Published : 01 Sep 2016 10:35 AM
Last Updated : 01 Sep 2016 10:35 AM

திருத்தலம் அறிமுகம்: வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் கோயில்- வாலிக்கு பலம் தந்த ஈசன்

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயில் - ராமபிரானே நேருக்கு நேர் நின்று போரிடத் தயங்கிய வாலிக்கு, சிவபெருமான் வரம் அருளிய திருத்தலம். பெரும்பலூருக்கு 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது வாலிகண்டபுரம். தனக்குப் பதிலாக கிட்கிந்தையை ஆட்சி செய்த தம்பி சுக்ரீவனை வீழ்த்தப் போர் வியூகம் அமைத்தான் அண்ணன் வாலி. அப்போது வனவாசத்தில் இருந்த ராமபிரானின் உதவியை நாடினான் சுக்ரீவன்.

வாலியோ, `தன்னை எதிர்த்து யார் நின்றாலும் அவர்களின் பலத்தில் பாதி எனக்குக் கிடைக்க வேண்டும்’ என சிவபெருமானிடமே வரம் பெற்றவன். இந்த உண்மை தெரியாமல், தனது பரிவாரங்களை சுக்ரீவனுக்கு அளித்து வாலியோடு போரிடுவதற்கு அனுப்பினார் ராமபிரான்.

சிவபெருமான் தந்த வரத்தால் தம்பியின் பலத்தில் பாதியைப் பெற்ற வாலி, சுக்ரீவனை அசுரபலம் கொண்டு துரத்தினான். சிவபெருமானிடம் பெற்ற வரத்தால்தான் வாலியை நேருக்கு நேராய் வீழ்த்த முடியவில்லை என்பதை அறியும் ராமபிரான், மீண்டும் சுக்ரீவனை வாலியோடு போரிட அனுப்பிவிட்டு, நேருக்கு நேர் செல்லாமல், மரத்தின் பின்னால் மறைந்திருந்து அம்பை எய்து வாலியை வீழ்த்தினார்.

மூன்று நந்திகள்

அன்றைக்கு அப்படி கிட்கிந்தை வனத்தில் வாலி, சிவபெருமானை வழிபட்ட இடம்தான் இப்போது வாலிகண்டபுரமாக விளங்குகிறது. இங்கே, வாலி வழிபட்ட சிவபெருமான் வாலீஸ்வரராகவும் அம்பாள் வாலாம்பிகையாகவும் வீற்றிருக்கிறார்கள். சிவன் இங்கே சுயம்பு லிங்கமாக காட்சி தருகிறார். பொதுவாக சிவபெருமானுக்கு எதிரே ஒரு நந்திதான் இருக்கும். ஆனால் இங்கே, பாலநந்தி, யவனநந்தி, விருத்தநந்தி என மூன்று நந்திகள் இருப்பது சிறப்பு. எதிரிகளை வீழ்த்த வாலிக்கு வரம் தந்த வாலீஸ்வரரை வணங்கினால் சத்ரு தோஷங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

குழந்தை வரம்

அம்பாளே இங்கே துர்கை சொரூபிணியாகக் காட்சி கொடுப்பதால் இத்திருத்தலத்தில் துர்கைக்குத் தனியான சன்னிதி இல்லை. பொதுவாக, அம்பாளுக்கு எதிரில் ரிஷப வாகனம் தான் இருக்கும். ஆனால், இங்கே சிம்ம வாகனத்தைப் பார்க்க முடிகிறது. ஆடிப்பூர திருநாளின்போது அம்மனுக்கு வளையல் காப்பு சாற்றி அந்த வளையல்களை பக்தர்களுக்கு வழங்குகிறார்கள். இந்த வைபவத்தில் வாலாம்பிகையை தரிசித்து, வளையல்களைப் பெற்றுச் சென்றால் குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அந்த பாக்கியம் கைகூடிவரும் என்பது நம்பிக்கை.

பாலதண்டாயுதனுக்கு பங்குனி உத்திரம் விழா

மகா சிவராத்திரியின்போது நடைபெறும் அன்னாபிஷேகமும், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரப் பூஜைகளும் வாலீஸ்வரருக்கு விசேஷமான வைபவங்கள். அம்பாள் சிவனுக்கு அடுத்தபடியாக இங்கே முருகப் பெருமான் போற்றப்படுகிறார். சிவன் - அம்பாளுக்கு காவல் தெய்வமாகவும் கருதப்படும் கந்தப் பெருமான், பால தண்டாயுதபாணியாக கம்பீரமாக நிற்கிறார். அருணகிரிநாதருக்குத் திருவண்ணாமலைக்கு வழிகாட்டிவிட்டதால் இங்கே கந்தன் வடக்கு நோக்கி சன்னிதி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவருக்காகவே பங்குனி உத்திரத்தின்போது மூன்று நாள் திருவிழா இங்கே களைகட்டுகிறது.

மகா சிவராத்திரியின்போது நடைபெறும் அன்னாபிஷேகமும், கார்த்திகை மாதத்தில் வரும் சோமவாரப் பூஜைகளும் வாலீஸ்வரருக்கு விசேஷமான வைபவங்கள். அம்பாள் சிவனுக்கு அடுத்தபடியாக இங்கே முருகப் பெருமான் போற்றப்படுகிறார். சிவன் - அம்பாளுக்கு காவல் தெய்வமாகவும் கருதப்படும் கந்தப் பெருமான், பால தண்டாயுதபாணியாக கம்பீரமாக நிற்கிறார். அருணகிரிநாதருக்குத் திருவண்ணாமலைக்கு வழிகாட்டிவிட்டதால் இங்கே கந்தன் வடக்கு நோக்கி சன்னிதி கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இவருக்காகவே பங்குனி உத்திரத்தின்போது மூன்று நாள் திருவிழா இங்கே களைகட்டுகிறது.

பயத்தைப் போக்கும் கபால பைரவர்

பிரகாரத்தில் வாலீஸ்வரருக்கு வலது பக்கமாய் ஒரே கல்லில் 1008 லிங்கங்கள் வடிக்கப்பட்ட பெரிய லிங்கம் ஒன்றும் உள்ளது. இந்த லிங்கத்தை வழிபட்டால் 1008 சிவாலயங்களுக்குச் சென்று வழிபட்டதற்கான பலனை அடையலாம் என்பது நம்பிக்கை. பைரவர் இத்திருத்தலத்தில் மண்டை ஓட்டு மாலை அணிந்து கபால பைரவராக காட்சி தருகிறார். தேய்பிறை அஷ்டமியில் கபால பைரவருக்கு வேப்ப எண்ணெய் தீபம், மிளகு தீபம் போட்டால் பில்லி - சூனியம், திருஷ்டிகள் கழியும் என்பது நம்பிக்கை.

மன்னர்கள் வழிபட்ட சேஷ்டா தேவி

இத்திருத்தலத்தில் சேஷ்டா தேவி என்றொரு அம்மனும் இருக்கிறார். இந்த அம்மனைத் தங்களின் குலதெய்வமாக வழிபட்ட சோழ மன்னர்கள், போருக்குப் போகும் முன் இந்த அம்மனை வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள். பயபக்தியுடன் வழிபட்டால் எதிரிகளை மந்தமாக்கி வெற்றிகளைத் தருவாள் சேஷ்டா தேவி என்ற நம்பிக் கை இங்கே நிலவுகிறது.

படங்கள்: பேபி சாரா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x