

ராமகிருஷ்ண பரமஹம்சர் பூசாரியாக இருந்த காளிகோயில் ராணி ராசாமணி என்பவருக்குச் சொந்தமானது. ராணியின் மருமகனான மதுரானந்தா பிஸ்வாஸ் என்பவரே தக்ஷிணேசுவரத்தில் உள்ள காளி கோவிலைக் கட்டியவர்.
ராணியின் எண்ணற்ற சொத்துகளை நிர்வாகமும் செய்துவந்தார். 1868-ம் ஆண்டில் அவர் காசிக்கு ஒரு புனித யாத்திரையை ஏற்பாடு செய்தார். அந்த யாத்திரைக் குழுவில் 125 அன்பர்கள் அடங்கியிருந்தனர். இந்தக் குழு முதலில் தியோகரில் தங்கி, அங்குள்ள பரமேசுவரனின் ஆலயத்திற்குச் செல்ல முடிவானது. அந்த இடத்தை அடுத்த கிராமம் ஒன்று கடும் பஞ்சத்தால் பீடிக்கப்பட்டிருந்தது. இதைக் கண்டு ராமகிருஷ்ணர் அளவுக்கதிகமான துயரமும் பாதிப்பும் அடைந்தார்.
அவர் மதுரரிடம், “ராணி மாதாவின் அனைத்துச் சொத்துகளுக்கும் நீங்கள்தான் நிர்வாகி. இந்த ஏழைகளுக்கு உடுத்த ஒரு ஆடையும், ஒருவேளைச் சோறும், தலைக்குச் சிறிது எண்ணெயும் கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்” என்றார்.
மதுரரோ “பகவானே! இந்த யாத்திரைக்குப் பெரும் செலவு செய்ய வேண்டியுள்ளது. இந்த யாத்திரையில் நூற்றுக்கணக்கான அன்பர்கள் உள்ளனர். உங்கள் வேண்டுகோளை ஏற்றால் யாத்திரைக்குச் செலவு செய்ய வைத்திருக்கும் கையிருப்பு குறைந்துவிடும்” என்றார்.
மதுரரின் மறுமொழியைக் கேட்ட பரமஹம்சர் வேதனையில் கதறினார்: “மூடனே! நான் வாரணாசி வரவில்லை. இவர்களுடன் இருக்கிறேன். இவர்களுக்குக் கவலைப்பட எவருமில்லை. நான் இவர்களை விட்டு நீங்குவதாக இல்லை” என்றார்.
மதுரர் வேறு வழியின்றிப் பணிந்தார். தேவைப்பட்ட ஆடைகளைக் கல்கத்தாவிலிருந்து தருவித்தார். மேலும் பரமஹம்சர் பணித்ததை எல்லாம் செய்தார். அதன் பின்னரே யாத்திரை வாரணாசி நோக்கித் தொடர்ந்தது.