

பிரம்ம தேசத்தில் உள்ள கைலாச நாதர் கோயிலில், மார்ச் 25-ம் தேதி சனிக்கிழமையன்று நடைபெற உள்ள மகா பிரதோஷ வழிபாட்டின்போது, லட்சத்து எட்டு தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபட உள்ளனர். அன்றைய தினம் நடைபெற உள்ள அபிஷேக ஆராதனையில் சுவாமி, அம்பாள், நந்திகேஸ்வரர் ஆகிய திவ்ய மூர்த்திகளுக்கு 1008 செவ்விளநீர் பயன்படுத்தப்பட உள்ளது. அபிஷேகம் நிறைவுற்ற பின் ஆயிரக்கணக்கான செண்பகம், தாமரை, மனோரஞ்சிதம் ஆகிய மூன்று மலர்களால் மட்டும் அலங்காரம் செய்யப்படுவது விசேஷமான அம்சம்.
ஏழு நிலைகளுடன் திகழும் கம்பீரமான வானுயர்ந்த ராஜகோபுரத்துடன் காண்போரின் மனதில் பிரம்மிப்பை ஏற்படுத்தும் கலைநயமிக்க, பிரம்மாண்டமான இக்கோயிலில் ஸ்ரீபிரஹந்நாயகி ஆம்பாளுடன் ஸ்ரீகைலாசநாதர் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய சிறப்புகளை உடையது இத்திருக்கோயில்.
தல வரலாறு
சிவசைல மலையில் வாழ்ந்துவந்த அத்ரி முனிவரிடம் தான் பிரம்மதேசம், திருவாலீஸ்வரம் மற்றும் சிவசைலம் ஆகிய திருத்தலங்களில் சுயம்புவாக அருள்பாலிப்பதாக சிவபெருமான் கூறினார் என பிரமாண்டப் புராணத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஆதிமூல லிங்கம்
இத்திருக்கோயிலின் ஆதிமூல லிங்கம் எனக்கூறப்படும் ஸ்ரீபதரிவனேஸ்வரர் என்ற சுயம்புலிங்கம் இலந்தை மரத்தடியில் உள்ள மிகப் பழமையானது. பிரம்மாவின் பேரன் ரோமஸ மஹரிஷியால் பூஜிக்கப்பட்ட இந்த இலந்தையடி நாதரையும் இலந்தை மரத்தையும் பிரதட்சணம் செய்வதால் சகல தோஷங்களும் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம்.
தனிச் சிறப்புகள்
பிரம்மதேசத்தில் அருளாட்சி செய்யும் ஸ்ரீ கைலாச நாதரை சூரிய பகவான் உத்தராயணம், தக்ஷிணாயனம் ஆகிய இரண்டு காலங்களிலும் கருவறை வரையில் வழிபடும் ஆனந்தக் காட்சியை அனுதினமும் காணலாம். பிரம்மதேசத்தில் ஓடிக்கொண்டிருக்கும் கடனா நதியானது தெற்கிலிருந்து வடக்கு நோக்கி ஸ்ரீ கைலாச நாதரை வலம் வருவதால் காசிக்குச் சென்று சிவதரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. தென்மாவட்ட நவக்கிரஹ ஸ்தலங்களில் சூரியன் ஸ்தலமாகவும், பஞ்ச பீட ஸ்தலங்களில் கூர்ம பீடமாகவும் உள்ளது இத்திருக்கோயில்.
தனித்துவமிக்க சன்னிதிகள்
பிட்சாடனர் சபை மண்டபத்தில் சிவபெருமான் கங்காளநாதராக சகல தேவதைகளுடன் அருள்பாலிக்கிறார். சுமார் 7 அடி உயரமும், 250 கிலோ எடையும் கொண்ட இந்தச் சிலைக்குப் பாதத்தின் பிடியைத் தவிர எந்தப் பிடிமானமும் இல்லாதிருப்பது வியக்க வைக்கிறது. புவியீர்ப்பு மையம் செயல்படும் போக்கைக் கணித்துப் பிடிமானமில்லாமல் சிலை அமைத்திருக்கின்றனர் அந்தக் கால அற்புதச் சிற்பிகள்.
கால்மாற்றி, தனக்குத்தானே உபதேசம் செய்து அருளும் ஸ்ரீஆத்ம வியாக்கிய தக்ஷிணாமூர்த்தி சப்த கன்னிகள் அருகில் வீற்றிருக்கிறார். இவரை வழிபட்டால் மாணவர்கள் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சிபெற்றுக் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை.
புனுகு சபாபதி எனும் கல்லால் ஆன சிலா ரூப நடராஜரை சுவாமி சன்னிதியின் வடக்குப் பிராகாரத்தில் காணலாம். இவ்வூர் மக்களின் பாதுகாப்புக்கென ராஜராஜசோழன் தன்னுடைய படைவீரர்கள் நாலாயிரம் பேரை இங்கு காவல் வைத்திருந்தான். அந்த வீரர்கள் வணங்கிய காளிக்கு ஸ்ரீ நாலாயிரத்தம்மன் என்றே பெயர். அந்த அம்மனின் உற்சவமூர்த்தியை அம்மன் சன்னிதி உட்பிராகாரத்தில் காணலாம்.
கலைநயம் காட்டும் நந்தி
பீடம் உட்பட நந்திகேஸ்வரரின் வால் வரை ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சிலாரூபம் அழகிய சிற்ப வேலைப்பாட்டுடன் அமைந்துள்ளது. இதில் மணிகள், சலங்கைகள், பட்டைகள், ஆபரணங்கள் ஆகிய அனைத்தும் மிகுந்த கலைநயத்துடன் செதுக்கப்பட்டுள்ளன. கூரை போன்ற அமைப்பைக் கொண்ட முன் முகப்பு மண்டபமும் தனிச் சிறப்பு கொண்டதாக அமைந்துள்ளது.
ஒரே கல்லில் உருவாக்கப்பட்ட மூன்று சங்கிலியுடன் கூடிய மணி, தாமரையைக் கவிழ்த்து வைத்தாற்போன்ற கொடி மர பீடத்தின் வேலைப்பாடுகள், யாளி வாயில் இருந்து வெளியே வராத கல் உருண்டை, இருபது யாளிகள் தாங்கி நிற்கும் தூண்கள் கொண்ட திருவாதிரை மண்டபம் என இக்கோயிலின் கலைநயங்கள் ஏராளம்.
எங்குள்ளது?
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது பிரம்மதேசம். இதை சதுர்வேதிமங்கலம் என்றும் சொல்வர். கோயில் நடை திறந்திருக்கும் நேரம் காலை 7.30 மணி முதல் 10.00 மணி வரைமாலை 5.30 மணி முதல் 7.30 மணி வரை