Published : 04 Jan 2017 02:27 PM
Last Updated : 04 Jan 2017 02:27 PM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 11: கரி உரி போர்த்த கடவுள்

கஜாசுரன் என்பவன் பிரம்மனை நோக்கித் தவம் இருந்தான். தவத்தை மெச்சிய பிரம்மனும் அவன் முன் தோன்றி வேண்டிய வரங்களை வழங்கிவிட்டு, சிவபெருமானிடம் மட்டும் ‘உன் வேலையைக் காட்டாதே அது எனது வரங்களின் அழிவுக்கும், பின் உனது அழிவுக்கும் வழி வகுத்துவிடும்’ என்று கூறி மறைந்தார். கை நிறைய பணம் கிடத்தவுடன் செலவு செய்ய ஆரம்பித்து விடுவதுபோல், வரங்கள் கிடைத்தவுடன் வதைக்க ஆரம்பித்தான் கஜாசுரன். தேவர்கள் அழுது புலம்பினார்கள். அவனைக் கண்டால் நடுங்கினார்கள்.

முனிவர்களோ தங்கள் தவமெல்லாம், அவன்முன் பலிக்காமல் போவதைக்கண்டு பதைபதைத்தார்கள். முடிவில் சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்தபோது, விரட்டிச் சென்ற கஜாசுரன் கடன் கொடுத்தவனைக் கண்டுவிட்ட கடனாளிபோல் திகைத்தான். பிரம்மன் சொன்னது பொறிதட்டியது. விலகி ஓடிவிடப் பார்த்தவனை மடக்கிப் பிடித்தார் பெம்மான். தோலை உரித்துப் போர்த்துக்கொண்டு தாண்டவமாடினார். அ-கோரமாய் நின்றார் எம்பெருமான். அழகாய் சிரித்தார். தேவர்களும் முனிவர்களும் ஆரவாரித்தனர் என ஒரு பக்கம் கூறப்பட்டாலும் இந்தக் கதை அதிகம் பொருத்தமில்லாதது. இந்த கஜசம்ஹாரத்திற்கு இன்னுமொரு விதமாகவும் விளக்கம் இருக்கிறது. அதுவே பொருத்தமாக இருக்கும் எனவும் தோன்றுகிறது.

தாருகா வனத்தில் இருந்த தவசிகள் பலர் இறைவன் என்று ஒருவருமில்லை, சிவனுமில்லை, சக்தியுமில்லை; நித்ய கர்மங்களை முறையாகச் செய்வதும், உண்பதும், உறங்குவதும் போதுமென்று இருந்தபோது இவர்களுக்கு, புத்தி புகட்ட வேண்டும் என்று பெருமான் ஆளை மயக்கும் அழகோடும், பெருமாள் கிறங்கவைக்கும் மோஹினியாகவும் வந்து அவரைக் கண்ட ரிஷிபத்தினிகள் மயங்க இவரோ, ரிஷிகளை நிலைகுலையச் செய்தார்.

நெருப்பு பாம்பு புலி

இந்த மாயவலைக்குள் விழாத சில முனிவர்கள் ஓடிச் சென்று ‘ஆபிசார ஹோமம்’’ என்று ஒன்றை ஆரம்பித்து, துர்தேவதைகளை வசப்படுத்திக் கட்டுக்குள் கொண்டுவந்து - சிவபெருமான் மீது ஏவுகிறார்கள். நெருப்பு வருகிறது, பிடித்து வைத்துக்கொள்கிறார். மான் ஒன்று கொம்பைக் காட்டியபடி துள்ளி வருகிறது; இடுக்கி வைத்துக் கொள்கிறார். முயலகன் வரக் காலின் கீழ் அமுக்கிக் கொள்கிறார். பாம்பு போதாதென புதிதாக விட, அதையும் பிடித்து வைத்துக் கொள்கிறார். சூலம், மழு என, வர வர ஏந்திக் கொள்கிறார்.

3கொடூரப் புலி ஒன்று பாய்ந்து வர அதை ஒரே தட்டில் வீழ்த்தி, தோலை உரித்து இடையில் கட்டிக் கொள்கிறார். கடைசியாக இந்த கஜாசுரன் வருகிறான். இவனுக்கும், சிவனுக்கும் ஏதோ கணக்கிருக்கும் போல் இருக்கிறது; மற்றவற்றின் கதியைப் பார்த்த இவன் மெல்ல நழுவி மறைந்து போகிறான். இங்கே தவம் செய்யவோ, வரம் பெறவோ நேரமெல்லாம் இல்லை. அவன் இந்திரலோகத்தை ஆள நினைத்து அழிக்க ஆரம்பிக்கிறான். வரவழைத்த முனிவர்களையே வதைக்கிறான். உண்டு, உறங்கி எழுந்து, நடந்து வாழ்க்கை நடத்திய முனிவர்களுக்கு இப்போது சற்று உறைக்கிறது. சரிதான், நமக்கு மேல் ஒரு சக்தி இருக்கத்தான் செய்கிறது; அவரை வணங்கிச் சரணடைவோம் என்று பிக்ஷாடன மூர்த்தியை மனமுருகி வேண்டினார்கள்.

இப்போது அவர்கள் மனதில் கோபமில்லை, பொறாமையில்லை மோஹினியை எண்ணிக் காமமில்லை. அவர்கள் வேண்டியழைத்ததெல்லாம் அந்தப் பொன்னார் மேனியனைத்தான்.

மிரண்டு போன கஜாசுரன்

மறைந்த பெம்மான் மீண்டும் வெளிப்பட்டார். கஜாசுரன் மிரண்டுபோய் நின்றான். பெருமாளின் கண்களில் இருந்த கருணையே அவனைப் பெரிதும் பயமுறுத்தியது. கஜாசுரனைப் பிடித்தார், தோலை உரித்துப் போர்த்துக் கொண்டார். சிதம்பர ரகசியம் பார்ப்பது போன்ற அரிய காட்சியைக் காட்டியருளினார். இறைச்சியோடு ஒட்டி இருந்த சிவப்புப் பகுதி வெளியேயும், உள்ளே கரிய நிறத்தோலும், சற்றே விலக்கினால் பொன்னிற மேனியும் மின்னி மின்னி மறைந்தது. சிதம்பர ரகசியம் பார்த்தோருக்குத் தெரியும், கறுப்புத் துணியை விலக்கினால் அதன் உள்பக்கம் சிவப்பாய் இருக்கும். உள்ளே தங்க வில்வம் மினுக்கும்.

ஆஹா ஆஹா என எல்லையில்லா, புளகாங்கிதத்தோடும், களிப்போடும் குரல் எழுப்பி, முனிவர்கள், தேவர்களெல்லாம் கூத்தாட, கூத்துக்கெல்லாம் பெருங்கூத்தாய் துள்ளி ஆடி, தோலை விரித்தும், போர்த்தும், விதவிதமாய் ஆடி வியக்க வைத்தார். கடைசியில் இடது காலை மடித்து உள்ளங்கால் காட்டி முத்தாய்ப்பாய் ஒரு அபிநயம் பிடித்து, வலது காலை கஜாசுரன் தலையில் ஊன்றி நின்றார். உள்ளங்காலில் ஏகப்பட்ட விஷயம் உள்ளதாக சாத்திரங்கள் கூறுகின்றன. அதனால்தான் மானுடராகிய எம்மையே, காலால் காலைத் தேய்த்துக் கழுவக்கூடாது என்று காலகாலமாய் கூறி வகுகிறார்கள்.

மெய்மறந்து நின்ற திருக்கூட்டம்

கருமுகில் கூட்டம் நடுவே, தெரிந்தும், மறைந்தும் விளையாடும் பொன் நிலவு போல அந்தப் பொன்னிலவைச் சூடிய பெம்மான், மின்னி மறைந்து விளையாடி முடிவில் ஒளிப்பிழம்பாய் காட்சி கொடுத்தார். அந்த பொன்னெழில் ஜோதியின் உள்ளங்கால் தரிசனம் கண்டு, மெய் மறந்துபோய் நின்றது அந்தத் திருக்கூட்டம். பூதகணங்கள், வாத்தியங்கள் முழங்க, அரஹர, சிவ, சிவ என்ற கோஷம் வான்வரை எட்டியது. தேவர்கள் பொழிந்த பூமாரி மழையெனக் கொட்டியது.

இந்த விளக்கமே பொருத்தமாக இருக்கும். ஏனெனில் வழுவூரிலும் சிதம்பரத்திலும் உள்ள பிக்‌ஷாடனரின் தலை அலங்காரமே, அப்படியே இந்த கஜசம்ஹார மூர்த்தியின் அலங்காரமாகவும் உள்ளது. ஊன்றிக் கவனிக்கும்போது காட்சிகள் கண் முன்னே ஓடுகின்றன.

இங்கே நீங்கள் பார்க்கும் இந்த ஒரே கல்லினால் ஆன அற்புத சிற்பம் பேரூர், பட்டீஸ்வரர் கோயிலில் உள்ளது. பார்க்கப் பார்க்கப் புதுப்புதுக் கதைகளை அது கூறிக்கொண்டே இருக்கிறது. நகர்ந்து செல்லவிடாமல் இழுத்துப் பிடிக்கிறது. என்றாவது ஒருநாள் பாத்து விடுங்கள் அன்பர்களே, அது தரும் ஆனந்தம் அளவிடமுடியாத ஒன்று.

காட்டப்பட்டுள்ள இன்னுமொன்று, அட்ட வீரட்டத்தலங்களில் ஒன்றான வழுவூரில் உளள ஐம்பொன் விக்கிரகம் ஆகும். எல்லை இல்லாத அழகோடு காணப்படும் இந்த விக்கிரகம், ஈடு இணையில்லாத எழில் பொருந்தியது. உலகில் வேறெங்கும் காண முடியாத இந்த அழகு நமது மண்ணில் இருக்கிறது. இது வார்ப்புக்கலையின் உச்சம். இந்த விக்கிரகம் தினமும் ஆராதிக்கப்படும் ஒன்று.

ஆனாலும் கஜசம்ஹாரம் நடந்ததான இடத்தில் உள்ள கோவிலில் காணப்படும் திருஉருவம் இது. முகத்தின் அழகையும், பாத அழகையும் பாருங்கள். தெய்வீகமான பாதங்களெல்லாம் உள்ளங்கால் குழிந்து இருக்கும். தட்டையாக இருக்கவே இருக்காது. முழு அழகும் இன்னுமோர் படத்தில் காட்டப்பட்டு உள்ளது. பிக்ஷாடன மூர்த்தியாக வந்து, பின் கஜாசுரனை அழித்த வரலாற்றைக் காட்டும் வண்ணம், உற்சவம் கூட இன்றும் இங்கு நடப்பதாய் அறிய வருகிறது. வாழ்நாளில் ஒரு தடவையாவது பார்த்து விடுங்கள். இந்த விக்கிரகத்தை வார்த்துக் கொடுத்த அந்தச் சிற்பிகளை மனக்கண்ணில் தியானித்து பாரத நாட்டு மக்களின் சார்பாக நெடுஞ்சான் கிடையாக வீழ்ந்து வணங்கி ஆனந்தக் கண்ணீரைக் காணிக்கையாக்கி மகிழ்கிறேன்.

மீண்டும் அடுத்தவாரம்...


ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x