

காக்கும் கடவுளான நாராயணனே நாம சங்கீர்த்தனத்தின் சிறப்பை பக்தர்களுக்கு விளக்க கிருஷ்ண சைதன்யராக அவதரித்ததாக கருதப்படுகிறது. கபீர்தாசர், சூர்தாசர், துக்காராம், ஞானேஸ்வரர், ஏக்நாத், ஜக்குபாய், மீரா போன்ற எண்ணற்ற ஞானிகள் நாமசங்கீர்த்தனத்தின் பெருமையை தங்களின் வாழ்க்கை லட்சியமாகவே கொண்டிருந்தனர்.
இவர்களின் வழியில் ஸ்ரீசாய் பஜன் மண்டலியின் மூலமாக சென்னையிலிருக்கும் ஆலயங்களில் நாமசங்கீர்த்தனம் செய்யத் தொடங்கி, தமிழகத்தின் சிவகாசி, கோயம்புத்தூர், பல மாவட்டங்களிலும், ஆந்திரா மற்றும் பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளிலும் பக்தி இசை நிகழ்ச்சிகளை நடத்திவருகின்றனர் சாய்ராமும் அவரின் தங்கை ஸ்ரீமாத்மிகாவும். கர்னாடிக், ஹிந்துஸ்தானி, நாமசங்கீர்த்தனம் சேர்ந்த ஒரு புதிய பாணியை தங்களுக்கென உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர் இந்தக் குழந்தைகள். எத்தனையோ இசை வகைகளில் நாமசங்கீர்த்தனத்தை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்றதற்கு நீண்ட விளக்கமே அளித்தனர் சாய்ராமும் ஸ்ரீமாத்மிகாவும்.
நாமசங்கீர்த்தனத்தின் பெருமை
இறைவனை விட இறைவனின் நாமமே சிறந்தது என்பார்கள் அருளாளர்கள். அதனால்தான் நாமசங்கீர்த்தனம் என்பதே இறைவனை உபாசனை செய்வதில் மிக உயர்ந்த மார்க்கமாக விளங்குகிறது. ராமா, கிருஷ்ணா என்னும் நாமங்களே, தீமைகள் நம்மை அண்டாமல் தடுத்திடும் வல்லமை உடையது என்றனர் சாய்ராமும் ஸ்ரீமாத்மிகாவும்.
சாய்ராமும் ஸ்ரீமாத்மிகாவும் அவர்களின் தந்தை சாயி வரதனிடமே இசை படித்திருக்கின்றனர். இவர்களின் தாய் உமா மகேஸ்வரி மற்றும் தந்தை சாயி வரதனின் ஆதரவுடன் ஏறக்குறைய 20 குழந்தைகள் கொண்ட குழுவுடன் சாய்ராமும் ஸ்ரீமாத்மிகாவும் இசை நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர்.
திருப்பதியில் நாதநீராஞ்சனம்
“மிகவும் சிறிய வயதிலேயே கிருஷ்ண கான சபா, முத்ரா சபா, வாணி மகால், பாரதிய வித்யா பவன் உள்ளிட்ட முக்கிய சபாக்களில் நாமசங்கீர்த்தனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளை செய்யத் தொடங்கிவிட்ட சாய்ராமும் ஸ்ரீமாத்மிகாவும், சமீபத்தில் திருப்பதி வெங்கடேச பெருமாள் ஆலயத்தில் நாதநீராஞ்சனம் செய்துவிட்டு வந்திருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை திருப்பதி தேவஸ்தானத்தால் நடத்தப்படும் ஸ்ரீவெங்கடேஸ்வர பக்தி தொலைக்காட்சியிலும் ஒளிப்பதிவு ஆகியிருக்கின்றது.
உருக்கும் அலைபாயுதே
`பாண்டுரங்கா…’ என உச்ச ஸ்தாயியில் ஸ்ரீமாத்மிகாவின் குரலுக்கேற்ப தபேலாவில் சாய்ராமின் விரல்கள் இசைக் கோலமிடுகின்றன. மிருதங்கம், டோல்கீ, டோலக், ஜம்பே, பாங்க்ரா, கோல் போன்ற வாத்தியங்களையும் வாசிக்கும் திறமை பெற்றுள்ளார் சாய்ராம். ஸ்ரீமாத்மிகாவோ நாமசங்கீர்த்தனம் தவிர, பக்தி இசைப் பாடல்கள், கஸல், கவாலி, இந்துஸ்தானி இசை வகைகளிலும் பாடும் திறமை பெற்றிருக்கிறார். உள்ளத்தை உருக்கும் வகையில் ஊத்துக்காடு வேங்கடகவியின் `அலைபாயுதே கண்ணா’ பாடலைப் பாடுவார் பித்துக்குளி முருகதாஸ். அவர் பாடிய பாணியில் அந்தப் பாட்டை ஹார்மோனியத்தில் வாசித்து அசத்துகிறார் ஸ்ரீமாத்மிகா.
உலக அளவில் பரவும் இசை
தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, சம்ஸ்கிருதம், கன்னடம், சவுராஸ்டிரம், பஞ்சாபி, மராட்டி, உருது, அரபிக் பத்து மொழிகளில் பாடுவேன். `தானுஜயே கா… தானுஜயே கா…’ என்னும் உருதுப் பாடலாக இருந்தாலும் சரி, `கின்கின் தாரே லங்குதியராத்தா’ என்னும் பர்ரி நிஸாமியின் கஸலாக இருக்கட்டும், சாகர் ஸித்திக்கின் உருது கஸல்களாகட்டும் மாத்மிகாவின் குரல் அவ்வளவு உருக்கமாக ஒலிக்கிறது. இவர்களின் இசை நிகழ்ச்சிகளை தென்னமெரிக்காவிலிருக்கும் பஞ்சாபியரான பால்ராஜும், வாகா எல்லையிலிருக்கும் குர்ரான் இம்தியாஸும் தங்களின் இணைய பக்கங்களில் பதிவிட்டிருக்கின்றனர். இதன் மூலம் ஸ்ரீமாத்மிகாவின் கவாலி, கஸலுக்கு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அமெரிக்காவிலும் ரசிகர்கள் இருக்கின்றனர்.