Last Updated : 13 Mar, 2014 01:21 PM

 

Published : 13 Mar 2014 01:21 PM
Last Updated : 13 Mar 2014 01:21 PM

அன்னக்கூடம்: மழை வளம் வேண்டி

சென்னையில் பத்து ஆண்டுகளுக்கு முன் மழை பொய்த்து மிகப் பெரிய வறட்சி ஏற்பட்டது. அப்போது ஸ்ரீநிவாஸ பெருமானுக்கு அன்னக்கூட நிவேதனங்கள் செய்தால் மழை பொழியும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் மயிலை ஸ்ரீ வேதாந்த தேசிகர் தேவஸ்தானம் கோவிலில் அன்னக்கூட நிகழ்ச்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. ஸ்ரீநிவாஸ பெருமாள் வேதாந்த தேசிகர் கைங்கரிய டிரஸ்டின் சார்பில் நடைபெற்றுவரும் இந்த அன்னக்கூட நிகழ்ச்சியின் பத்தாவது ஆண்டு நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

இந்த வைபவம் ஆண்டுதோறும் மாசி மாதம் நிகழ்த்தப்படும் என்று தெரிவிக்கும் இந்த டிரஸ்டின் பொருளாளர் எம். ஆர். ரமேஷ், இது நடத்தப்படும் விதத்தை விவரிக்கிறார். இந்த விழா நடைபெறும் நாளில் முதலில் தேவி, பூதேவி சமேதரான நிவாஸ பெருமாளுக்கு திருமஞ்சனமும் அலங்காரமும் நிகழும். பின்னர் இந்தத் தெய்வத் திரு உருவங்களுக்கு முன்னிலையில் அன்னம் இனிப்பு உட்பட பட்சணங்கள் அடுக்கி வைக்கப்படும். இவற்றில் இருநூறு கிலோ அரிசியில் சமைக்கப்பட்ட அன்னம், சாம்பார், நாற்பது கிலோ சக்கரைப் பொங்கல், நாற்பது கிலோ தயிர் சாதம், திருப்பதி லட்டு, ரவா லட்டு, மைசூர்பாகு, பாதாம் அல்வா, பால் அல்வா, பாதுஷா, முந்திரி கேக், அப்பம், அதிரசம், வெல்ல லட்டு, மனோகரம், கார பேடா மற்றும் தேன்குழல் ஆகியவை வைக்கப்படும். பிறகு இந்த உணவுப் பண்டங்கள் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படும் என்று ரமேஷ் கூறுகிறார்.

மார்ச் 2 அன்று நடைபெற்ற அன்னக்கூட வைபவத்தில் உணவுப் பண்டங்கள் நைவேத்யம் செய்யப்பட்டது. பிறகு ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள், அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

பின்னர் சாம்பார் சாதம், சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், லட்டு, முந்திரி கேக் உட்பட நிவேதனப் பொருட்கள் அனைத்தும் அங்கு கூடியிருந்த பக்தர்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மாலையில் மயிலாப்பூரில் நான்கு மாட வீதிகளிலும் நூற்றி ஐம்பது வேத விற்பன்னர்கள் வேதம் ஓத, சிறப்பு நாதஸ்வரமும் வாண வேடிக்கையுமாகத் தாயாருடன் பெருமாள் திருவீதி உலா வந்தார். இந்த உற்சவத்திற்கு முன்னதாக டி.என். கிருஷ்ணன், வி.எல். குமார் ஆகியோரின் வயலினிசைக் கச்சேரி நடந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x