Published : 20 Apr 2017 10:38 AM
Last Updated : 20 Apr 2017 10:38 AM

அற்புதக் கதை சொல்லும் அழகான சிற்பங்கள் 25: அரியும் சிவனும் ஒன்று

சமய ஒற்றுமை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை நமது முன்னோர் வலியுறுத்திக் கொண்டே வந்திருக்கிறார்கள். அதனால்தான் உமையின் அண்ணன் மகாவிஷ்ணு என்றும் அம்பிகையை மணமுடித்துக் கொடுத்தன் பேரில் சிவபெருமான் மச்சினன் ஆகவும், பிள்ளைகளுக்கு மாமனாகவும் அவர்கள் இவரோடு ஆடிய திருவிளையாடல்களும், அவர்களோடு இவர் ஆடிய மகிழ்ந்த தருணங்களும் பலப்பல விதமாக நமது புராண, இதிகாசங்களில் காட்டப்பட்டுள்ளன. மரியாதை கொடுக்க வேண்டிய நேரங்களில், சகலமும் செய்யப்பட்டுள்ளதையும் இவர் அவரைப் பூஜித்ததும், அவர் இவருக்கு பூஜை செய்ததையும் அதன் பேரிலேயே அந்தந்தத் தலங்கள் விளங்குவதையும் காண்கிறோம்.

சிவபெருமானை அபிஷேகப் பிரியராகத் தரிசிக்கிறோம். மகாவிஷ்ணுவை அலங்காரப் பிரியராகக் கண்ணார ரசித்து மகிழ்கிறோம். எல்லாம் ஒன்றுதான். ஒன்றேதான் பல. இதைத்தான் காலங்காலமாக, அரியும் சிவனும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு என்று கூறியபடியே இருக்கிறார்கள். பேதம் பேசினால் அவன் மண்ணுதான் என்ற மேலோட்டமான விளக்கமாக இருந்தாலும் இதற்கு உள்ளார்ந்த அர்த்தம் உள்ளது. அதற்குப் பின்னணிக் கதையும் உள்ளது.

அறி…யாதவன் வாயில் மண்ணு

கிருஷ்ண பரமாத்மா, வாசலில் விளையாடிக்கொண்டிருக்கிறார். சட்டென மண்ணை அள்ளி வாயில் போட்டுக் கொண்டு சிரிக்க, பலராமன் ஓடிவந்து அன்னையிடம் விஷயத்தைக் கூற ஓடோடி வருகிறாள் யசோதை. ‘‘கண்ணா! மண்ணைத் தின்றாயா..? எங்கே வாயைத் திற; காட்டு” என்கிறாள். காட்ட மறுக்கும் கண்ணனைப் பொய்க் கோபத்தோடு மிரட்ட, கண்ணனும் வாயைத் திறக்கிறான். அண்ட சராசரமும் தெரிந்து மறைந்து பூமி தெரிகிறது. அதில் பயிர், பச்சைகள், பறவை, மிருகம் என எல்லாம் தெரிந்து கடைசியில் தன்னையுமே பார்த்து மயங்கிப் போகிறாள். தெளிந்து எழுந்தபோது சிறுபிள்ளை சிரித்தபடி நிற்கிறான். இப்போது அந்தச் சிரிப்பில் மயங்கி அள்ளி அணைக்கிறாள். ‘அறி...யாதவன் வாயில் மண்ணு”.

படைத்தல், காத்தல், அழித்தல் எனத் தமக்குள் வேலையைப் பகிர்ந்து எடுத்தபோது காத்தல் என்ற நிலையில் காப்பது மகாவிஷ்ணு ஆகிறார். யாதவன் வாயில் மண்ணாகிறது. அதாவது பூமி அவர் கையில் பாதுகாப்பாக இருக்கிறது. ஒரு எளிய பழமொழி எத்தனை ஆழமான கருத்தைச் கூறிச் செல்கிறது பார்த்தீர்களா?

இப்போது விஷயத்திற்கு வருவோம். அர்த்தநாரீஸ்வரர் கோலம், சிவனும், சக்தியும் பாதியாக இருப்பது. அதற்கான கதை நம்மில் பலருக்கும் தெரியும். ஆனால் சங்கரநாராயணர்? ஏன் அப்படி? வித்தியாசமாக ஏதாவது உருவம் படைக்கப்பட வேண்டுமென்ற கற்பனையா? நானும் பலரிடமும் கேட்டும், தேடியும் அலைந்தும் பார்த்துச் சரியாக யாரும் சொல்லாத நிலையில் திருவதிகை வீரட்டானத்துப் பெருமான் எதிர்பாராமல் விடை தந்தார். நான் திரிபுராந்தகரை வரைவதாகவும் அப்போது திட்டம் இல்லை. அவரைப் பார்த்து வரும் எண்ணமும்கூட இல்லை. ஆனாலும் உண்மையான தேடல்களுக்கு பலன் உண்டு என்பதுபோல் தானே அழைத்துத் தந்த விஷயங்களே இவை.

மோகினி ரூபம் கொண்ட மகாவிஷ்ணு

பாற்கடல் கடைந்த பின் மோகினி ரூபம் கொண்ட மகாவிஷ்ணு, அமிர்தத்தை தேவர்களுக்கெல்லாம் கொடுத்துவிட்டு, விஷம் அருந்தி உலகைக் காத்த பரமசிவனின் பெருமையையும், அவரது கருணையையும், செளந்தர்யத்தையும் எண்ணியபடி வந்து திருவதிகையில் கொன்றை மர நிழலில் அமர்ந்து கொண்டாளாம். இதை அறிந்து கொண்ட பரமசிவன், அவள் முன் தோன்றி, அன்றொருநாள் தாருகாவன ரிஷிகளின் ஆணவத்தை அடக்க வந்தபோது மோகினியான உம் மீது மையல் கொண்டோம். இப்போது நீர் கொண்ட மையலை நாம் தணிப்போம் என்று கூறி அணைக்க , ஐயனின் வெம்மையில் வியர்த்துப் போன மோகினியின் மேனியிலிருந்து வழிந்து ஓடியதே இந்தக் கெடில நதி என்கிறது புராணம்.

ஹரி ஹர புத்திரனும் தோன்றிய இடமாக இதையே குறிப்பிடுகிறார்கள். பரமன் மறைந்த பின்னும், சுய ரூபம் கொள்ள முடியாமல் இருந்த மஹாவிஷ்ணு அருந்தவம் செய்தாராம். பரமன் ஒளிப்பிழம்பாய், சதுர்புஜம் நெற்றிக்கண், நீல கண்டத்தோடு தோன்றி நிற்க, மஹா விஷ்ணுவும் பெண்ணுருவம் நீக்கக் கேட்டுக் கொண்டாராம். நமது சக்தியின் வடிவமே நீ! என்று கூறி அணைத்து உச்சி முகர்ந்து தன்னோடு சேர்த்துக் கொள்ள, அங்கே தோன்றினார் சங்கரநாராயணர். தேவர்கள் மலர்மாரி பொழிந்து வீழ்ந்து வீழ்ந்து வணங்கி மகிழ்ந்தார்களாம்.

ஹரி ஓம் ஹரி ஓம்

ரிஷிகளெல்லாம் மெய்மறந்து ஆனந்தக் கண்ணீர் பெருகி ஓட ஹரிஓம், ஹரிஓம் என்று வாயாரப் பாடியபடி நின்றார்களாம். இதை இந்தத் தல புராணம் கூறுகிறது. எதுவுமே காரணமில்லாமல் இல்லை என்பதை புரிந்துகொள்கிறோம். இந்த ரூபத்தில் அம்பாளைப் போல் மஹா விஷ்ணு இடதுபக்கமே இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தான் அப்பர் பெருமான், திருவையாற்று தலத்திலுறையும் ஐயாறப்பரைப் பாடும் போது...

எரியலா லுருவுமில்லை,

யோறலா லேற லில்லை

கரியலாற் போர்வையில்லை, காண்டகு சோதியார்க்குப்

பிரிவிலா அமரர் கூடிப் பெருந்தகைப் பிரானென்றேத்தும்

அரியலால் தேவி யில்லை

ஐயன், ஐயாறனார்க்கே

என்று பாடுகிறார்

இந்த ஒற்றுமையின் முக்கியத் துவத்தை உணர்த்தவே, தமிழ்நாட்டில் சங்கரன்கோயிலில், சங்கர நாராயணர் கோயிலே உள்ளது. சங்கரலிங்கம், கோமதி அம்மனுக்கு நடுவில் இந்த சங்கர நாராயணர் அழகாகக் கொலு வீற்றிருக்கிறார். இங்கு இவருக்கான கதை வேறு மாதிரியாக இருந்தாலும், அது ஒரு காட்சி என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். நாக தோஷம், பரிகாரம் என்று இங்கு வழிபாடு

நடத்தும் அன்பர்களே! இனியாவது வீட்டில் ஒற்றுமை, சகோதர ஒற்றுமை, நாட்டு ஒற்றுமை, உலக ஒற்றுமைக்காக வழிபாடு செய்யுங்கள். அதற்கான கோயில் தான் இது. நாமும் நலம் பெற்று நாடும் நலம்பெறும். இந்த மூர்த்தியின் திருவாசிகூட அவ்வளவு அழகு. சிவன் பகுதியில் சுடரும்- கீழே மழுவும், விஷ்ணு பகுதியில் கொடியும் – சங்கும், பாம்பு இருவருக்குமே பொதுவென மிக அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிக்கலை, விஸ்வகர்மா என்ற அந்த ஐந்து பிரிவு கொண்ட ஒரே குடும்பத்தின் கலை. இவற்றையெல்லாம் பற்றிக்கூடத் தனியே

ரசித்து எழுதும் அளவிற்கு ஏகப்பட்ட பொக்கிஷங்கள் உள்ளன. சரி. அடுத்துக் காட்டப்பட்டுள்ள சங்கர நாராயணர், தஞ்சைப் பெரிய கோயிலில் மாடத்தில் உள்ளவர். இங்குள்ள சிவ ரூபங்கள் ஒவ்வொன்றும் தனி ஆனந்தம்.

இருக்கட்டும்… அன்பர்களே! இத்தோடு இந்தத் தொடரை நிறைவு செய்து கொள்கிறேன். ஆண்டவன் அருளும் விருப்பமும் இருப்பின் மீண்டும் சந்திக்கலாம். எல்லாம் அவன் அருள்.எனக்கோ கைவலி, கால்வலி முதுகுவலிஎனப் பல வலிகள் வந்து விட்டன. வேறொன்றுமில்லை! இந்தச் சிற்பங்களையெல்லாம் பார்க்கும் போதெல்லாம், அதை வடித்தும், உயிர் கொடுத்தும், பெருமை தேடிக் கொடுத்ததுமான அந்த தெய்வீகச் சிற்பிகளுக்கு சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் பண்ணிப் பண்ணி ஏற்பட்ட வலிதான். அந்தந்த மூர்த்திகளுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேனோ, இல்லையோ! அந்த தெய்வீகச் சிற்பிகள், ஸ்தபதிகளுக்கு என் நெடுஞ்சாண்கிடையான நமஸ்காரம் என்றுமே உண்டு. ஆனந்தக் கண்ணீரோடும் - அளவிலாத பெருமையோடும். வணக்கம், அன்பு, நன்றி!

- சிற்பங்கள் (சிறிது) மெளனிக்கும்.

ஓவியர் பத்மவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x