இளைஞர் தினம்: ஜனவரி 12 - விவேகானந்தரைக் கொண்டாட ஒரு நாள்

இளைஞர் தினம்: ஜனவரி 12 - விவேகானந்தரைக் கொண்டாட ஒரு நாள்
Updated on
2 min read

அமெரிக்காவில் நடைபெற்ற சர்வசமய மாநாட்டில் இந்து மதத்தின் பிரதிநிதியாக பேசச் சென்ற சுவாமி விவேகானந்தரின் பேச்சு ஏற்படுத்திய அதிர்வுகள் இன்னும் இந்த பூமிப்பந்தினை விட்டு அகலவில்லை.

இந்தியா ஏழை நாடு, கல்வியறிவில்லாதவர்கள் நிறைந்த நாடு, இவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும் என உலகம் நினைத்துக்கொண்டிருந்த காலம் அது. கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற பிரகடனத்தின் பின்புலமோ இந்தியர்களைத் தரைமட்டமாக்க வேண்டும் என்பதுதான். ஆனால், இந்த உலகம்தான் இந்தியர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்ற புதிய பார்வையை உருவாக்கிய இந்த மனிதரின் குரல் இன்றும் உரக்க ஒலித்துக்கொண்டிருக்கிறது!

இன்னும் ஒலிக்கும் குரல்

ஒவ்வொரு மதத்தினரும் எங்கள் மதம்தான் உயர்ந்தது என பேசியபோது உங்கள் அனைவரது மதத்தினையும் ஏற்றுக்கொள்ளும் ஒரு மதத்திலிருந்து நான் வருகிறேன் எனப் பேசி, அனைவரையும் ஏற்றுக்கொள்ளும் இந்தியப் பாரம்பரியத்தை உலகுக்குப் பறைசாற்றிய அன்றைய அவரது பேச்சின் குரல் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது!

இந்தியாவில் இருக்கும் வழக்கங்கள் அனைத்தும் மூடநம்பிக்கை, மேற்கத்திய நாடுகளின் பழக்க வழக்கங்களே நவநாகரிகமானது என நம் இந்தியர்களே நம் பாரம்பரியத்தைப் புறக்கணித்த அந்நாளில் ஆன்மிகத்தை அறிவியல்பூர்வமாக விளக்கிய அந்த இளைஞனின் குரல் இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது!

பன்னெடுங்காலமாக ரிஷிகளும் முனிவர்களும் ஞானோதயம் அடைந்த ஞானிகளும் வளர்த்து வந்த ஞானத்தை இந்த தேசத்திலிருந்து முதல்முறையாக ஒரு சர்வதேச மாநாட்டில் உலகம் அறியச்செய்த அந்த யோகியின் குரல், உலகம் முழுக்க இன்றும் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது!

நரேனாக இருந்தவர் ராமகிருஷ்ணரின் சீடராக விவேகானந்தராக, பின்னாளில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்று பெரும் ஆன்மிக அலையை உருவாக்கினார். கல்லூரி மாணவராக, இளைய தலைமுறையின் பிரதிநிதியாக வலம் வந்த நரேனின் வாழ்வில் மாபெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது ராமகிருஷ்ணரின் சந்திப்பே.

ராமகிருஷ்ணரின் ஞானோதயத்துக்குப் பிறகு அவரிடம் பல சீடர்கள் வந்து சேர்ந்தனர். ஆனால் மற்ற சீடர்களை விடவும் ராமகிருஷ்ணர், விவேகானந்தர் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தார்.

விவேகானந்தர் மனதில் பல கேள்விகள் இருந்தன. பல சந்தேகங்கள் இருந்தன. எதையும் காரண அறிவில் ஆராய்ச்சி செய்து, சரி என்று புரிந்த பின்னரே ஒப்புக்கொள்ளும் மனிதராக அவர் இருந்தார். ராமகிருஷ்ணரோ காரண அறிவுக்கு எட்டாத பக்தி உணர்வில் திளைத்திருந்தவர்.

இந்த இளைஞனுக்குள்ளே இருக்கும் ஏதோ ஒன்று ராமகிருஷ்ணருக்குப் புரிந்தது. தனது சக்தியை உள்வாங்கிக்கொள்ளும் திறமையை அவர் அந்த இளைஞனிடம் கண்டார். இதனை உலகுக்குப் பரிமாறிடும் ஊடகமாக அம்மனிதரின் உள்நிலை இருப்பதை உணர்ந்தார். தனது செய்தியை உலகுக்குக் கொண்டுசெல்ல விவேகானந்தர்தான் சரியான நபர் என்று அவரைத் தேர்ந்தெடுத்தார்.

சுடர்விடும் அறிவும், சுதந்திரம் தேடும் இளவயதும் ஒரே சமயத்தில் விவேகானந்தரிடம் இருந்தன. “கடவுள் இருக்கிறாரா? இந்தக் கட்டுக்கதையை நான் ஏன் நம்ப வேண்டும்? கண்களால் காணாமல் எதையும் நம்ப மாட்டேன்!” என்ற இவரது கேள்விக்குப் பலராலும் விடையளிக்க இயலவில்லை!

இதைப் போலத்தான் தொடங்கியது இன்னுமொரு கேள்வி! மிகவும் ஆழமான கேள்வி! ஆனால், மிகச் சாதாரணமாக கேட்கப்பட்டது. சற்றும் எதிர்பாராத பதில் கிடைத்தபோது, அவரது வாழ்க்கை முற்றிலுமாகப் புரண்டது!

கடவுளுக்கு சாட்சி என்ன

“கடவுள்! கடவுள்!” என்று சொல்கிறீர்களே அதன் பொருள் என்ன? அதற்கு சாட்சி என்ன?” மற்ற ஆன்மிகவாதிகளைப் போலவே இந்தவொரு யோகியிடத்திலும் மாபெரும் விளக்கம் கிடைக்கும் என எதிர்பார்த்தார் நரேன்.

“நானே அதற்கு சாட்சி! இதைவிட உனக்கு வேறு என்ன சாட்சி வேண்டும்? நான் இங்கு இருக்கிறேன்,” என்றார் அந்த யோகி.

முற்றிலும் எதிர்பாரா இந்தப் பதிலைக் கேட்டதும் நரேனால் வாதிட முடியவில்லை. கேள்விகள் கேட்க இயலவில்லை. வாயடைத்துப் போனார். ஆனால், ராமகிருஷ்ணரின் இந்த பதில், அவரை நிலைகொள்ளாமல் போகச் செய்தது. அவரிடமிருந்து இதற்கான பதிலைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கத்தில் மீண்டும் மீண்டும் ராமகிருஷ்ணரிடம் சென்றார், பிற்காலத்தில் விவேகானந்தர் என வழங்கப்பட்ட நரேன்.

“கடவுள்! கடவுள்! என்று பேசுகிறீர்களே, உங்களால் எனக்கு அதைக் காட்ட முடியுமா?” என்றார் விவேகானந்தர்.

ராமகிருஷ்ணர், “உனக்கு அதைக் காணும் துணிச்சல் இருக்கிறதா?” என்றார்.

துணிவு மிகுந்த அந்த இளைஞனோ “ஆம், காத்திருக்கிறேன், எனக்கு அதைக் காட்டுங்கள்,” என்றார்.

திடீரென எவரும் எதிர்பாரா வண்ணம் ராமகிருஷ்ணர் தனது கால்களை விவேகானந்தரின் நெஞ்சுப் பகுதியில் வைத்தார். அங்கே என்ன நடந்தது என எவருக்கும் புரியவில்லை.

விவேகானந்தர் கற்ற எல்லா கல்வியும் அந்தக் கணம் பொய்யாகியது. இவர் மனதில் இருந்த எல்லா கேள்விகளும் அந்தக் கணம் மறைந்து போயின. குருவின் ஸ்பரிசம் நெஞ்சுப் பகுதியில் பட சொல்லொணா புதிய அனுபவத்தை உணர்ந்தார். வெடித்திடும் அந்த ஆனந்த நிலைக்கு பொருள் தெரியாமல் தவித்தார். கண்களில் கண்ணீர் மல்க வார்த்தைகளின்றி உறைந்தார்.

அடுத்து சுமார் 12 மணி நேரம் வரை விவேகானந்தர் அந்த நிலையிலிருந்து எழவில்லை. மீண்டும் எழுந்தபோது அவர் பழைய மனிதரில்லை!

ராமகிருஷ்ணர் மஹாசமாதி அடைந்தவுடன் விவேகானந்தர் ராமகிருஷ்ண மடத்தை நிறுவினார். விவேகானந்தரும் ராமகிருஷ்ணரின் எட்டுச் சீடர்களும் ஒன்றாக இணைந்து தன் குருவின் செய்தியை உலகம் முழுக்கக் கொண்டு செல்லத் தேவையான பணிகளைத் தொடங்கினர்.

தன் குருவுக்கோ எழுதப் படித்திடத் தெரியாது. அவருக்கென தனியாக ஒரு கொள்கையோ செயல்திட்டமோ கிடையாது. அமைதியான சாதுவாக ஓரிடத்தில் தெய்வம் போல் அமர்ந்திருந்தவர் அவர். அவரது சீடர்களோ நெருப்பைப் போன்ற மனிதர்கள். அவர்களது தீவிரமான செயலால் உலகம் முழுக்க ராமகிருஷ்ணரின் செய்தி எடுத்துச் செல்லப்பட்டது.

திடீரென எவரும் எதிர்பாரா வண்ணம் ராமகிருஷ்ணர் தனது கால்களை விவேகானந்தரின் நெஞ்சுப் பகுதியில் வைத்தார். அங்கே என்ன நடந்தது என எவருக்கும் புரியவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in