

கதை சொல்லிப் பாட்டும் பாடும் ஹரிகதா பாணியில் அரிய ஆஞ்சனேய ராமாயணத்தை மியூசிக் அகாடமியில் நிகழ்த்திக் காட்டினார் பிரபலப் பாடகி சங்கீத கலாநிதி சுதா ரகுநாதன். அவரது வாய்பாட்டு மட்டுமல்ல வாய்ப்பேச்சும் சுருதியுடன் இணைந்திருந்தது.
வால்மீகி ராமாயணம், ஆனந்த ராமாயணம் என்று பல ராமாயணம் கேட்டிருப்பீர்கள் ஆஞ்ச னேயர் ராமாயணத்தைக் கேள்விப்பட்டதுண்டா? என்று கேட்டு, தெரிந்தவர்கள் கை தூக்கலாம் என்றார் சுதா ரகுநாதன். ஒரே ஒரு கைதான் உயர்ந்தது. பங்கு பெற்ற யாருக்கும் தெரியாத, ஆஞ்சனேய ராமாயணம் குறித்த நிகழ்வைக் கூறினார்.
ஒரு முறை வால்மீகி தன்னைப் போல் யாரால் ராமாயணம் இயற்ற முடியும் என்று எண்ணிக் களித்திருந்தார். இதனை அறிந்த பெருமாள், நாரதரிடம் வால்மீகியின் கர்வத்தைப் பங்கம் செய்யக் கூறினார். உடனடியாக வால்மீகியைக் காண வந்த நாரதர், தன்னுடன் இமயமலைக்கு வருமாறு வால்மீகியை அழைத்தார். இருவரும் இமயமலையின் அடிவாரம் சென்றனர். அங்கு மிக அழகிய வாழைத் தோப்பு இருந்தது.
வாழை இலைகள் அனைத்தும் கீழே உதிர்ந்து கிடந்தன. அவற்றை எல்லாம் கடந்து யாரையோ தேடிக்கொண்டு போனார் நாரதர். பின்னால் வந்த வால்மீகியின் கண்களில் கீழே கிடந்த வாழை இலைகளில் எழுதியிருந்த எழுத்துக்கள் தென்பட்டன. அவர் அதனை எடுத்துப் படித்தார். அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து ஓட, யார் இதனை எழுதியது என்று நாத்தழுதழுக்கக் கேட்டார்.
அப்போது நாரதர் தேடிக்கொண்டிருந்த ஆஞ்சனேயர் அங்கு வந்தார். தானே எழுதியதாகக் கூறிவிட்டு, ஏன் அழுகிறீர்கள் என வினவ, நான் எழுதிய வால்மீகி ராமாயணமே உலகப் பிரசித்தி பெறும் என்று திடமான நம்பிக்கை கொண்டிருந்தேனே. இவ்வளவு பிரமாதமாக இருக்கிறதே தாங்கள் எழுதிய ராமாயணம், என் எழுத்துக்கள் வியர்த்தமாகிவிடுமோ என அஞ்சுகிறேன் என்றார் வால்மீகி.
அந்த வாழை இலைகள் அனைத்ததையும் சுருட்டி, பெரிய பந்து போல் ஆக்கி, கண நேரத்தில் தன் வாயில் போட்டு மென்று தின்றுவிட்டார் ஆஞ்சனேயர். திடுக்கிட்ட வால்மீகி என்ன காரியம் செய்தீர்கள் என்று பதறினார். தாங்கள் கண்ட கனவான, தங்கள் ராமாயணமே உலகப் பிரசித்தி பெற வேண்டும் என்பதற்காகதான் இப்படிச் செய்தேன் என்றார் ஆஞ்சனேயர். வால்மீகியின் கர்வம் அழிந்தது. பெருமாள் எண்ணமும் நிறைவேறியது என்று கூறினார் சுதா ரகுநாதன்.
ஆங்கிலத்தில் கதை சொன்ன பிறகு ‘சின்னஞ் சிறு கிளியே’ பாட்டைத் தன் இனிய குரலில் பாடினார்.
`வாய்ஸ் ஆப் ஹோப்’ என்ற இந்த நிகழ்ச் சியில் சுதா ரகுநாதன் தலைமையில், வீணை இசைக் கலைஞர் ஜெயந்தி குமரேஷ், பியானோ இசைக் கலைஞர் அனில் ஸ்ரீநினிவாசன், வயலின் இசைக் கலைஞர் அம்பி சுப்பிர மணியன், புல்லாங்குழல் இசைக் கலைஞர் நவீன் ஐயர் ஆகிய ஐவர் இசையினைச் சிறப்பாக வழங்கினர். ஐவராக வழங்கியதால் இதற்கு `பஞ்ச தந்திரம்’ எனப் பெயரிட்டதாக, இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த ஏஸ் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.