திருமணம் கைகூட உதவும் உற்சவம்

திருமணம் கைகூட உதவும் உற்சவம்
Updated on
1 min read

ராமனிடம், லவனும், குசனும் போரிட்ட இடம் சிறுவாபுரி என்ற செய்தி திருப்புகழ் வழியாக அறியப்படுகிறது. இக்கோயிலில் உள்ள மணக்கோலத்தில் காட்சியளிக்கும் வள்ளி மணவாள பெருமானை வணங்கினால், திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.

கல்விக்காகவும், செல்வ விருத்தி, தொழில் விருத்திக்காகவும் பாலசுப்பிரமணிய சுவாமியை வழிபடுவோர் ஏராளம். முக்கியமாக, திருமணப் பிரார்த்தனைக்காக வள்ளி மணவாளப் பெருமான் திருமண மகோற்சவம் நடத்தப்படுகிறது. இந்த மகோற்சவத்தின் போது, திருணம் முடிந்ததும், திருமணமாகாத ஆண்கள், பெண்கள் மாலை கொண்டுவந்து, அதைச் சுவாமிக்கு அணிவித்துப் பெற்று, அதைத் தாங்கள் அணிந்து கோவிலை வலம் வர வேண்டும். இதில் பங்கேற்பவர்களுக்கு அடுத்த திருமண மகோற்சவத்துக்குள் திருமணம் கைகூடிவிடுவதாகப் பக்தர்கள் நம்புகின்றனர்.

இதை முன்னிட்டு, சென்னையைச் சேர்ந்த அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக் குழு சார்பில், ஆண்டுதோறும் வள்ளி மணவாளப் பெருமானுக்கு திருக்கல்யாண மகோற்சவம் நடத்தப்படுகிறது. 7-ம் ஆண்டாக அண்மையில் நடந்த திருக்கல்யாணத்தில் திருமணமாகாத ஆண், பெண் என சுமார் 550 பேர் பங்கேற்றனர்.

இவர்களுக்கு வழிபாட்டுக் குழு சார்பில், திருமண கூட்டுப் பிரார்த்தனைக்கான வசதிகள் செய்யப்பட்டிருந்தன. முற்பகல் 11:30 மணிக்குத் திருக்கல்யாணம் நடந்தது. திருமணம் முடிந்ததும், நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆண், பெண் இருவருக்கும் குழு சார்பில் இலவசமாக மாலை வழங்கப்பட்டது. அதைச் சுவாமிக்கு அணிவித்து, அதன்பின் பெற்று அணிந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து சுவாமி உலா வர, திருமணம் ஆகாதவர்களும் வலம் வந்தனர். நந்திக்கொடியோன் கயிலாய சிவ வாத்தியக் குழுவினரின் திருக்கயிலாய இசை நிகழ்ச்சி நடந்தது. திருக்கல்யாணத்தில் பங்கேற்றவர்களுக்கு வழிபாட்டுக் குழு சார்பில் பிரார்த்தனைக்கான மாலை, காலைச் சிற்றுண்டி, பகல் கல்யாண விருந்தும் வழங்கப்பட்டது. கோயில் நிர்வாக அலுவலர் நாராயணன், தலைமை குருக்கள் ஆனந்தன் மேற்பார்வையில் சிறப்பாக திருக்கல்யாண மகோற்சவம் நடந்தேறியது.

எங்குள்ளது?

சென்னையில் இருந்து 55 கிமீ தொலைவில் சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில், திருவள்ளூர் மாவட்டம் சின்னம்பேடு கிராமத்தில் அமைந்துள்ளது சிறுவாபுரி பாலசுப்பிரமணியசுவாமி கோயில்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in