Last Updated : 08 Mar, 2017 05:26 PM

 

Published : 08 Mar 2017 05:26 PM
Last Updated : 08 Mar 2017 05:26 PM

ஆலயம் ஆயிரம்: அப்பருக்கு அன்னம் பாலித்த சோற்றுடை ஈஸ்வரர்

தேவாரம் பாடிய அப்பர் சுவாமிகள், திருச்சி மலைக்கோயில், திருவானைக்காவல், திருவெறும்பூர், திருப்பராய்த்துறை ஆகிய தலங்களில் தரிசனம் செய்து முடித்துவிட்டு நடைப்பயணமாக திருப்பைஞ்ஞீலிக்கு வந்தார்.

கடும் வெயில் தந்த களைப்பு, பசி மயக்கம் என அப்பர் இருந்த நிலையில், எதிரில் நடந்து வந்த ஒருவர், “அய்யா, யார் நீங்கள்? எங்கு செல்கிறீர்கள்? களைப்புடன் இருக்கிறீர்களே?” என்று அன்பு பொங்கக் கேட்டார். அப்பர், “நான் திருப்பைஞ்ஞீலி செல்கிறேன். அங்குள்ள சிவபெருமானை தரிசிக்க வேண்டியே இந்தப் பயணம்” என பதிலளித்தார்.

அப்பரைக் கேள்வி எழுப்பியவர், “நான் சிவபெருமானைப் பூஜிக்கும் அந்தணர். என்னிடம் கட்டுச்சாதம் உள்ளது. இதை உண்டு, தாகம் தீர்த்துச் செல்லலாம். நானே அழைத்து செல்கிறேன்” என்றார். அப்பர் பசியாறிய பின்னர், அந்த அந்தணர், அப்பரை, திருப்பைஞ்ஞீலி திருக்கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.

அந்தணர் மறைந்தார்

அங்கு திடீரென மறைந்து விட்டார்.ஆச்சர்யப்பட்டு நின்ற அப்பருக்கு, ரிஷப வாகனத்தில் சிவபெருமான், பார்வதி தேவியுடன் சேர்ந்து காட்சியளித்தார். தன்னைப் பசியாற்றி, இறைவன் கொடுத்த தரிசனத்தால் உள்ளம் மகிழ்ந்த அப்பர், அங்கு திருக்கோயில் கொண்டிருக்கும் ஞீலிவனேஸ்வரரை போற்றிப் பாடினார்.

தன்னை நாடி வந்தவர்களுக்கு அருள்பாலிக்கும் அற்புதமான திருத்தலம் திருப்பைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர் திருக்கோயில். திருச்சியை அடுத்த மணச்சநல்லூருக்கு வடமேற்கே எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருப்பைஞ்ஞீலி திருத்தலம். இங்கு விசாலாட்சி அம்பிகையுடன் அருள்பாலிக்கிறார் ஞீலிவனேஸ்வரர். பங்குனி, புரட்டாசி மாதங்களில் மூன்று நாட்கள் சுயம்பு லிங்கமான சுவாமி மீது சூரிய ஒளிக்கதிர் விழுகிறது.

வசிஷ்ட முனிவருக்கு, எம்பெருமான் நடனக் காட்சியைக் காட்டி அருளிய தலம் இது என்பதால் மேலைச் சிதம்பரம் என்றும் அழைக்கப்படுகிறது

சப்தகன்னிகள் தரிசனம் செய்த தலம்

பிராமி, மாகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டி ஆகிய சப்த கன்னிகளும் தங்களது திருமணத்திற்கு முன்பு இத்தலம் வந்து அம்பாளின் தரிசனம் வேண்டி தவம் செய்ததாகவும் அவர்களுக்கு அம்பாள் காட்சி தந்து, தகுந்த காலத்தில் நல்ல வரன்கள் அமையப்பெற்று சிறப்புடன் வாழும்படி வரம் தந்ததாகவும் கூறப்படுகிறது .

சப்தகன்னிகளின் வேண்டுகோளின்படி அம்பாள் இங்கே எழுந்தருளி, சப்த கன்னிகளிடம், நீங்கள் வாழை மரத்தின் வடிவில் இருந்து நீண்ட காலத்திற்கு என் தரிசனம் காண்பீர்கள், என்றாள். அதன்படி சப்த கன்னிகள் வாழை மரங்களாக மாறி இங்கேயே தங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. பிற்காலத்தில் வாழை வனத்தின் மத்தியில் அம்பாள் இருந்த இடத்தில் சிவனும் சுயம்புவாக லிங்க வடிவில் எழுந்தருளினார் என்கிறது தல வரலாறு .

மேலும் அப்பருக்கு அந்தணர் உருவில் அமுது பாலித்ததால் சோற்றுடை ஈஸ்வரர் என்ற பெயரில், அருள்பாலிக்கும் ஆண்டவருக்கு சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திர நாளில் அப்பர் திருநாவுக்கரசருக்குச் சோறு படைத்த விழா தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

குழந்தை வடிவில் எமன்

பூமிக்கு அடியில் சற்றுப் பள்ளத்தில் உள்ள இந்த குடைவரைக் கோவிலில் சோமஸ்கந்தர் ரூபத்தில் சிவன், அம்பாள் இருவருக்கும் இடையே முருகன் பாலகனாக அமர்ந்திருக்க, சுவாமியின் பாதத்தின் கீழே குழந்தை வடிவில் எமன் இருக்கிறார். திருக்கடவூர் தலத்தில் மார்க்கண்டேயனுக்காக சிவபெருமான் எமனை சம்ஹாரம் செய்ததால், உலகில் இறப்பு என்பதே இல்லாமல் போகப் பூமியின் பாரம் அதிகரித்தது. பாரம் தாங்காத பூமி தேவி, சிவபெருமானிடம் முறையிட்டாள்.

மற்ற தேவர்களும் சிவனிடம் எமனை உயிர்ப்பித்துத் தருமாறு முறையிட , சிவபெருமான் மனமிரங்கி எமனை இத்தலத்தில் தன் பாதத்தின் அடியில் குழந்தை உருவில் எழும்படி செய்தார். தர்மம் தவறாமல் நடந்துகொள்ளும்படி அறிவுரை கூறி மீண்டும் தன் பணியைச் செய்து வரும்படி அருள் செய்தார் . அதனால் இந்த சன்னிதி முன்பு திருக்கடவூரில் செய்வது போல சஷ்டியப்தபூர்த்தி, ஆயுள்விருத்தி ஹோமம் ஆகியவை நடத்துகின்றனர்.

ஆலயத்தின் விசேஷ பரிகார பூஜை

பார்வதி தேவி ஒருமுறை இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டாள். நிழல் தரும் மரங்கள் இல்லாததைக் கண்டு, தனக்குப் பணிவிடை செய்ய வந்த சப்த கன்னிகளை வாழை மரங்களாக அருகில் இருக்கக் கூறி அருள்செய்தாள். அத்தகைய பெருமை பெற்ற வாழைக்குப் பரிகாரம் செய்தால் விரைவில் திருமணம் கைகூடும்என்று நம்பப்படுகிறது. வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் வாழைக்குப் பரிகாரம் செய்வது மிகவும் சிறப்பாகும் என்கிறார்கள். இந்தப் பரிகார பூஜை நேரம் காலை 8.30 முதல் பகல் 12.30 மணி வரையும், மாலையில் 4.30 முதல் 5.30 வரையும் நடத்தப்படுகிறது .

ஞீலிவனேஸ்வரர்

ஞீலி என்பது கல்வாழையில் ஒரு வகை. பைஞ்ஞீலி என்றால் பசுமையான வாழை என்று பொருள் . பசுமையான ஞீலி வாழையை தல விருட்சமாக கொண்டுள்ளதால் இத்தலத்திற்கு திருப்பபைஞ்ஞீலி என்று பெயர் .

எமனுக்குத் தனிச் சன்னிதி உள்ளதால் ஞீலிவனேஸ்வரர் ஆலயத்தில் நவக்கிரகங்களுக்கு தனிச் சன்னிதி இல்லை. ஞீலிவனேஸ்வரர் சன்னிதிக்கு முன்னுள்ள நந்தியின் அருகே உள்ள ஒன்பது குழிகளில் தீபம் ஏற்றி அதையே நவக்கிரகங்களாக எண்ணி வணங்குகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x