Published : 24 Oct 2013 17:15 pm

Updated : 06 Jun 2017 12:37 pm

 

Published : 24 Oct 2013 05:15 PM
Last Updated : 06 Jun 2017 12:37 PM

அபங் - ஒரு துளி மழை

அபங்கம் என்றால் குற்றமில்லாதது. பங்கம் இல்லாதது. குற்றமில்லாதது ஆனந்தம். சிறு சிறு பாடல்கள் மூலம் இறைவனுடன் பேசுதல் என்றும் இதற்கு பொருள் சொல்லலாம்.

ஒவ்வொரு அபங்கப் பாடலுக்கும் இத்தனை வரிகள்தான் இருக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் கிடையாது. எவ்வளவு நீளமாக வேண்டுமானாலும் இருக்கலாம். சந்தங்கள் மிகச் சிறப்பாக அமைந்திருக்கும். அபங்கங்களை பாடுவதற்கு மிகுந்த சங்கீத ஞானம் வேண்டும் என்பது இல்லை. மஹாராஷ்டிர மாநிலத்தில் எளிய தொழிலாளிகளும், இந்தப் பாடல்களை பாடித் திளைக்கின்றனர். இவர்களுக்கு வேதமோ சாஸ்திரமோ ஏன் சிறிய ஸ்லோகங்களோ கூட தெரியவேண்டாம்.

இந்தப் பாடல்கள் பலவும் அர்ச்சாவதார மூர்த்தியான விட்டல் பற்றியே அமைந்துள்ளன. நம்மை அவன் வழிநடத்திச் செல்வான் என்ற நம்பிக்கையே இதன் அடிநாதம். இந்த பாடல்களை இயற்றியவர்களில் மிகவும் பிரபலமானவர் பக்த துக்காராம். இவரைப் போலவே பல சாதுக்கள் அபங்கங்களைப் பாடி இருக்கிறார்கள் என்றாலும் பாண்டுரங்கனின் பக்தர்களின் தலைவர் எனக் கொண்டாடக் கூடிய உயர்ந்த நிலையில் உள்ளவர் துக்காராம் மஹராஜ். இவரது சரித்திரம் பக்த லீலாம்ருதம் என்ற மராட்டிய பக்த விஜய நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவரின் வாழ்க்கை சரிதத்தில் பல சுவாரசியமான சம்பவங்கள் இடம் பெற்றுள்ளன. அவை அனைத்தையும் அவரது அபங்கங்கள் மூலமாகவே அறிய முடிகிறது.

400 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்தவர் விட்டல் பக்தர் துக்காராம். உபதேசம், பிரார்த்தனை, சாதுக்களின் மகிமை மற்றும் நாம பக்தி என்று அபங்கங்கள் நான்கு வகைப்படும். இதில் குறிப்பிட்ட தெய்வத்தை மட்டுமே பிரார்த்திக்க வேண்டும் என்ற கட்டளை எதுவும் கிடையாது.

துக்காராம் மஹராஜ் தன் வாழ்க்கை நிகழ்வுகள் மற்றும் ஆன்மீகக் கருத்துக்களை அபங்கங்களாக எழுதி வைத்துள்ளார். சுமார் நான்காயிரம் அபங்கங்கள் எழுதியதாக பக்த லீலாம்ருதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொகுத்து எழுதியவர் மஹீபதி என்ற அறிஞர்.

‘ஆஹீதேணே…..’ என்று தொடங்கும் அபங்கப் பாடலின் கருத்தும், அதற்கான சரித்திர நிகழ்வும் துக்காராமை குறித்து அறியச் செய்கிறது. துக்காராம் மஹராஜ் மிகவும் பிரபலமடைந்த நேரம் அது. அவரது அபங்கங்களை மக்களெல்லாம் பாடிக்கொண்டு இருந்தார்கள். இவர் சத்ரபதி சிவாஜியின் சமகாலத்தவர். சத்ரபதி சிவாஜியின் குரு ராமதாஸர். அவரைக் காண சிவாஜி அவர் வசிக்கும் காட்டிற்குச் செல்வார். ஒரே இடத்தில் வசிக்காமல் காட்டில் சுற்றித் திரிந்து கொண்டு இருப்பது ராமதாஸரின் வழக்கம். அவரை பார்க்கச் செல்லும் சிவாஜியும் காடுமேடெல்லாம் சுற்றித் திரிந்து ஒரு வழியாகக் கண்டுபிடித்துவிடுவார்.

ஒரு முறை மிகுந்த அலைச்சலுக்குப் பின்னரே அவரால் ராமதாஸரைக் கண்டுபிடிக்க முடிந்தது. இதையறிந்த அவர் ,‘சாதுக்கள் தரிசனம்தானே வேண்டும். உங்கள் நாட்டிலேயே அதாவது மஹாராஷ்டிரத்திலேயே துக்காராம் என்று ஒருவர் இருக்கிறார். அவரை கண்டுபிடித்து வணங்கு’ என்றார் ராமதாஸர்.

நாடு திரும்பிய சத்ரபதி சிவாஜி தன் படை வீரர்களையும், ஒற்றர்களையும் அனுப்பி துக்காராம் எங்கு இருக்கிறார் என்பதைக் கண்டுபிடிக்கச் சொல்கிறார். துக்காராம் புனா அருகில் உள்ள தேஹுவில் இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். நூற்றுக்கணக்கான மக்கள் தேடி வருபவராக இருந்தாலும் துக்காராமின் வறுமை நிலையில் இருப்பதையும் தெரிவிக்கின்றனர். இதைக் கேட்ட சிவாஜிக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. ‘ஹரி நாமத்தை ஓயாமல் பாடும் ஒருவர் ஏழ்மையில் இருப்பதா?’ என்று வருந்தினார். பதினெட்டு கிராமங்களை துக்காராம் பெயருக்கு சாசனம் எழுதிவைத்தார். பொன், பொருள், வைடூரியம் எனக் கூடை, கூடையாக நவமணிகளையும், வண்டி, வண்டியாக நவதான்யங்களையும், போக்குவரத்திற்கு குதிரைகளையும், பால் வளத்திற்கு மாடு கன்றுகளையும் சேகரித்துக்கொண்டு துக்காராமைப் பார்க்கக் கிளம்பி வருகிறார் சத்ரபதி சிவாஜி.

தேஹுவில் துக்காராமின் ஹரி கீர்த்தனம் நடந்துகொண்டு இருக்கிறது. இந்த இடத்திற்கே சிவாஜி வந்துவிட்டதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்படுகிறது. மக்களெல்லாம் அவரைப் பார்த்து எழுந்து நின்று வணங்குகிறார்கள். அவருக்கு உரிய மரியாதையைச் செய்த மக்கள், அவர் உள்ளே செல்ல வழிவிட்டு நின்றனர். விலகிய கூட்டத்தின் இடையே சென்ற அவர் வியாஸ பீடத்தில் அமர்ந்திருந்த துக்காராமை வணங்கி எதிரே அமர்கிறார்.மேடையில் அமர்ந்து ஹரி பஜன் செய்தால் அதற்கு வியாஸ பீடம் என்று பெயர். துக்காராமோ தன் பீட பெருமையைக் காக்க, ராஜாவை வணங்காமல் தொடர்ந்து ஹரிபஜன் செய்கிறார். அந்த நிகழ்வு முடிந்ததும், சிவாஜி அவரை வணங்கி தனது பரிசுகளை ஏற்கும்படி துக்காராமிடம் வேண்டினார்.

“சிவாஜி, நீ கொண்டு வந்த வித்து, தனம், வித்தம் எனப்படும் பதினெட்டு கிராமங்களை எழுதித் தந்த சாசனம் மற்றும் பொன், பொருள் ஆகியன எதுவும் எனக்கு சந்தோஷத்தைத் தரப் போவதில்லை. உண்மையில் எனக்கு சந்தோஷத்தை தர வேண்டும் என்று நினைத்தாயானால் துளசி மணிமாலையை அணிந்துகொள். ஏகாதசி விரதம் இரு. விட்டல நாம ஜபம் செய்” என்று தன் அபங்கம் மூலம் கூறுகிறார். இந்த அபங்கமே சரித்திரச் சான்றாக அமைந்துவிட்டது.

பக்த துக்காராமுக்கு அபங் என்றாலே ஆனந்தம்தான்.

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

அபங்கம்ராஜேஸ்வரி ஐயர்அபங்கப் பாடல்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author