Published : 09 Jun 2016 10:56 AM
Last Updated : 09 Jun 2016 10:56 AM

தெய்வத்தின் குரல்: தேவர்கள் - அவதார புருஷர்கள்

“ஸ்வாமி ஒருவர்தானே! உங்களுக்கு மட்டும் என்ன முப்பத்து முக்கோடி தேவதைகள்?” என்று மற்ற மதஸ்தர்கள் நம்மைப் பரிகாசம் செய்கிறார்கள்.

ஸ்வாமி ஒருவர்தான். அவரைத்தான் நாம் பேச்சு வழக்கில் ‘தெய்வம்', ‘தெய்வம்' என்கிறோம். தெய்வம் என்றால் ‘விதி' என்றே அர்த்தம். விதி என்பது ஸ்வாமி நமக்குத் தருகிற கர்ம பலன்தான். ஆனால் நாம் ‘ஸ்வாமி ' என்ற அர்த்தத்திலேயே தெய்வம் என்ற பதத்தை உபயோகிக்கிறோம். அதோடு, அந்த தெய்வமும் தேவர்களும் ஒன்று என்று நினைத்துக் கொண்டு, ‘முப்பத்து முன்று கோடி தெய்வமானது' என்று நாமும் மற்ற மதஸ்தர்களோடு சேர்ந்துக்கொண்டு கேலியாக எண்ணுகிறோம்.

தெய்வம் (ஸ்வாமி) வேறு. தேவர்கள் வேறு. ஸ்வாமி ஒருவர்தான் என்பதே நமது மதம். அவரே மூன்று ரூபங்களை எடுத்துக்கொண்டு பிரம்மாவாக சிருஷ்டிக்கிறார். விஷ்ணுவாகப் பரிபாலிக்கிறார். ருத்திரனாக சம்ஹாரம் செய்கிறார்.

அல்ப சக்தர்களான நமக்கு வெவ்வேறு காலத்தில் வெவ்வேறு வேஷங்கள் ஏற்படுகின்றன. சர்வ சக்தரான சுவாமி ஒரே சமயத்தில் பல காரியங்களில் ஈடுபட்டுப் பல வேஷங்களையும் போடுவார்.

நாம் ஒரு சமயத்தில் ஒரு வேலைதான் செய்கிறோம். சுவாமி ஒரே சமயத்தில் சகல வேலையும் செய்வதால் எல்லா வேஷமும் போட்டுக்கொண்டிருக்கிறார். இவற்றை வெவ்வேறு தெய்வ வடிவங்களாகச் சொல்கிறோம்.

இந்த தெய்வ ரூபங்களில் மகாவிஷ்ணு, ஈசுவரன், அம்பாள், விக்நேசுவரர், சுப்ரம்மண்யர் போன்றவர்கள் ஒரு சமயத்தில் ஏதோ ஒரு மாதிரி காரியம் மட்டும் செய்தாலும்கூட அவர்களுக்கு உள்ளுக்குள் தாங்கள் முழுமுதல் ஸ்வாமிதான் என்று தெரியும். அதனால் அவர்கள் பக்தர்களுக்கு மோக்ஷபரியந்தம் எல்லா அநுக்கிரஹங்களும் செய்வார்கள்.

ஆனால், தேவர்கள் யாவரும் இப்படி முழு ஸ்வாமியாகத் தங்களைத் தெரிந்துகொண்டிருக்கிற தெய்வ வரிசையைச் சேர்ந்தவரல்ல. அவர்கள் யார் என்று சொல்கிறேன்:

ஸ்வாமி சிருஷ்டித்துள்ள எண்ணி முடியாத அண்டங்களில் இருக்கும் பிராணிகளுக்கெல்லாம் இருக்க இடம், உண்ண உணவு முதலியன வேண்டியிருக்கின்றன. ஆகாயம், காற்று, தீ, நீர், மண் இந்த பஞ்ச பூதங்களைப் பலவிதங்களில் கலந்தே அவர் இத்தனை பிராணிகளுக்கும் வாழ்வுக்கான உபகரணங்களைத் தந்திருக்கிறார்.

பஞ்சபூதங்களும், அவற்றின் தினுசான கலவைகளும் (Mixture) பிராணிகளுக்கு இதமாக அமைந்து அவர்களை ரக்ஷிக்க வேண்டும். இவ்விதம் அவற்றை நமது வாழ்வுக்கு அனுகூலமாக்கித் தரும் பொறுப்பை 'தேவர்கள்' என்ற இனத்துக்கு ஸ்வாமி அளித்திருக்கிறார்.

ஒரு ராஜா அல்லது ராஜாங்கம் பஞ்ச பூதங்களில் தனக்குரிய பூமி, கடல் பிரதேசம், வானவெளி இவற்றைக் காப்பாற்றத் தரைப்படை, கப்பற்படை, விமானப்படை இவற்றை வைத்திருப்பது போல், ஈசுவரனும் பஞ்ச பூதங்களைக் காப்பாற்ற தேவர்களின் சைன்னியத்தை வைத்திருக்கிறார்.

மனிதர்களுக்குள்ளேயே நீக்ரோ இனம், மங்கோல் இனம் (race) என்றெல்லாம் இருப்பதுபோல் தேவர்களுக்குள்ளும் கின்னரர், கிம்புருஷர், யக்ஷர், சித்தர், சாரணர், சாத்யர், கந்தர்வர் என்று பல வகைகள் உண்டு.

தேவர்களை ஊனக் கண்ணால் பார்க்க முடியவில்லை. அதனால், இல்லை என்று சொல்லிவிடக் கூடாது. காற்று கண்ணுக்குத் தெரியாததுபோல், அவர்கள் தெரியாமல் இருக்கிறார்கள். ஆனால், விசிறிக்கொண்டால் காற்றை நாம் அநுபவிப்பதுபோல், கர்மாநுஷ்டானங்களைச் செய்தால் தேவர்களின் அநுக்கிரகத்தை அநுபவத்தில் நிச்சயமாகப் பெறலாம்.

நாம் கர்மாநுஷ்டானம் செய்வதற்கும், தேவர்களுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று கேட்பீர்கள். சொல்கிறேன். ராஜாங்கம் நியமித்துள்ள அதிகாரிகளுக்கு ராஜாங்கம் சம்பளம் தருகிறது. ஆனால், சம்பளம் தருவதற்கு ராஜாங்கம் எங்கிருந்து பணம் பெற்றது? பிரஜைகளிடமிருந்துதான் வரியாகப் பெறுகிறது.

அப்படியே ஸ்வாமி நம்முடைய கர்மாநுஷ்டானங்களில் இருந்தே தேவர்களுக்கு வேண்டிய ஆகாரத்தைப் பிரித்துத் தருகிறார். நமக்கு பஞ்ச பூதங்களை அநுகூல மாக்கித் தரும் தேவர்களுக்குப் பிரதியாக நாம் யாகம், யக்ஞம் செய்து ஆகாரம் தருகிறோம்.

கர்மாநுஷ்டான வரி செலுத்தினாலே தேவ அதிகாரிகளின் சகாயத்தைப் பெற முடியும். பல விதமான உயிரினங்களில் புழுவுக்கும் மனிதனுக்கும் இடையில் எத்தனை வித்தியாசம் இருக்கிறது? மனிதனுடைய பழக்கங்களைப் புழு புரிந்துகொள்ள முடியுமா? அப்படியே தேவர்களின் வழிமுறைகளை நாம் புரிந்துகொள்ள முடியாது.

தேவ வகையைச் சேர்ந்தவர்களுக்கு நம்மைப்போல் மூப்பு, மரணம் இவை இல்லை. அவர்களுக்கு நம்மைவிட சக்தி மிகவும் அதிகம். இருந்தாலும் அவர்கள் நம்மிடமிருந்தே ஆஹுதி பெறுமாறு பகவான் வைத்திருக்கிறார்.

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x