Last Updated : 12 Jan, 2017 10:47 AM

 

Published : 12 Jan 2017 10:47 AM
Last Updated : 12 Jan 2017 10:47 AM

பெருமகிழ்ச்சி பொங்கட்டும்! - தைப்பொங்கல்: ஜனவரி 14

உழவுக்கும் தொழிலுக் கும் மரியாதை செய்யும் விழாவே பொங்கல் விழா. இந்தப் பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் உழவுத் தொழிலையும், அந்தத் தொழிலுக்கு உதவும் சூரியனையும் வழிபடும் திருநாளே இது. பொங்கல் திருநாளைத் தொடர்ந்து வருவது வேளாண்மைக்கு உதவும் கால்நடையான மாடுகளுக்கு நன்றி சொல்லும் மாட்டுப் பொங்கல். ஆண்டு முழுவதும் விடுமுறை இன்றி உழைக்கும் உழவர் பெருமக்கள், உற்றார், உறவினரைக் ‘காணும்’விழாவான காணும் பொங்கல், மாட்டுப் பொங்கலைத் தொடர்ந்து வருகிறது.

பாவை நீராட்டம்

சங்கத் தமிழ் மாலை முப்பது இயற்றிய ஆண்டாள், சங்க இலக்கியத்தில் கூறப்பட்டுள்ள தை நீராட்டம் என்ற நிகழ்வை குறிப்பிடும் வண்ணம், நீராட்டேலோர் எம்பாவாய் என்று தனது ஒவ்வொரு பாசுரத்திலும் குறிப்பிட்டிருக்கிறார். இதனையொட்டி ஆண்டாள் திருக்கல்யாண தினமான போகிக்கு ஒன்பது நாட்களுக்கு முன்னர் தொடங்கி, வைணவத் திருத்தலங்களில் நீராட்டம் நடைபெறும்.

அந்த வகையில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நீராட்டம் நடைபெற்றுவருகிறது. கோயிலுக்கு எதிரில் உள்ள பதினாறுகால் மண்டபத்தில், நீராட்டத்தின்போது முகவீணை மட்டும் வாசிக்கப்படும். முன்னதாக முதல் நாள் மார்கழி குளிரைத் தாங்கும் வண்ணம் பட்டுத்துணியில் போர்த்தப்பட்ட ஒன்பது போர்வைகள் ஒவ்வொன்றாக நீக்கப்பட்டு, இடைப்பட்ட தருணங்களில் ஆரத்தி காட்டப்படும். இது கண் கொள்ளாக் காட்சி. பின்னர் ஆண்டாளின் உற்சவருக்குப் பல் தேய்த்து, நாக்கு வழித்து, தங்க வட்டிலில் வாய் கொப்பளிக்கச் செய்வது போன்ற காலைக் கடன் கழித்தல் நிகழ்வுகள் பாவனையாக நடைபெறும்.

தொடர்ந்து தீப தூபம் கற்பூர ஆரத்தி, ஷோடச உபசாரங்களான வெள்ளி குடை காட்டுதல், ஆலவட்டம் என்ற விசிறியால் விசுறுவது, வெள்ளி பிடிபோட்ட சமரம் வீசுவது, சாம்பிராணி போடுதல், வெட்டி வேர் விசிறியால் விசிறுவது, முகம் பார்க்கும் கண்ணாடி காட்டுவது ஆகியன நடத்தப்படும்.

திரையை விலக்கி பொது மக்கள் பார்க்கும்போதே வகிடுச் சவுரி மீது வெள்ளிச் சீப்பால் தலைவாருவார்கள். தலைமுடியில் வாசனை தைலத்தைப் பூசுவார்கள். பிரசாதமாக கூடியிருக்கும் பக்தர்களுக்கு வாசனை தைலம் அளிக்கப்படும். தலையில் தடவிய தைலம் ஆண்டாளின் கண்களில் பட்டுவிடாமல் இருக்க, வெள்ளைத் துணியால் மூன்று முறை ஆண்டாளின் திருவுருவச் சிலையின் நெற்றியைத் துடைத்தெடுப்பார்கள்.

பின்னர் சவுரி முடி, கோடாலி முடிச்சாகி நீராட்டத்துக்கு ஆண்டாள் தயாராவார். இந்த நிலையில் வாசனை பொடிகள் கொண்டு நீராட்டம் நடக்கும். இந்த நாட்களில் அம்சம், யாளி வாகனங்கள் உட்பட சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி தருவார்.

போகி முடிந்து பொங்கல் அன்று ஆண்டாளும், பார்த்தசாரதி பெருமாளும் திவ்ய தம்பதியாக ஊர்கோலமாக திருவீதி உலா வருவார்கள். அப்போது, சென்னையில் இருந்தும் வெளியூர்களில் இருந்தும் திருவல்லிக்கேணிக்கு வரும் பக்தர்கள், ஆண்டாளைத் தங்கள் இல்லத்துப் பெண் எனக் கொண்டாடும் வகையில், வெற்றிலை பாக்கு, பூ, பழம், வளையல் ஆகியவற்றை அளித்து வழிபடுவார்கள். இதனால் பெண்களுக்கு மாங்கல்ய பலம் கூடி கணவனின் ஆயுள் நீடிக்கும் என்றும், மணமாகாத பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x