

புத்தர் தன்னை நாடி வரும் மக்கள் அனைவரையும் சமமாகப் பாவித்தார். புத்தரின் இந்தக் குணம்தான் அவரை மற்றத் துறவிகளிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டியது.
எடுத்துக்காட்டாக, கோசலை நாட்டு மன்னன் பிரசன்னஜித் ஒரு முறை புத்தரைத் தேடி வந்து, உலகப் பந்தங்களில் இருந்து விடுபட்ட உண்மைத் துறவியை இனம் காண்பது எப்படி என்று கேட்டார். புத்தர் அதற்கு, "உன்னால் அது கடினம், அரசனே! ஏனென்றால் நீ இன்னும் குடும்பஸ்தனாகவே இருக்கிறாய். உன் படுக்கை அறை நிறைய குழந்தைகள் நிறைந்திருக்கிறார்கள்! பனாரஸில் இருந்து வரவழைக்கப்பட்ட சந்தனத்தைப் பூசிக்கொண்டு, மாலைகள் அணிந்து, தங்க வெள்ளி ஆபரணங்களை அணிவித்துக்கொண்டு வாழும் அரசன் நீ! துறவு வாழ்க்கை பற்றி நீ அறிந்துகொள்வது கடினம்" என்றார்.
ஆனால் அதேநேரம், உயர் பதவியும் சமூக அந்தஸ்தும் அற்ற பலரிடம் புத்தர் மிகவும் அன்பாகப் பேசி இருக்கிறார். மாடு மேய்க்கும் நந்தன் ஒரு நாள் நானும் பௌத்தத் துறவியாக வேண்டும் என்று, தன் விருப்பத்தைப் புத்தரிடம் தெரிவித்தான்.
உடனே புத்தரும், "மாடுகளை அவற்றின் உரிமையாளரிடம் ஒப்படைத்துவிட்டு வா" என்றார். நந்தனும் அப்படியே செய்ய, அவனுடைய நேர்மையை மெச்சி, தானே சடங்குகளைச் செய்து அவனைப் பௌத்தத் துறவியாகப் புத்தர் மாற்றினார். அதேபோல, சமூகத்தின் தாழ்ந்த நிலையில் இருந்த முடிதிருத்துபவரான உபாலி, நடிகர் தலபுட்டோ ஆகியோரை, பார்ப்பனர்களான சரிபுட்டா, மொக்லானா ஆகியோரைப் போலவே சமமாகப் பாவித்துத் தன் சபையில் புத்தர் சேர்த்துக்கொண்டார்.
தான் உபதேசிக்கச் சென்ற இடமெல்லாம் அனைத்துத் தரப்பினரையும் புத்தர் சந்தித்தார். குயவன் பாகவாவைச் சந்தித்து, "பாகவா, உனக்குச் சம்மதம் என்றால் உன் குடிசையில் ஒரு நாள் இரவை கழிக்க நான் விரும்புகிறேன்" என்றார்.
குயவனோ, "எனக்கு ஆட்சேபணை இல்லை. ஆனால், இந்த மழைக்காலத்தைக் கழிக்க இன்னொரு துறவி என் குடிசையில் ஏற்கெனவே இருக்கிறார். நீங்கள் இங்கே தங்குவதற்கு அவருடைய சம்மதத்தைப் பெற வேண்டும்" என்றான். அந்தத் துறவியின் சம்மதத்தைப் பெற்ற பின்னரே புத்தர் குடிசையில் நுழைந்தார்.
குடிசையின் ஒரு ஓரத்தில் தான் அமர்வதற்காக வைக்கோலைப் புத்தர் பரப்பிக் கொண்டிருந்தார். அப்போது புத்தரிடம் பேசிய மற்றொரு துறவி, "நான் கௌதமர் என்னும் சாக்கியர் ஒருவரைத் தேடிக்கொண்டு இருக்கிறேன். அவர் புகழ்தான் நாடெங்கிலும் பரவியுள்ளதே!" என்றார். அவருடைய தேடல் முடிந்துவிட்டது என்பதைக் கூறாமலேயே, புத்தர் அவருக்கு உபதேசிக்கத் தொடங்கினார்.
அந்நாளில் வழக்கத்தில் இருந்த சமூக அந்தஸ்து அமைப்பைப் புத்தர் விரும்பவில்லை. தன் பிறப்பாலும், பிறந்த சாதியாலும் தான் ஒருவன் சமூக அந்தஸ்தை அன்றைக்குப் பெற முடியும். புத்தர் காலத்தில் வட இந்தியாவில் இந்தச் சமூக அமைப்பு மாற்றம் காண ஆரம்பித்தது. மக்கள்தொகை அதிகமாகவே, காட்டை அழித்து விவசாயம் செய்ய நிலங்கள் திருத்தப்பட்டன. நிறைய இரும்புக் கருவிகள் இதற்காகப் பயன்படுத்தப்பட்டன. பழங்குடிகள் விவசாயிகளாக மாறினர். வர்த்தகம் வளரவே, நிறைய நகரங்களும் உருவாகின. மாறி வரும் இந்தச் சமுதாய அமைப்பில், புத்தரின் உபதேசங்களுக்கு நல்ல மதிப்பு இருந்தது. புத்தருக்கு அன்றைய குருமார்கள் செய்த பூஜை சடங்குகளில் நம்பிக்கை இல்லை. மனிதன் எப்படி வாழ்கிறான் என்பதில்தான் தன் கவனத்தைச் செலுத்தினார். அதனால் சடங்குகள், தூய்மையான சடங்குகள், தூய்மையற்ற சடங்குகள் ஆகியவற்றைப் பற்றி கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்விகள் சாதி அமைப்பை மறைமுகமாகச் சாடின. துறவறச் சபையைச் சேராத சாதாரண மக்களுக்கு அறிவுறுத்தப் பௌத்தச் சங்கத்தில் சாதி அமைப்புக்கு நேரடி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தனது உரையொன்றில், இந்தியாவில் பாயும் ஐந்து பெரும் ஆறுகளைக் குறிப்பிட்டு, "இந்தத் தனி ஆறுகள் ஒவ்வொன்றும் கடலில் கலந்து ஒன்றாவது போல, பௌத்த சங்கத்தில் சேர்பவர்கள் தங்கள் சாதி, அந்தஸ்து, பிறப்பு ஆகியவற்றைக் கைவிட்டு அனை வருமே சக துறவிகளாக மாறுகின்றனர்" என்றார் புத்தர்.
நன்றி: இளைஞர்களுக்கான புத்தர்,
எஸ்.பட்டாச்சார்யா, என்.பி.டி. வெளியீடு