்விலே நிம்மதி
Updated on
1 min read

அரசன் ஒருவன் ஞானியிடம், “என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை!” என்றான்.

“உன் கடமையை நீ சரியாகச் செய்கிறாயா?” என்று ஞானி கேட்டார்.

“என் நாட்டிற்குப் பகைவரால் போர் அபாயம் இல்லை. கள்வர் பயமும் இல்லை. முறையாக நீதி வழங்கப்படுகிறது . அதிக வரிகள் விதிப்பதில்லை. அதனால், நாட்டு மக்கள் மகிழ்ச்சியோடு வாழ்கிறார்கள். ஆனால் என் மனத்தில் மட்டும் அமைதி இல்லை. இந்த அரச பதவியில் எனக்கு நிம்மதி கிடைக்கவில்லை ” என்றான்.

“அப்படியானால் ஒன்று செய். உன் நாட்டை என்னிடம் கொடுத்துவிடு!” என்றார் ஞானி.

“எடுத்துக் கொள்ளுங்கள்” என்று உடனே சொன்னான் மன்னன்.

“நீ என்ன செய்வாய் ?” என்று கேட்டார் ஞானி.

“நான் எங்காவது போய் ஏதாவது வேலை செய்து பிழைத்துக்கொள்கிறேன்” என்றான் அரசன்.

“எங்கோ போய் தெரியாத வேலையை செய்வதைவிட என்னிடமே வேலை செய். உனக்குத் தெரிந்தது நாட்டை ஆட்சி செய்வது. அதையே செய். என் பிரதிநிதியாக மட்டும் நீ நாட்டை ஆண்டு வா. நான் பிறகு வந்து கணக்கு, வழக்குகளை பார்க்கிறேன் ” என்றார் ஞானி.

“சரி!”என்றான் மன்னன்.

ஒரு ஆண்டு கழிந்த பின் ஞானி அரசனைக் காண வந்தார். அவரை வரவேற்று உபசரித்த அரசன் நாட்டின் கணக்கு வழக்குகளை எல்லாம் மகிழ்ச்சியாக எடுத்துக் காட்டினான்.

“அது கிடக்கட்டும்” என்ற ஞானி, “நீ இப்போது எப்படி இருக்கிறாய்?” என்று கேட்டார்.

“நிம்மதியாக சந்தோஷமாக இருக்கிறேன்”

“முன்பு நீ செய்த பணிகளுக்கும், இப்போது செய்த பணிகளுக்கும் ஏதாவது வேறுபாடு உண்டா?”

“இல்லை!”

“அப்போது ஏன் மன அழுத்தத்துடன் இருந்தாய்? இப்போது எப்படி நிம்மதியாக இருக்கிறாய்?” அரசனுக்குக் காரணம் சொல்லத் தெரியவில்லை.

“அப்போது நீ இது என்னுடையது என்று எண்ணினாய். இப்போது இது எனதில்லை. நான் இங்கு வெறும் பிரதிநிதிதான் என்று எண்ணுகிறாய். அந்த மனம்தான் அனைத்திற்கும் அடிப்படையே. நான் என்ற எண்ணம் வரும் போது அத்தனை துயரங்களும் உன்னை சூழ்ந்துகொண்டு விடும். இந்த உலகம் எனதல்ல. இந்த உடல் எனதல்ல. எனக்கு அளிக்கப்பட்டது. இந்த உயிர் எனதல்ல. எனக்குக் கொடுக்கப்பட்டது என்று உணர்ந்தால் துன்பங்கள் அத்தனையும் ஓடிவிடும். இதே மனநிலையுடன் இந்த நாட்டை நீயே தொடர்ந்து ஆட்சி செய்!” என்று கூறி விடைபெற்றார் ஞானி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in