Last Updated : 20 Apr, 2017 10:38 AM

 

Published : 20 Apr 2017 10:38 AM
Last Updated : 20 Apr 2017 10:38 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 25: கற்ற கல்வி எனக்கு வீடுபேறு தருமோ

‘கல்லாத புல்லறிவில் கடைப்பட்ட நாயேனை’ என்று தம்மையே நொந்துகொள்கிறார் மணிவாசகர். ஒருவன் ஏதேனும் தவறு செய்தால், ‘படித்தவன் செய்கின்ற காரியமா இது?’ என்று பெரியவர்கள் கடிந்துகொள்வதைக் காண்கிறோம்; ஏனெனில், ‘படிப்பு’ என்பதே ‘அறத்தை’ உள்ளீடாகக் கொண்ட கல்வி; ’படித்தவன்’ அறவழியில் பொறுப்புடன் நடப்பான் என்ற எதிர்பார்ப்பினால் வந்த சொற்கள் அவை.

வாழ்வியல் அறங்களின் விளைநிலமே பள்ளிக் கல்வி

ஒரு நாட்டின் கல்விமுறை, அன்பையும், பண்பாட்டையும் உள்ளீடாகக் கொண்ட அறிவு, திறன்கள், மதிநுட்பம், ஆராய்ச்சி, தொழில் என்பவற்றில் ஒளிவீசும் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க வேண்டும். இந்த உள்ளீடுகள் இல்லாத கல்வி, சமூகப் பொறுப்பில்லாத தலைமுறையையே உருவாக்கும். ஒருவனை மனிதனாகப் பண்படுத்தும், அடிப்படை வாழ்வியல் அறங்களைக் கற்றுக்கொடுக்கும் விளைநிலமே பள்ளிக் கல்வி. ‘அன்பு’, ‘அறம்’ என்னும் விதைகளை விதைக்காமல், பண்பாடு என்னும் விளைச்சலை எதிர்பார்க்கிறோம்.

வறட்டு வணிகக்களங்களான கல்வி முறை!

இன்றைய கல்விமுறை எதைக் கற்றுக்கொடுக்கிறது? பத்தாண்டுகள் ஆங்கில மொழி, தாய்மொழி, கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல் இணைந்த சமூகவியல் கல்வி; இரண்டு ஆண்டுகள் கல்லூரிப் படிப்புக்குத் தேவையான மேல்நிலைக் கல்வி. இதில் தாய்மொழிக்குப் பதில் வேற்றுமொழி படிப்போர் பலர்.

பொருள் ஈட்டும் வேலைவாய்ப்பை மட்டுமே குறியாய்க் கொண்டது, தற்போதைய கல்விமுறை. இக்கட்டமைப்பில் அன்பு, அறம், பண்பாடு ஆகிய கூறுகள் இல்லாமையால் நெகிழ்வுத் தன்மையற்று இறுகிப்போய்விட்டது. பாடத்திட்டத்திலிருந்தே கேள்விகள்; அதற்கேற்ற பதில்கள், மதிப்பெண்கள், பட்டங்கள் என்று சுருங்கிவிட்ட கல்வி தரும் அறிவைக் ‘கல்லாத புல்லறிவு’ எனலாம்.

இதன் விளைவாகத் தேடல், புதியன கற்கும் ஆர்வம், படைப்பாற்றல், கேள்வி கேட்டல், கண்டுபிடிப்புகள் போன்றவை வற்றிப்போன, வறட்டு வணிகக் களங்களாகக் கல்வி நிறுவனங்கள் மாறிவிட்டன.

முற்றறிவு பெறவே நான் பிறந்தேன்

ஆணவம் என்னும் அறியாமையில் கிடந்த உயிருக்கு அறிவு தரவே, அறிவுப் பொறி, புலன்களுடன் கூடிய உடலைத் தந்தான் இறைவன்; உயிர் உடலில் வாழவும், அன்பைக் கற்றுக்கொள்ளவும், அனைத்து வளங்களுடன் கூடிய உலகை உருவாக்கித் தந்தான். உயிர் என்னும் மாணவன், மனிதஉடல் என்னும் தங்கும் விடுதிக்கு, உலகு என்னும் பல்கலைக்கழகத்தில் ‘தன்னை அறிதல்’ என்னும் நூறு ஆண்டுக் கால முற்றறிவுப் பட்டம் பெற வருகிறது.

உயிர் தன்னை அறியவும், பிற உயிர்கள்பால் அன்பு செலுத்தவும், தன் தலைவனை அறியவும், களம் அமைத்தவன் இறைவன். அத்தகைய பெருங்கருணையாளனின் திருவடிகளில் நன்றி செலுத்துதல் என்பதை உயிர் அறியாவிட்டால், கற்றதனால் ஒரு பயனுமில்லை என்பது தமிழ் மறை. (‘கற்றதனால் ஆய பயன் என்கொல்? வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்!’ – திருக்குறள்-2).

கல்லாத-புல்லறிவு நீக்கிய இறைவன்

இறைவனை அறியாத ‘கல்லாத புல்லறிவில்’ ஆழ்ந்து கடையவனாகி, நாய்போல் தாம் இழிநிலையடைந்திருந்ததாக வருந்தினார் மணிவாசகர்; திருப்பெருந்துறை இறைவன், மணிவாசகரைத் திருத்தி வல்லவனாக்கினான்; இறைவனின் திருவருள் பெற்றுப் பொலிந்திருக்கும்படி, அங்கிருந்த அடியவர் பலரும் காண, மணிவாசகருடைய உயிர்அறிவைப் பிடித்துள்ள பசுபாசமாம் அறியாமை (ஆணவம்), பழவினைகள்(கன்மம்), மாயை என்னும் மும்மலங்களையும் நீக்கியருளினான்; அத்திருப்பெருந்துறை இறைவனையே, ‘எல்லோரும் வந்து வணங்கும் ஆனந்தக்கூத்தனாக’த் தில்லையம்பலத்தில் கண்டதாகக் கூறுகிறார் மணிவாசகர்.

கல்லாத புல்லறிவில் கடைப்பட்ட நாயேனை!

வல்லாளனாய் வந்து, வனப்பு எய்தி இருக்கும் வண்ணம்!

பல்லோரும் காண எந்தன் பசு-பாசம் அறுத்தானை!

எல்லோரும் இறைஞ்சும் தில்லை |

அம்பலத்தே கண்டேனே!

( திருவாசகம்:31:4)

இங்கு வனப்பு எய்துதல் என்றது ‘சீவன் சிவமாதல்’ என்னும் திருவருள் ஆகும்; புல்லறிவுபெற்ற தம்மை அறிவுடையவனாக்கி அருளிய இறைவனின் கருணையை இவ்வாறு போற்றினார் மணிவாசகர்.

பொருளற்ற கல்வி என்னும் பல கடல்களிலிருந்தும் தாம் தப்பிப்பிழைத்ததை

‘கல்வி என்னும் பல் கடல் பிழைத்தும்

(திருவாசகம்:4:38')

என்று போற்றித் திருவகவலில் பதிவுசெய்துள்ளார்.

புல்லறிவு கற்றோரைவிடக் கல்லாதவர்களே நல்லவர்கள்!

புல்லறிவு கற்றோர், தாம் அறிவு பெற்றோம் எனத் தலைக்கனம் ஏறித் திரிவர். இவர்தம் குற்றத்தைத் தம் குற்றமாகப் பாவித்து, கற்றும் அறிவில்லாத தம்மைவிடக் கல்லாதவர்களே நல்லவர்கள் என்று பாடியுள்ளார் தாயுமானசுவாமிகள்.

“நூல்களைக் கற்றும், கற்றபடி நடக்கும் அறிவில்லாத என்விதியை என்னவென்று சொல்லுவேன்! விதிவழி நடக்கும் என் அறிவினை என்னவென்று சொல்லுவேன்! வீடுபேறு தரும் இறைஞான நீதியை நல்லவர்கள் சொன்னால், அதைவிடக் கர்மமே முக்கியம் என்று நிலைநாட்டுவேன்; கர்மத்தின் சிறப்பைப் பேசுவோரிடம் ஞானமே சிறப்புடையது என்பேன்! வடமொழி வல்லுநர்கள் கருத்தைத் தமிழ் மறைநூல்கள் கொண்டு மறுப்பேன்! நல்ல தமிழறிஞரைக் கண்டால், சில வடமொழி வசனங்களைக் கூறி மிரளச் செய்வேன்! இப்படி எவரையும் மிரளச்செய்யும் நான் கற்ற கல்வி எனக்கு வீடுபேறு தருமோ?” என்றார் தாயுமானசுவாமிகள்.

கல்லாத பேர்களே நல்லவர்கள்! நல்லவர்கள்! கற்றும் அறிவில்லாத என்

கர்மத்தை என் சொல்கேன்! மதியை என் சொல்லுகேன்! கைவல்ய ஞானநீதி

நல்லோர் உரைக்கிலோ, ‘கர்மம் முக்கியம்’ என்று நாட்டுவேன்! கர்மம் ஒருவன்

நாட்டினாலோ, பழைய ஞானம் முக்கியம் என்று நவிலுவேன்! வடமொழியிலே

வல்லான் ஒருத்தன் வரவும், திராவிடத்திலே வந்ததாக விவகரிப்பேன்!

வல்ல தமிழறிஞர் வரின், அங்ஙனே வடமொழியில் வசனங்கள் சிறிது புகல்வேன்!

வெல்லாமல் எவரையும் மருட்டிவிட, வகைவந்த வித்தை என் முத்தி தருமோ?

(தாயுமானசுவாமிகள்)

கற்றவர்கள் சிலர், இவ்வாறு தம் கல்வியறிவுத் திறமை குறித்து, தலைக்கனம் கொண்டு அலைவதை எக்காலத்தும் காணலாம். ‘சகல ஆகமப் பண்டிதர்’ என்பதில் தலைக்கனம்

கொண்டவர் சகலாகமப் பண்டிதர். மெய்கண்டார், சந்தானக் குரவர்கள் நால்வரில் முதல்வர்; சைவ சித்தாந்த சாத்திர நூல் சிவஞானபோதம் அருளியவர். தம் மழலைப் பருவத்திலே மாணவர்களுக்கு மெய்கண்டார் அருள் உபதேசம் செய்வதைக் கேள்விப்பட்டு மெய்கண்டாரின் வீட்டுக்குச் சென்றார் சகலாகமப் பண்டிதர்.

ஆணவத்தின் சொரூபம்

‘ஆணவம்’ குறித்து விளக்கிய மெய் கண்டாரிடம், ‘ஆணவத்தில் சொரூபம் யாது?’ என்று பண்டிதர் வினவ, தமது திருவிரலால் அவரையே சுட்டிக் காட்டினார் மெய்கண்டார். பிழை பொறுக்கத் திருவடியில் வீழ்ந்து வணங்கிய பண்டிதருக்கு சிவ தீட்சை தந்து, அருணந்தி சிவாச்சாரியார் எனும் ஞானப் பெயரிட்டு மெய்யு

ஞானமிலாப் பொல்லாக் கல்வி!

தாயுமானவர், மணிவாசகர் போன்ற குற்றமற்ற ஞானியர், குற்றமுள்ள மனிதர்களின் குறைகளைத் தம்முடையதாகக் கருதி, இறைவனிடம் அவர் நிலையில் நின்று, குறை நீக்க வேண்டிக்கொள்வர். இந்நெறி, ‘அறிவினால் ஆவது உண்டோ! பிறிதின் நோய் தன் நோய் போல் போற்றாக் கடை’ என்று தமிழ் மறை வகுத்த ஞானியர் நெறி. ஞானத்தைத் தராத கல்வியைப் ‘பொல்லாக் கல்வி’ என்றார் மணிவாசகர்; அப்பொல்லாக் கல்வியால், வீண் செருக்குற்று, அழுக்கடைந்த மனத்தைக் கொண்ட தமக்கு அடைக்கலம் தருமாறு வேண்டுகிறார்.

அதனால், கல்லாத புல்லறிவு நீங்கிச் சிவஞானம் பெறுவோம். விலங்குகளைத் தாக்காத, மனிதனை மட்டுமே தாக்கிச்சுழற்றி, உள்ளிழுத்துப் படுபாதாளத்தில் அழுத்தும் நோய் எது என்பதையும், அதிலிருந்து விடுவிக்க வழி கூறும் தேன் திருவாசகத்தையும் அடுத்த வாரம் சுவைப்போம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x