

ஷிர்டி சாய்பாபா என்றாலே பக்தர்களுக்கு பலவித மான அனுபவங்கள் ஏற்பட்டதாகக் கூறுவது வழக்கம். இந்த நிலையில் பக்தர்களால் கொண்டாடப்படும் ஷிர்டி சாய்பாபாவுக்கு சமாதி அடைந்த நூற்றாண்டு நிகழ்வு, வரும் 2018-ம் ஆண்டு ஆராதிக்கப்படவுள்ளது.
திருச்சி அருகே அக்கரைப்பட்டியில் உள்ள “சமாதி மந்திர்’ இதற்கென விமரிசையாகத் தயாராகிறது. இங்கு பாபா, ஷிர்டியில் இருப்பது போன்றே இயற்கையாக இருபாறைகளுக்கிடையே வளர்ந்துள்ள வேப்பமரத்துக்கு அடியில் உறுதியான பாறையை ஆசனமாகக் கொண்டுள்ளார்.
இவருக்காக அரண்மனை போல ஒரு ஆலயம் அமையவுள்ளது. ஸ்ரீசாய் கற்பக விருக்ஷா டிரஸ்ட் நிறுவன அறங்காவலரும் என்.டி.சி. லாஜிஸ்டிக்ஸ் குழுமத் தலைவருமான கே. சந்திரமோகன், தன் கனவில் ஷிர்டி சாய்பாபா தோன்றிக் கூறியதால் இப்பணியில் ஈடுபட்டதாக தெரிவிக்கிறார்.
சாய்பாபாவின் பளிங்குச் சிலை
பிரம்மாண்டமான அரண்மனை போன்ற இக்கோயில், பதினைந்தாயிரம் சதுர அடியில், சுமார் ஏழு கோடி ரூபாய் செலவில் கட்டப்படவுள்ளது. இந்தப் புதிய கட்டிடத்தில் தலா 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட தரைத்தளத்தில் தியான மண்டபம், முதல் தளத்தில் பிரம்மாண்ட சாய்பாபாவின் பளிங்குச் சிலையுடன் கூடிய கோயில் ஆகியவை அழகிய வடிவமைப்புடன் கட்டப்படவுள்ளன என கே. சந்திரமோகன் தெரிவித்தார். இந்த பாபாவின் சமாதி மந்திரில், ஸ்ரீவிநாயகர், ஸ்ரீஆஞ்சநேயர், ஸ்ரீ கிருஷ்ணர், ஸ்ரீ தத்தாத்ரேயர் சன்னதிகளும் அமையவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
வெள்ளைச் சலவைக் கல்லில் செதுக்கப்பட்டுள்ள ஷிர்டி சாய்பாபா, கோயில் கட்டி முடிக்கும் முன்பே இங்கு கோயில் கொண்டுவிட்டதால் இங்கு தினந்தோறும் சிறியளவில் அன்னதானமும், வாரம்தோறும் வியாழனன்று சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயனுரும் வகையில் பிரமாண்ட அன்ன தானமும் விமரிசையாக நடைபெற்று வருகிறது என்கிறார் சந்திரமோகன்.
மகாராஷ்டிரத்தில் அவதரித்த ஷிர்டி சாய்பாபாவின் நூற்றாண்டான 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம், தென்னாட்டில் பிரமாண்டமாக பக்தர்களுக்கு அருள்பாலிக்க அருமையாக ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இதுவே அவரது புகழுக்கு சாட்சி. விருப்பம் உள்ளவர்கள் கட்டுமானப் பணியில் தங்களால் முடிந்த அர்ப்பணிப்பைத் தரலாம் என்றும் தெரிவித்தார் சந்திரமோகன்.