

உலகில் திரும்பக் கிடைக்காத ஒரே சிம்மாசனம் தாயின் மடிதான் என்பதை அறிந்தவர்கள் நீங்கள். உங்களின் பிரபல யோகாதிபதியான சுக்கிரன் உங்களுடைய ராசியில் நிற்கும்போது இந்தப் புத்தாண்டு பிறப்பதால் கடந்த ஆண்டில் ஏற்பட்ட ஏமாற்றங்கள், இழப்புகள், பணப்பற்றாக்குறை இவையெல்லாம் இந்த ஆண்டில் நீங்கும். இந்த ஆண்டில் மற்றவர்களை நம்பி முடிவெடுக்காமல் நீங்களே நேரடியாக இறங்கி எல்லா காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் எடுப்பீர்கள்.
வெளியே கேட்டிருந்த தொகை வந்து சேரும். அண்டை மாநிலத்தை சார்ந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். நட்பு வட்டமும் விரிவடையும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. மனைவிக்கு வேலை கிடைக்கும். மகனின் அலட்சியப்போக்கு மாறும். படிப்பில் கவனம் செலுத்துவார். ஜூன் 18ம் தேதி முதல் குரு 7-ம் வீட்டில் அமர்ந்திருந்து உங்களுடைய ராசியை பார்க்க இருப்பதால் குழந்தை பாக்கியம் உண்டு. மகளின் கல்யாணத்தை எல்லோரும் அதிசயிக்கும்படி நடத்தி முடிப்பீர்கள். கண்டும் காணாமல் சென்றவர்களெல்லாம் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். நீண்ட நாட்களாக தடைபட்டுவந்த பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.
ஜூலை 14-ம் தேதி முதல் உங்களுடைய ராசிநாதனான சனியை விட்டு ராகு விலகுவதால் ஆரோக்கியம் அதிகரிக்கும். பருமனாக இருந்த நீங்கள் இளைப்பீர்கள். இளமை கூடும். கோபம் குறையும். தள்ளிப்போன காரியங்கள் நல்ல விதத்தில் முடிவடையும். சொந்த ஊர் பொது நிகழ்ச்சிகளையெல்லாம் முன்னின்று நடத்துவீர்கள். அரசாங்க விஷயங்கள் சாதகமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகளாலும் வேலையாட்கள், பங்குதாரர்களின் ஒத்துழைப்பின்மையாலும் லாபத்தை இழந்தீர்களே! இந்த ஆண்டின் மையப் பகுதியிலிருந்து திடீர் லாபம் உண்டு. நல்ல பங்குதாரர்கள் அமைவார்கள்.
செல்வாக்கு கூடும். வி.ஐ.பி.களும் வாடிக்கையாளர்களாக அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் எதிராக செயல்பட்ட அதிகாரியின் பிடியிலிருந்து விடுபடுவீர்கள். உங்களைப் புரிந்துகொள்பவர் புது அதிகாரியாக வருவார். வருடத்தின் பிற்பகுதியில் பதவி உயர்வு, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம்.
வழிபாடு - புற்று மாரியம்மன்
மதிப்பெண் - ஜனவரி - ஜூன் - 45/100, ஜூலை - டிசம்பர் - 80/100