Last Updated : 04 Aug, 2016 10:19 AM

 

Published : 04 Aug 2016 10:19 AM
Last Updated : 04 Aug 2016 10:19 AM

சிறுவனை வணங்கிய ஸ்ரீராமானுஜர்

ஸ்ரீராமானுஜர் தம்முடைய மடத்தில் முற்பகலில் பாஷ்யம் முதலிய வேதாந்த விஷயமான காலட்சேப விரிவுரையாற்றுவார். மாலைப் பொழுதில் ஆழ்வார் பாசுரங்களுக்கு விளக்கங்கள் உரையாற்றுவார்.

ஒருசமயம் திருமங்கையாழ்வார் அருளிச் செய்தத் திருமொழிப் பாசுரங்களைக் காலட்சேபத்துக்கு விஷயமாகக் கொண்டிருந்தார். திருமங்கையாழ்வாரின் காழிச்சீராம விண்ணகரப் பாடல்களை விளக்க நேர்ந்தது. முதலில் பாசுரத்தை இனிய குரலில் இசைத்தார்.

பட்டரவேர் அகலல்குல் பவளச் செவ்வாய்ப்

பணைநெடுந்தோள் பிணைநெடுங்கண் பாலாமின்சொல்

மட்டவிழும் குழலிக்கா வானோர் காவில்

மரம் கொணர்ந்தான் அடியணைவீர்! அணில்கள்தாவ

நெட்டிலைய கருங்கமுகின் செங்காய்வீழ

நீள் பலவின் தாழ்சினையில் நெருங்குபீனத்

தெட்டபழம் சிதைந்து மதுச் சொரியும்

காழிச் சீராம விண்ணகரே சேர்மினீரே

என்ற சீர்காழியின் சோலை வளப்பத்தை ஆழ்வார் வர்ணிக்கும் திறனை விரித்துரைத்து விளக்கினா சோலைகளில் நீண்ட இலைகளை உடைய கரிய பாக்கு மரங்களின் செங்காய்கள் அணில்கள் தாவியதால் கட்டுக் குலைந்து கீழே விழுந்தன.

அவை பலாமரங்களில் பழுத்துத் தொங்கிய பழுத்த பலாப்பழங்களின் மேல் தாக்கியதால் மிகப் பருத்தவையும் தெட்டவையுமான பலாப்பழங்கள் சிதைந்து இனிய தேனைச் சொரிந்தன என்று விளக்கம் அளித்தார்.

பாடலில் வரும் ‘தெட்டபழம்’ என்பதற்குப் பொருள் கூறுவது சிரமப்படும்படியாயிற்று. ராமானுஜருக்கு ‘தெட்ட’ என்பது சீர்காழிப் பகுதியில் வழங்கும் பேச்சு வழக்காயிருக்கும் என்று மட்டும் புரிந்தது.

பின்பொரு சமயம் ராமானுஜர் திவ்யதேச யாத்திரை மேற்கொண்டபோது காழிச்சீராம விண்ணகரத்தை அடைந்தார். அவ்வூரை நெருங்கும்போது ஒரு சோலையில் நாவல் மரம் காய்த்துப் பழுத்துக் குலுங்கியதைக் கண்டார். நாவல் மரத்தின் கிளையில் அமர்ந்துகொண்டிருந்த ஒரு பையன் கிளைகளை அசைக்க, கீழே உதிர்ந்த நாவற்பழங்களைச் சிறுவர்கள் எடுத்து மணலை ஊதிவிட்டுத் தின்றனர்.

அப்போது அத்திரளில் ஒரு சிறுவன் மரத்தின் மீதமர்ந்த பையனைப் பார்த்து, “அண்ணே! தெட்ட பழமாகப் பார்த்துப் பறித்துப் போடு” என்று கூவினான்.

அவன் வார்த்தைகளைக் கேட்ட ராமானுஜர் அந்தச் சிறு பையனை அழைத்து ‘தெட்டபழம்’ என்றால் என்ன? என்று வினவினார். உடனே அவன் “ஐயா மிகவும் கனிந்த பழம்” என்று சொன்னான். உடனே ராமானுஜர் அந்தச் சிறுவனை வணங்கினார். ஆழ்வார் அங்கு வழங்கும் பிரதேச பாஷையில் அருளிச் செய்திருப்பதை உணர்ந்து வியந்தார். மத் காஞ்சி சுவாமிகள் எழுதிய திவ்யார்த்த தீபிகையுரையை ஆதாரமாகக் கொண்டு இது இங்கு விளக்கப்பட்டது.

திருப்பாவை ஜீயரின் பிட்சை

திருவரங்கத்தில் வடக்கு உத்தரவீதி சேரன் மடத்தில் ராமானுஜர் வாழ்ந்துகொண்டிருந்த ஆரம்ப காலத்தில், அவர் தினந்தோறும் மாதுகரம் என்னும் பிட்சை எடுத்தே நிவேதனம் செய்து உண்டுவந்தார். சந்நியாசிகள் பிட்சை யாசிக்க ஏழு இல்லங்களுக்குச் செல்வார்கள். பிட்சை இடுபவர்கள் அக்னி ஹோத்ரிகளான அந்தணர்களின் மனைவிகளே.

அவ்வாறு பிட்சார்த்தியாகச் செல்லும் போது, உபநிஷத் வாக்கியங்களை உச்சரித்துக்கொண்டே செல்வார்கள். ராமானுஜர் அப்படியல்லாமல் திருப்பாவைப் பாசுரங்களையே இனிய குரலில் உரத்து ஓதிக்கொண்டே சென்றார்.

அதைப் பார்த்த சிறுவர்கள் அவரை ‘திருப்பாவை ஜீயர்’ என்று அழைத்தனர். ஒருநாள் ராமானுஜர் திருப்பாவை அனுசந்தானத்துடன் பிட்சைக்குப் புறப்பட்டார்.

அப்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த சில சிறுவர்கள் பெரிய பெருமாளின் சயனத் திருக்கோலத்தைக் கோடுகளால் கீறி வரைந்து மணல் குவியல்களால் திருமதில்கள் மண்டபங்களைக் கட்டி, கோயிலில் நடைபெற்றுவரும் வழிபாட்டு முறைகளை அபிநயித்துக்கொண்டிருந்தனர்.

அர்ச்சகர், பரிசாரகர், அரையர், விண்ணப்பம் செய்பவர்களாகச் சிறுவர்களே நடித்துக்கொண்டிருந்தனர். மணலை ஈரப்படுத்திக் கொட்டாங்கச்சியில் எடுத்து, பெருமாள், தாயார்களுக்கு அமுது செய்விப்பதுபோல் காட்டி அர்ச்சகர்கள் அழைப்பது போன்றே “அருளப்பாடு, திருப்பாவை ஜீயர்” என்று கூவினார்கள்.

இதையெல்லாம் அருகில் நின்றுகொண்டே பார்த்துக் கொண்டிருந்த ராமானுஜர் உண்மையாகவே அங்கே பெருமாள் எழுந்தருளியிருப்பதாகவே நினைத்தார். சிறுவர்கள் கோஷ்டியில் தாமும் சேர்ந்துகொள்ள விரும்பினார்.

உடனே திரிதண்டத்துடன் கீழே சாஷ்டாங்கமாக விழுந்து எழுந்திருந்தார். ஒரு சிறுவன் விநியோகித்த மணல் பிரசாதத்தை பிட்சையாக ஏற்றுக்கொண்டு அவர்கள் கோஷ்டியில் தாமும் ஓர் அங்கமாக மாறினார்.

தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே

தமர் உகந்தது எப்பேர்மற்று அப்பேர்தமருகந்து

எவ்வண்ணம் சிந்தித்து இமையாதிருப்பரே

அவ்வண்ணம் ஆழியான் ஆம்

என்ற பொய்கையாழ்வாரின் முதல்திருவந்தாதியின் நாற்பத்திநான்காவது பாசுரத்தின் விளக்கம் அங்கு நிகழ்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x