Published : 23 Jun 2016 12:00 PM
Last Updated : 14 Jun 2017 01:35 PM
ஸ்ரீ சுகப்பிரம்ம ரிஷி ஜெயந்தி: ஜூன் 23
வியாசர் மகாபாரத காப்பியத்தை எழுதி முடித்தார். ஆனாலும் அவருக்கு மன நிம்மதி ஏற்படவில்லை. அப்போது அங்கு வந்த நாரதர், மனம் அமைதியுற கண்ணனின் லீலைகளை தொகுக்கலாம் என்று கூறினார். இந்தப் பணியைச் சிரமேற்கொண்ட வியாசர், மத் பாகவதம் என்ற பெயரில், கண்ணன் பிறந்தது முதல் அவனது லீலைகளை எழுதினார்.
மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று கூறிய கிருஷ்ணர், முனிவர்களுள் நான் வியாசராக இருக்கிறேன் என்கிறார். இந்த வியாசரின் மகனே சுகப் பிரம்மம். ஆசாபாசங்களைத் துறந்தவர். இவரது ஜெயந்தி இம்மாதம் 23-ம் தேதி வருகிறது. இவரை மனதால் பூஜித்தால் பல நற்செயல்கள் நடைபெறும் என்பது நம்பிக்கை.
சுகர் பிறப்பு
கிருதாசீ என்ற தேவமங்கையின் அழகில் மயங்கிய வியாசர், அவளிடம் மனதைப் பறி கொடுத்தார். அவளோ கிளியாக மாறினாள். ஆனாலும் கர்ப்பம் தாங்கினாள். ரிஷி கர்ப்பம் ராத்தங்காது என்பார்கள். உடனடியாக அவளுக்கு மகன் பிறந்தான். அக்குழந்தைக்கு முகம் கிளி போன்றும், உடல் மனிதனைப் போன்றும் இருந்தது. சுகா என்றால் கிளி. அதனால் கிளி முகம் கொண்ட அக்குழந்தைக்கு சுகர் என்று பெயரிட்டனர் பெற்றோர்.
சிறுவனாக மாறிய குழந்தை
அக்குழந்தையை தேவலோகத்திற்கு எடுத்துச் செல்ல இயலாததால், வியாசரிடமே கொடுத்துவிட்டாள் கிருதாசீ. வியாசரும் அக்குழந்தையைப் புனித நீராட்ட, சிறுவனாக உருமாறினார் சுகர். பிறப்பிலேயே ஞானியாக விளங்கினார்.
ஒரு நாள் இவர் கங்கைக் கரையோரம் சென்று கொண்டிருந்தார். பின்னால் வெகு தூரத்தில் வந்த வியாசர், சுகா, சுகா என்று கூப்பிட்டாராம். சுகர் பிரம்மம் ஆனதால், அருகில் இருந்த மரம், மட்டை கல், மணல் எல்லாம், தங்களைத்தான் கூப்பிடுகிறார் என்றெண்ணி `என்ன? என்ன?’ என்று கேட்டனவாம்.
இவற்றில் சுகரின் குரல் இல்லாததால், தொடர்ந்து கரையோரமாகவே வேகமாகச் சென்றாராம் வியாசர். அப்போது ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த பெண்கள் சட்டென்று ஆடையின் மூலம் தங்களை மறைத்துக்கொண்டார்கள். இதனைக் கவனித்த வியாசர், “வாலிபனான சுகர் உங்களைக் கடந்து போகும்பொழுது, ஆடை பற்றிக் கவலைப்படாத நீங்கள், துறவியான நான் வரும்போது மட்டும் ஆடையை அவசர அவசரமாக அணிவது ஏன்?” என்று கேட்டாராம். அதற்கு அப்பெண்கள், “அவர் பிரம்ம ஞானி. அவருக்கு ஆண், பெண் வித்தியாசம் தெரியாது” என்றார்கள்.
அத்தகைய பிரம்ம ஞானியான சுகரை நினைத்தாலே உள்ளம் அமைதியுறும் என்பது நம்பிக்கை.
சாபம் பெற்ற பரீட்சித்து
அர்ச்சுனனின் மகன் அபிமன்யுவின் மனைவி உத்தரை. இவள் கருவுற்றாள். இவளுக்கு ஓர் ஆண் குழந்தை பிறக்கிறது. அஸ்வத்தாமன் சாபத்தால் இறந்து பிறந்த இந்தக் குழந்தையை உயிர்ப்பித்துப் பாண்டவ வம்சத்தைக் காத்தவர் கிருஷ்ணர்.
பரீட்சித்து பின்னாளில் ஹஸ்தினாபுரத்து மகாராஜாவாக ஆனபோது, வேட்டையாடக் காட்டுக்குச் சென்றான். அங்கு முனிவர் குடிலொன்றைக் கண்டான். தாகத்திற்கு நீர் கேட்டு நின்றான். தவ சிரேஷ்ட்டரான முனிவர் காதில் விழவில்லை. கோபமுற்ற மன்னன், அருகில் செத்துக் கிடந்த பாம்பை எடுத்து முனிவருக்கு மாலையாக்கினான். இதனைக் கண்ட முனிவரின் மகன், அம்மன்னன் ஏழே நாட்களில் இறந்துவிடுவான் எனச் சாபமிடுகிறான்.
ஸ்ரீமத் பாகவத சப்தாகம்
சாபம் பெற்ற பரீட்சித்து, உடனடியாகத் தன் மகன் ஜனமேஜயனுக்குப் பட்டாபிஷேகம் செய்வித்தான். பொறுப்புகளை அவனிடம் ஒப்படைத்துவிட்டு, கங்கைக் கரையில் சென்று தவம் செய்யத் தொடங்கினான். இந்த வேளையில் அங்கு வந்தார் சுகர். அவன் மோட்சம் பெறுவதற்காக ஸ்ரீமத் பாகவத கதைகளை ஏழு நாட்களுக்குக் கூறினார். பாகவதக் கதைகளை கவனமாகக் கேட்ட பரீட்சித்து பரமபதம் அடைந்தான் என்கிறது புராணம்.
இந்த நிகழ்வின் காரணமாக ஸ்ரீமத் பாகவதம் சப்தாகமாக, அதாவது ஏழு நாட்களுக்கு உபன்னியாசமாகக் கூறப்படும் வழக்கம் உண்டானது எனலாம்.