சூரியனின் பூஜை: மார்ச் 20 - சூரிய ஒளியில் மூழ்கும் திருவேட்டீஸ்வரர

சூரியனின் பூஜை: மார்ச் 20 - சூரிய ஒளியில் மூழ்கும் திருவேட்டீஸ்வரர
Updated on
2 min read

சூரியன் தன் கிரணங்கள் மூலம் ஈசனை அபிஷேகம் செய்யும் காட்சி திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் நிகழ்கிறது. மார்ச் 20ம் தேதி காலையில் பக்தர்கள் காணலாம் என்று கூறப்படுகிறது. இத்திருக்கோயிலில் மார்ச் 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதி வரை, பீடத்தில் தொடங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு நாளும் மேலேறி மூலவர் மீது தொடும் சூரிய கிரணங்கள் அதிகரித்துக் கொண்டே போய், 20-ம் தேதி முதல் பாண லிங்கம் வரை முழுமையாக படர்ந்து, சூரிய அபிஷேகமாக காட்சி அளிக்கும்.

இதனைத் தரிசித்தால் நவகிரக தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். அண்மையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தை அடுத்து மண்டல பூஜைகள் ஏப்ரல் 22-ம் தேதி வரை உச்சிகால பூஜையாக தொடர்ந்து இத்திருக்கோயிலில் நடைபெறும்.

லிங்கமூர்த்தியின் தலையில் ஒரு பிளவு

மலர் மங்கை இலக்குமி, பெருமாளை மணம் புரிய இங்கு இறைவனை நோக்கித் தவம் புரிந்ததால் இத்தலத்திற்கு ‘திருவேட்டகம்’ என்ற திருநாமம். மற்ற தலங்களில் தலப்பெயரே சுவாமிக்கு வழங்கப்பட்டாலும், வேறு திருநாமம் இருக்கும். ஆனால், இங்கு “திருவேட்டீஸ்வரர்” என்ற திருநாமமின்றி வேறு கிடையாது. லிங்க மூர்த்தியின் முடியின் மேற்புறம் ஒரு பிளவு காணப்படுகிறது.

திருக்கோயில் நெடிது உயர்ந்த ஐந்து நிலைகளுடன் சிவ தத்துவங்களை உணர்த்தும் அழகிய சுதைச் சிற்பங்களுடன் காட்சி அளிக்கிறது. கோபுர தரிசனம் கோடி பாப விமோசனம் என்ற மூதுரைக்கேற்ப ராஜகோபுரத்தை நிமிர்ந்து வணங்கி நாம் உள்ளே செல்லலாம். திருக்கோயிலின் உள்ளே முதலில் நம் கண்ணில் தெரிவது கொடிமரம்; இக்கோயிலில் வல்லப விநாயகர், அதிகார நந்தி, காசி வி்ஸ்வநாதர், ஆறுமுகர், நவக்கிரஹ, செண்பகாம்பிகை, சோமாஸ்கந்தர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, துர்க்கை, பைரவர், நடராஜர் ஆகியோரின் சன்னிதிகளோடு கோமடமும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சித்திரை பிரம்மோற்சவம்

சித்திரை மாதம் பத்து நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவத்தில், 3-ம் நாள் நடக்கும் அதிகார நந்தியும், 5-ம் நாள் நடக்கும் ரிஷப வாகன சேவையும், 8-ம் நாள் புண்ணியகோடி விமானம் மற்றும் 63 நாயன்மார் உற்சவமும், பத்தாம் நாள் நடக்கும் திருக்கல்யாணமும் வெகு விமரிசையாக நடைபெறுகிறது.

ஸ்படிக லிங்க பூஜை

இத்திருக்கோயிலில் தினமும் நடக்கும் முக்கியமானதொரு பூஜை ஸ்படிக லிங்க பூஜையாகும். இதனுடன் சொர்ணவேல், மஹாமேரு, மஹாகணபதி பூஜை, கோமாதா பூஜையும் சேர்ந்து நடைபெறுகிறது. இதனைக் கண்ணுறுவோர் வாழ்வில் உயர்நிலையையும், ஈசனின் பரிபூர்ண அருளையும் பெறுவர் என்பது நம்பிக்கை.

ராகு, கேது பரிகார பூஜை

இத்தலம் திருக்காளத்திக்கு ஒப்பானது என்ற அசரீரி வாக்கிற்கு ஏற்ப, இத்தலத்திலும் காளத்தியில் செய்வது போன்றே ஜாதகத்தில் இராகு – கேதுவினால் ஏற்படும் தோஷம் நீங்குவதாக நம்பிக்கை உள்ளதால் சிறப்புப் பரிகார பூஜை தினமும் செய்யப்படுகிறது. மகா மண்டபத்தின் மேற்கூரையில் ராகு, கேது, சந்திர, சூரியர்களுடன் புடைப்புச் சிற்பங்களாக உள்ளதே இதற்கு சாட்சி.

பாடல் சிறப்பு

சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர் இத்தலத்தையும், இத் தலத்து உறையும் இறைவன், இறைவியையும் குறித்து ஒரு கீர்த்தனை இயற்றியுள்ளார். ஸ்ரீமுத்துஸ்வாமி தீக்ஷிதர் இயற்றிய இந்த கீர்த்தனை கமகக்ரியா ராகத்திலும், ரூபக தாளத்திலும் அமைந்துள்ளது சிறப்பு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in