இயற்கையைப் போற்றிய புத்தர்

இயற்கையைப் போற்றிய புத்தர்
Updated on
2 min read

புத்தரின் போதனைகள் இந்த நவீன காலத்துக்கும் மிகவும் பொருத்தமாக இருப்பது ஆச்சரியம்தான். இதைப் புத்தரே எதிர்பார்த்திருக்க மாட்டார். ஏனென்றால், அவர் வாழ்ந்த காலத்தில் தற்போதைய எந்தச் சிந்தனைகளும் இருப்பதற்கான சூழ்நிலைகள் இருந்திருக்கவில்லை.

உலகில் இன்றைக்குப் பெரும் பாலோர் தெரியாமலேயே பின்பற்றிக் கொண்டிருப்பது நுகர்வுக் கலாசாரம். எல்லையில்லாத அளவுக்குப் பொருட் களை வாங்கி, பயன்படுத்தத் துடிக்கும் பேராசையை இது குறிக்கிறது. தன்னால் வாங்க இயலாதவற்றையும் வாங்க முயற்சிப்பது, அடுத்தவரைவிட அதிகப் பொருட்களை அடைய நினைப்பதுதான் நவீன மனிதனின் அன்றாடக் கனவாக இருக்கிறது. இது ஆசை, பேராசை ஆகிய எல்லைகளையும் மீறியதாக இருக்கிறது.

மனிதனின் இந்தக் கட்டுப்பாடில்லாத பேராசை பயங்கரமான பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது. உலகில் உள்ள இயற்கை மூலப்பொருட்கள் அனைத்தும் தீர்ந்துபோகக் கூடியவை. மனிதனின் எல்லையற்ற ஆசை, கிடைக்கும் இயற்கை மூலப்பொருட்களைத் தாண்டிச் சென்று பல காலமாகிவிட்டது. இன்றைக்கு அது தள்ளாட்ட நிலையில் இருக்கிறது. எதிர்காலத்தில் ஒரு நாள் இயற்கை வளம் முழுமையாகக் குன்றி, மனிதன் வாழவே இயலாத சூழ்நிலை உருவாகி விடும். அந்த ஆபத்தை எதிர்காலவியல் நமக்கு உணர்த்தியிருக்கிறது.

இந்த அபாய அறிவிப்பு நிச்சயம் புத்தர் காலத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், புத்தரின் போதனைகள் இன்றைய நுகர்வுக் கலாசாரம் ஏற்படுத்தும் விளைவுகளுக்குத் தீர்வாக அமைகின்றன. புத்தர் காட்டிய வழி, முற்றிலும் பற்றற்ற தன்மைக்கும் உலக ஆசைகளுக்கும் இடைப்பட்ட வழி. தன் சொந்த வாழ்க்கையில் இளவரசர் என்ற பகட்டான வாழ்க்கையையும், கடும் சந்நியாச வாழ்க்கை ஆகிய இரண்டையும் விடுத்து, இடைப்பட்ட மிதமான வாழ்க்கையையே புத்தர் மேற்கொண்டார்.

புத்தரின் இந்த இடைப்பட்ட வழி, இன்றைய நுகர்வுக் கலாசாரம் ஏற்படுத்தி வரும் தீமைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். இயற்கையோடு இயைந்த வாழ்க்கையை மேற்கொள்ளப் புத்தர் தன் சீடர்களைப் பணித்தார். பல வகைகளில் இதை அவர் வலியுறுத்தினார். எடுத்துக்காட்டாக, மத குருக்கள் எல்லாக் காலத்திலும் உபதேசிக்கச் செல்வது வழக்கம்.

ஆனால், புத்தரோ மழைக்காலத்தில் தன் சீடர்கள் உபதேசிக்கச் செல்வதைத் தடுத்து, அவரவர் இருப்பிடத்திலேயே இருக்க வேண்டும் என்பதை ஒரு விதிமுறையாகவே வலியுறுத்தினார். ஏனென்றால், மழைக்காலத்தில் பூமி மீண்டும் பசுமையடைந்து தாவரங்கள் புதிதாகத் துளிர்த்து வெளிவர ஆரம்பிக்கும். அப்போது துறவிகள் அவற்றை மிதித்து நாசமாக்கி, வளர்ச்சியைத் தடுத்துவிடக் கூடாதே.

புத்தரின் போதனைகளில் இயற்கை அழகு பல இடங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மலைப்பகுதிகளில் வாழும் மக்கள் கீழே உள்ள சமவெளிகளைத் தூரத்திலிருந்து கீழே பார்ப்பதைப் போல, அறிவுக்கூர்மை உடையவர்கள் உலக வாழ்க்கையின் அவலங்களைப் பற்றற்று, தூரத்திலிருந்து பார்க்கப் பழகிக்கொள்ள வேண்டும் என்று அற்புதமாக ஒப்பிட்டுக் கூறியிருக்கிறார். இயற்கை மீதான அவருடைய இந்தப் பற்று, துறவியாகிப் பல இடங்களுக்குச் சென்று அனுபவம் பெற்ற பிறகு வலிமையடைந்திருக்கலாம்.

தன் வாழ்நாள் முழுவதும் பூங்காக்கள், தோப்புகளிலேயே அவர் வாழ்ந்திருக்கிறார். ராஜகிரஹத்தில் அணிலுக்கு உணவு ஊட்டப்பட்ட இடத்திலும், வர்த்தகர் ஆனந்தப் பிண்டிகா நன்கொடை வழங்கிய சிரஸ்வதி நகர ஜெட்டா தோப்பிலும், சிரஸ்வதி நகரக் கிழக்குப் பூங்காவில் இருந்த மிக்காரா வீட்டிலும், வைஷாலியில் இருந்த பெரிய தோப்பிலும்தான் புத்தர் மாறிமாறி வாழ்ந்திருக்கிறார்.

ஒரு பக்கம் மனிதனின் கட்டுப்பாடற்ற பேராசையை அவர் கடுமையாகக் கண்டித்தார். அதேநேரம் போலியாக இருப்பது, முழு மனதைச் செலுத்தாமல் இருப்பது, அனைத்தையும் துறந்துவிடுவது போன்றவையும் புனித வாழ்க்கை அல்ல என்று அவர் வலியுறுத்தினார். மனிதன் தன் தேவைகளை, இயற்கையின் விதிமுறைகளுக்கு ஏற்பப் பூர்த்தி செய்துகொள்வதையே புத்தர் எப்போதும் வலியுறுத்தினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in