Last Updated : 05 Oct, 2013 05:55 PM

 

Published : 05 Oct 2013 05:55 PM
Last Updated : 05 Oct 2013 05:55 PM

ஸ்ரீவாரி பிரம்மோற்சவம்

சக ஆண்டு விஜய ஆஸ்வின 1 தமிழாண்டு விஜய புரட்டாசி 19 - ஹஸ்தத் திருநாள்

வேங்கடாத்ரி ஸமம் ஸ்தானம் ப்ரஹ்மாண்டே நாஸ்தி கிஞ்சன வேங்கடேச ஸமோ தேவோ ந பூதோ ந பவிஷ்யதி - வேங்கடாசல மலைக்கு நிகராக அண்ட பகிரண்டத்தில் வேறிடம் இல்லை; வேங்கடாசலபதிக்கு இணையாக மற்றோர் தெய்வம் இருந்ததில்லை; இனி இருக்கப்போவதும் இல்லை.

திருமலைவாசனான வேங்கடா சலபதியின் உற்சவங்களிலேயே மிகுந்த பெருமைக்குரியது ஆண்டுதோறும் நடைபெறுகிற ‘பிரம்மோற்சவம்’. அண்டம், கோள்கள், நட்சத்திரங்கள், பூமி என்று யாவையும் ஊழிப் பிரளயத்தில் அமிழ்ந்துபோக, பிரபஞ்சத்தை, குறிப்பாக பூமியை மீண்டும் தழைக்கச் செய்யவும், உயிர்களை வாழச் செய்யவும் திருவுள்ளம் கொண்ட மஹாவிஷ்ணு, வெள்ளை வராஹமாகத் திருஅவதாரம் செய்தார். பூமியை மேல் தூக்கிக் கொணர்ந்து நிலைப்படுத்திய பின்னர், அதிலேயே தாமும் தங்கவேண்டும் என்று விருப்பம் கொண்டார். அதன்படி, புனிதத் தலமாக, திருமலையைத் தேர்ந்தெடுத்து, திருக்குளமான புஷ்கரிணியின் வடகரையில், வராஹ திருக்கோலத்தில் சேவை சாதித்தார். ஸ்வேத வராஹ கல்பத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்துக்குப் பின்னர், மீண்டும், இத்தலத்தைத் தமது இருப்பிடமாக மந் நாராயணன் தெரிந்தெடுத்த அற்புதமும் நிகழ்ந்தது.

பிருகு முனிவர், தம்முடைய நாதரான மஹாவிஷ்ணுவின் திருமார்பில் உதைத்துவிட்டார் என்பதற்காக மனம் நொந்த மஹாலட்சுமி, அதற்குப் பரிகாரம் தேடி பூலோகம் வந்துவிட்டாள். வைகுந்தமே சோபை இழக்க, தாமும் பூலோகம் வந்த எம்பெருமான், ஆங்காங்கே சுற்றித் திரிந்து, கடைசியில் சேஷாசல மலையை அடைந்தார். பிரம்மாவும் சிவனும், பசுவும் கன்றுமாக வந்து பால் பொழிந்து பராமரிக்க, சேஷாசலத்திலேயே வேங்கடேச்வரனாக எம்பெருமான் நிலைபெற்றார். கலிகாலத்தில் மக்கள் பலவிதமான துன்பங்களால் அவதியுறுவர் என்பதாலும், அப்படிப்பட்ட அவதிகளிலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காகவே, முன்னதாக வந்து வேங்கடேசனாக எழுந்தருளிவிட்டார் என்பதை உணர்ந்த பிரம்மா, மிகப் பெரிய விழா எடுத்து எம்பெருமானை வணங்கினார். பிரம்மாவால் முதன்முதலில் செய்யப்பெற்றது என்பதாலும் மிகப் பெரியது என்பதாலும் இப்பெருவிழா, பிரம்மோற்சவம் என்றே இப்போதும் அழைக்கப்பெறுகிறது.

ஒன்பது நாட்கள் நடைபெறுகிற பிரம்மோற்சவம், வேங்கடேசப் பெருமாளின் ஜன்ம தினமான திருவோணத் திருநாளில் நிறைவு பெறும்படி அமைக்கப்பெறுகிறது. முதல் நாள் நடைபெறுகிற துவஜாரோ ஹணம்தான் (கொடியேற்றம்), பிரம்மோற்சவத்தின் தொடக்கம் என்றாலும், ஏற்பாடுகளும் ஆயத்தங்களும் முன்னரே தொடங்கி விடுகின்றன. ஆலயசுத்தியாகக் கோயிலின் பகுதிகளும் தீர்த்தங்களும் புஷ்கரிணியும் தூய்மைப்படுத்தப்பட்டு, திருமலை முழுமையையும் கோலாகலமாக அலங்கரிக்கப்படுகிறது. எங்கு பார்த்தாலும், மலர்களும் மாவிலைத் தோரணங்களும் அழகு சேர்க்கின்றன. கர்ப்பகிருஹத்தின் சுவர்களில் சந்தனம், குங்குமம், கற்பூரம், குங்குமப்பூ மற்றும் வாசனாதி திரவியங்களால் ஆன கலவை பூசப்படுகிறது. ‘கோயில் ஆழ்வார் திருமஞ்சனம்’என்றழைக்கப்படுகிற இதற்குப் பின், பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முதல் நாள் மாலை (04.10.2013 மாலை சுமார் 6.30 மணிக்கு மேல்), சேனாதிபதி உற்சவம், மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் ஆகியவை நடைபெறுகின்றன. பிரம்மோற்சவத்தைச் சிறப்பாக நடத்திக் கொடுக்கும்படியும், துணையிருந்து பகவானின் அனுக்ரஹத்தைப் பெற்றுத் தரும்படியும், கோயில் நிர்வாகிகளும் பட்டாச்சார்யார்களும் விஷ்வக்சேனர், ஆதிசேஷன், அனந்தன், சுதர்சனம் போன்ற பரிவார தேவதைகளைப் பிரார்த்தித்துக்கொள்கின்றனர். மஹாவிஷ்ணுவின் சேனைத் தலைவர் விஷ்வக்சேனர். சேனை முதலியார் என்றும் இவரை அழைப்பதுண்டு. ஆதிசேஷன், அனந்தன், சுதர்சனம் (சக்கரத்தாழ்வார்), பாஞ்சஜன்யம் (சங்காழ்வார்) போன்றோர் எப்போதும் எம்பெருமான் கைங்கர்யத்தில் ஈடுபட்டவர்கள். பாகவதர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டால்தான் பகவானுக்கு மகிழ்ச்சி.

அதுமட்டுமில்லை, தனியாகச் சென்று பகவானைக் கண்டுவிடலாம் என்றால், அது மஹாவிஷ்ணுவிடத்தில் முடியாது. பாகவதர்களைத் துணைகொண்டுதான், பகவானை அடையமுடியும். பாகவத ர்களுக்காகவும் பக்தர்களுக்காகவும் என்ன வேண்டுமானாலும் செய்வார் எம்பெருமான். (அதனால்தானே, மஹாபக்தரான பிருகு முனிவர், நெஞ்சில் உதைத்தபோதும் தாங்கிக்கொண்டு, ‘உதைத்தவர் கால் வலிக்குமே’ என்று அதைப் பிடித்தும் விட்டார்!) அதனால், விழாவைத் தொடங்கும் முன்பு, பாகவதர்களான பரிவாரங்களைப் பிரார்த்திக்கின்றனர்.

சேனை முதலியார் உள்ளிட்டோரை வணங்குவதால், இது சேனாதிபதி உற்சவம். கூடவே, பூமிமாதாவும் வணங்கப்படுகிறாள். என்ன இருந்தாலும், நாம் இருப்பதும் வாழ்வதும் பூமியில்தானே. பூலோகப் பிறப்பால்தானே பெருமாளைப் பணிகிற வாய்ப்பு கிடைத்தது? பூலோக உயிர்களைக் காக்கத்தானே அவரும் வேங்கடேசனாக வந்து நின்றார்? அதனால், பூமிக்கான வணக்கம், மிருத் சங்கிரஹணம். பூமிமாதாவைப் பணிந்து, அவளின் மண்ணைச் சிறிதெடுத்து, புனிதமான இடத்தில் அதனைப் பரப்புவார்கள். நவதானிய விதைகள் இடப்பட்டு, அங்குரார்ப்பணம் நடைபெறும்.

பிரம்மோற்சவ முதல்நாள் மாலையில், துவஜாரோஹணம் (சுமார் 6 மணிக்கு) வேங்கடாசலபதி கோயிலின் கொடிமரத்தில், வேத முழக்கங்களுக்கும் ஜய கோஷங்களுக்கும் இடையே, பட்டாசார்யார்கள் கருடக் கொடியை விமரிசையாக ஏற்றுவர். மஹாவிஷ்ணுவின் வாஹனமான கருடாழ்வார், அவருடைய கொடி யிலேயும் அமர்ந்திருக்கிறார். வேங்க டேசப் பெருமாளுக்கு ஸுப்ரபாதம் பாடும்போதும், ‘உத்திஷ்டோ உத்திஷ்ட கோவிந்த உத்திஷ்ட கருடத்வஜ’ என்றுதான் பாடுகிறோம். ‘பையுடை நாகப் பகை கொடியான்’ (படமெடுக்கிற பாம்புக்குப் பகையான கருடனைக் கொடியாகக் கொண்டவர்) என்று பெரியாழ்வாரும் மங்களாசாசனம் செய்கிறார். கிருஷ்ணாவதார காலத்தில், மாடு கன்றுகளை மேய்த்துக்கொண்டு எம்பெருமான் சென்றபோது, அவர் மீது வெயில் படாமலிருக்க, தாழப் பறந்து நிழல் தந்தாராம் கருடாழ்வார். பரம பாகவதரான கருடாழ்வார் வாசம் செய்யும் கொடி ஏற்றப்பட்டவுடன், பிரம்மோற்சவம் முறைப்படி தொடங்கிவிடுகிறது. கொடியேற்றத்திற்கான சிறப்பு ஐதிகமும் திருமலையில் உண்டு. உயர உயரப் பறக்கும் கொடியின் வழியாக, உயர உயரப் பறக்கும் கருடாழ்வார் தேவலோகம் செல்கிறார்; சத்யலோகம் செல்கிறார்; இன்னும் இன்னும் பற்பல பிரதேசங்களுக்கும் செல்கிறார். தேவேந்திரன், அக்னிதேவன், வாயுதேவன், தர்மதேவன், அச்வினி குமாரர்கள் போன்ற தேவர்களையும் வசிஷ்டர், விச்வாமித்திரர் போன்ற மஹரிஷிகளையும் கின்னரர், கந்தர்வர் போன்ற இசைவாணர்களையும் நேரில் சந்தித்து, பிரம்மோற்சவத்துக்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்கிறார். பாகவதரைப் பற்றிக்கொண்டால், பகவானை அடைந்துவிடலாம் என்னும் உண்மை அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஆகவே, கருடனைப் பின்பற்றி பக்தி, ஞானம் ஆகிய இரண்டு சிறகுகளின் உதவியோடு எம்பெருமான் திருவடி நிழலை அடைந்துவிட அவர்களும் புறப்படுகிறார்கள்.

பிரம்மோற்சவ முதல் நாள் இரவு பெத்த சேஷ வாஹனத்தில் மலையப்ப சுவாமி ஊர்வலம் (10.00 மணி முதல் நள்ளிரவையும் தாண்டி). வேங்கடேசன், வேங்கடாசலபதி, நிவாசன் போன்றவை திருமலை மூலவருக்கான திருநாமங்கள்; உற்சவப் பெருமாளுக்கான சிறப்புத் திருநாமம் மலையப்ப சுவாமி என்பதாகும். பிரம்மோற்சவத்தின்போது, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான வாஹனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதிகளில் உலா வருவார். அதன்படி முதல்நாள் இரவு உலாவுக்கானது பெத்த (பெரிய) சேஷ வாஹனம்.

மந் நாராயணனின் பாயலாக (படுக்கையாக) விளங்குபவர் ஆதிசேஷன். சேஷம் என்னும் சொல்லுக்குத் தொண்டு, மிச்சம் மீதி போன்ற பொருள்கள் உண்டு. அனைத்துமே எம்பெருமானின் மிச்சம் என்று கருதி, எப்போதும் எம்பெருமானின் கைங்கர்யத்தில் ஈடுபடுவதே சேஷத்தன்மை. ’சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனம் நடந்தால் மர அடியாம் நீள்கடலுள் என்றும் புணையாம் பூம்பட்டாம் புல்கும் அணையாம் திருமாற்கு அரவு’ என்பது ஆதிசேஷனின் பெருமையைப் போற்றும் பாட்டு. மந் நாராயணன் எங்கு சென்றாலும் எந்நிலையை எடுத்தாலும், ஏதாவதொரு வகையில் அங்கு கைங்கர்யம் செய்துகொண்டிருப்பார் ஆதிசேஷன். எம்பெருமான் ராமாவதாரம் எடுத்தபோது, சேஷன், லட்சுமணர் ஆனார்; கிருஷ்ணாவதாரத்தில், பலராமர் ஆனார்.

பகவான் பாற்கடலில் பள்ளிகொள்ளும்போது, ஆதிசேஷன் பாயலாக இருக்கிறார்; அங்கிருந்து பகவான் புறப்பட்டுவிட்டால், உடனே குடையாக மாறி, நிழல் தர கூடவே விரைகிறார்; போகிற வழியில், பெருமான் உட்காரத் தலைப்பட்டால், சடசடவென்று சிங்காசனமாகித் தாங்குகிறார்; எழுந்து நடக்கும்போது, கால்களில் பாதுகையாகிப் பாதுகாக்கிறார்; எங்காவது கடல்பயணம் என்றால் தெப்பமாகிச் சுமக்கிறார்; பட்டுப் பீதாம்பரமாகவும் அவ்வப்போது ஆகிக் கொள்கிறார்; இவ்வாறு எம்பெருமானுக்குப் பலவிதங்களில் தொண்டுபுரியும் சேஷன்தான், எம்பெருமான் பூலோகம் வரப் போகிறார் என்பதற்காக, திருமால் நின்றுறையும் வகையில் திருமலை ஆனார். பெருமாளுக்கு முன்பாக வந்து மலையாகிக் காத்துக் கிடப்பதாலேயே, திருமலைக்கு சேஷாசலம், சேஷாத்ரி என்று பெயர். ‘சேஷாத்ரி தவ ஸுப்ரபாதம்’ என்று பள்ளியெழுச்சி பாடுகையில், பாயலின் பெயரையே, படுத்திருப்பவருக்கும் உரித்தாக்கிவிடுகிறோமே.

அப்படி ப்பட்ட சேஷன் மீது பெருமான் மலையப்பராகத் தங்கியிருப்பதைச் சிறப்பிக்கும்பொருட்டு, பிரம்மோற்ச வத்தின் தொடக்க ஊர்வலம், சேஷ வாஹனத்தின் மீது நடைபெறுகிறது. ஆயிரம் தலைகள் கொண்ட ஆதிசேஷனைக் குறிக்கவே ‘பெத்த’(பெரிய) என்னும் பெயர். ஆதிசேஷன் சுருண்டிருப்பதைப் போன்ற வடிவத்தில் வாஹனம் அமைக்கப்பட்டிருக்கும். பூமியை சேஷனே தாங்குகிறார்.

அதற்குத் தக்கபடி, சேஷ வாஹனத்தின் கீழ்ப்பகுதியில் அஷ்டதிக் கஜங்களும், அஷ்ட திக்பாலர்களும் காணப்படுகின்றனர். ஏழு தலைகளோடு சேஷன் குடை பிடிக்க, தேவி நாச்சியாரும் பூதேவி நாச்சியாரும் இருபுறமும் எழில்கூட்ட, நடுவில் மலையப்ப சுவாமி, அலங்காரபூஷிதராக, கோயிலைச் சுற்றிய மாடவீதிகளில் உலா வருவார். சுவாமி ஊர்வலம் வருகிறார் என்கிற களிப்பு கல்லிலும் மண்ணிலும்கூட எதிரொலிக்கும். ஆண்கள், பெண்கள், பெரியவர்கள், சிறியவர்கள் என்று எல்லோரும் சுவாமிக்கு முன்னும் பின்னும் ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் திருநாமம் ஜபித்துக் கொண்டும் வருவார்கள்.

#நிவாசப் பெருமாளாக, வகுளா தேவியாக, ஆகாச ராஜனாக, பாகவதோத்தமர்களாகப் பலவகையாக வேடமிட்டுக் கொண்டும் வருவார்கள். ‘கோவிந்தா கோவிந்தா’ என்னும் பக்திக் குரல், தேவலோகத்தை என்ன.. சத்ய லோகத்தை என்ன.. பாற்கடலையே எட்டுமளவுக்கு எங்கும் வேங்கடேசத் திருநாமம் ஒலிக்கும்.

திருமலை பிரம்மோற்சவம் காண, இப்போதும் ஆண்டுதோறும் பிரம்மாவும் சரஸ்வதியும் சிவனும் பார்வதியும் கந்தனும் சப்தரிஷிகளும் இன்னும் எல்லோரும் எல்லோரும் திருமலைக்கு வந்துவிடுகிறார்கள். வராமலா இருப்பார்கள்? பாற்கடலும் ஆதிசேஷனும் கருடாழ்வாரும் மஹாலட்சுமித் தாயாரும் திருமலையில் இருக்க.. வாரி சுவாமியும் திருமலையில் இருக்க.. அண்டமே திருமலையிலன்றோ இருக்கிறது.

வராஹ புராணத்தின்படி, திருமலை பிரம்மோற்சவம், அஸ்வீஜ (அஸ்வினி அல்லது ஆஸ்வின மாதம்) மாதத்தில் நடைபெறும். சித்திரையில் ஆண்டு தொடங்குகிற இந்திய நாட்காட்டியின்படி ஏழாம் மாதமான அஸ்வீஜம், தமிழில் ஐப்பசி என்று வழங்கப்படுகிறது.

இம்மாதத்தில்தான், திருமலையப்ப சுவாமியான பாலாஜி திருஅவதாரம் செய்ததாக ஐதிகம். சக்கரத்தாழ்வார் இம்மாதத்துக்கான அதிபதி. ‘அடடா, இன்னும் ஐப்பசி வரவில்லையே’ என்று பார்க்கிறீர்களா? சக ஆண்டுக் கணக்கின்படி (யுகாதியை அடிப்படையாகக் கொண்ட தெலுங்கு, கன்னட, மராத்திய நாட்காட்டிகள்), 2013 அக்டோபர் 5ம் தேதி, அதாவது அமாவாசைக்கு மறுநாள், அஸ்வீஜம் தொடங்குகிறது.

சொல்லப்போனால், பெளர்ணமியை அடிப்படையாகக் கொண்டு கையாளப்படுகிற வட இந்தியக் கணக்குகள் சிலவற்றின்படி, செப்டம்பர் 20ம் தேதியே அஸ்வீஜம் தொடங்கிவிட்டது. வேறு சில ஆதாரங்கள், இந்த விழாவைப் புரட்டாசி பிரம்மோற்சவம் என்றே அழைக்கின்றன. சூரியன் கன்னி ராசியில் சஞ்சரிக்கும் காலகட்டம் என்றும் சொல்லப்பட்டிருப்பதால், புரட்டாசி அல்லது கன்னி மாதம் பொருத்தமாக அமைகிறது.

வேங்கடேசப் பெருமாளுக்கு, ஆந்திர மக்கள் மற்றும் அரசின் சார்பில், பிரம்மோற்சவத்தின்போது பட்டு வஸ்திரங்களை ஆந்திர முதல்வர் சமர்ப்பிப்பார். முன்னரெல்லாம், கருடசேவையின்போது (ஐந்தாம் நாள்) இது நடைபெறும். பக்தர்கள் கூட்டம், பாதுகாப்பு ஏற்பாடுகள் போன்றவற்றின் காரணமாக, இப்போதெல்லாம் முதல் நாளிலேயே, துவஜாரோஹணத்தை ஒட்டியே, ஆந்திர முதல்வர் வந்து பட்டு வஸ்திரங்களைப் பெருமாளுக்கு சமர்ப்பித்து விடுகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x