Last Updated : 13 Mar, 2014 11:42 AM

 

Published : 13 Mar 2014 11:42 AM
Last Updated : 13 Mar 2014 11:42 AM

கயிலை நாதனுக்கு மயிலையில் பெருவிழா

அங்கிங்கெனாதபடி எங்கும் பிரகாசமாய், ஆனந்த ஜோதியாக விளங்கும் சிவபெருமான் பல்வகைத் திருவுருவம் கொண்டு எழுந்தருளிய தலங்களுள் ஒன்று மயிலை. உமையவள் மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டதும் கடலைச் சார்ந்த இந்தத் தலத்தில்தான். திருஞான சம்பந்தர் என்பைப் பெண்ணுருவாக்கி அருளியதும், வாயிலார் நாயனார் வழிபட்டு முக்தி பெற்றதும் இதே மயிலைத் திருத்தலத்தில்தான். அருள்மிகு கற்பகாம்பாள் உடனாய கபாலீஸ்வரப் பெருமானுக்கு ஒவ்வொரு வருடமும் நடைபெறும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது.

அனைத்து உலகங்களுக்கும் நாயகனாக, விறகில் தீயாக, பாலில் படுநெய்யுமாக எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பெருமானுக்குப் பங்குனிப் பெருவிழா கடந்த மார்ச் 6ஆம் தேதி தொடங்கியது. விழாவின் முதல் நாள் கிராம தேவதை பூஜை நடைபெற்றது. அம்பிகையின் சிறப்பு வடிவமான கோலவிழி அம்மனுக்குச் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. அன்று இரவு வெள்ளியாலான மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளினார்.

புன்னையில் எழுந்தருளியோன்

மயிலை, ஆதி காலத்தில் புன்னைக்காடாக இருந்ததாகவும், ஒரு புன்னை மரத்தின் அடியில் சிவபெருமான் எழுந்தருளியதாகவும் வரலாறு சொல்கிறது. அதனால்தான் ஒவ்வொரு வருடமும் புன்னை மர வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். அம்பிகை, கற்பக விருட்ச வாகனத்திலும், முருகன் வேங்கை மர வாகனத்திலும் எழுந்தருளுவார்கள். கானகத்தில் சிவபெருமான எழுந்தருளியதை உணர்த்தும் விதமாகவே கடவுளர்களுக்கு மரங்களை வாகனங்களாக அமைத்திருக்கிறார்கள்.

இரண்டாம் நாள் திருவிழாவில் காலை சூரிய வாகனத்திலும் மாலை சந்திர வாகனத்திலும் சிவபெருமான் எழுந்தருளினார்.

ஞானம் தரும் அதிகார நந்தி

மூன்றாம் நாள் காலை நடைபெறும் அதிகார நந்திக் காட்சி சிறப்பு வாய்ந்தது. மாட்டின் முகமும் சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறது. அம்பிகை, திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் கொடுத்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் திருமுலைப்பால் விழா நடைபெறும்.

மண்டபத்தில் ஞானசம்பந்தரின் திருமேனிக்குப் பால் ஊட்டும் வைபவம் நடைபெறும்போது, பக்தர்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவர். அப்படிச் செய்வதால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது நம்பிக்கை. இரவு பஞ்சபூத அமைப்பில் இருக்கும் பூத வாகனத்தில் சிவபெருமானும், பூதகி வாகனத்தில் அம்பிகையும் தாரகாசூரன் வாகனத்தில் முருகனும் எழுந்தருளுவார்கள்.

நான்காம் நாள் நாக வாகனத்தில் புறப்பாடு நடைபெறும். ஐந்தாம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பெருமானும், தங்க ரிஷப வாகனத்தில் அம்பிகையும், மயில் வாகனத்தில் முருகனும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளுவார்கள்.

திருமேனிகள் வீதியுலா போகும்போது என்னவெல்லாம் உபசாரம் நடக்குமோ, உள் பிரகாரத்துக்குத் திரும்ப வரும்போதும்போதும் அதே உபசாரங்கள் நடைபெறும். திருவுருவங்கள் கோயிலை அடைந்த அன்று அதிகாலை மட்டும் சிவனுக்கும் அம்பிகைக்கும் இடையே சோமாஸ்கந்தரின் உருவம் தெரிகிற மாதிரி அலங்காரம் செய்யப்படும்.

ஆறாம் நாள் யானை வாகனம். திருவுருவங்களுக்குத் தலைப்பாகை அணிவிக்கப்படும். யானை மேல் வெள்ளையாடை அணிவிப்பார்கள். ஏழாம் நாள் தேரில் இருக்கும் சிவபெருமானுக்கு வில், அம்புடன் அலங்காரம் நடைபெறும். திரிபுர சம்ஹாரம் நடைபெறும் பொருட்டே இந்த வில், அம்பு அலங்காரம்.

எட்டாம் நாள் திருவிழாவும் முக்கியமானது. அன்று மயிலையின் தல வரலாற்றைச் சொல்லும் நிகழ்ச்சி நடைபெறும்.

பூம்பாவை வரலாறு

ஒரு காலத்தில் செட்டியார் ஒருவர் வசித்து வந்தார். அவருக்குப் பூம்பாவை என்று அழகான பெண் குழந்தை இருந்தாள். திருஞான சம்பந்தரின் புகழைக் கேள்விப்பட்ட செட்டியார், தன் மகளை அவருக்கு மணம் முடிக்க விரும்பினார். அதன்படியே மகளை வளர்த்தும் வந்தார். பூம்பாவைக்கு ஐந்து வயதானபோது அவள் பாம்பு தீண்டி இறந்துவிடுகிறாள்.

அவளுடைய பூத உடலை எரித்துச் சாம்பலாக்கி, அந்த அஸ்தியை ஒரு குடத்தில் இட்ட செட்டியார், அதைக் கன்னி மாடத்தில் வைத்துவிடுகிறார். இருந்தாலும் தன் மகள் உயிருடன் இருப்பதாக நினைத்து அனைத்து வேலைகளையும் செய்கிறார்.

இது நடந்து சில வருடங்கள் கழித்து திருஞான சம்பந்தர் அந்த ஊருக்கு வருகிறார். அவரைப் பார்த்த ஊர் மக்கள் பூம்பாவையைப் பற்றிச் சொல்கிறார்கள். சம்பந்தர், ஆலயத்துக்குள் நுழையாமல் செட்டியாரைச் சந்திக்கிறார். அவருடைய மகளின் அஸ்தி இருக்கும் குடத்தை எடுத்துவரச் சொல்கிறார். அந்த அஸ்தியின் முன்னால் அமர்ந்து ஒவ்வொரு விழாவாகச் சொல்லி ஒவ்வொரு பதிகம் பாடுகிறார்.

“இந்த ஊரில் கார்த்திகை தீபம் நடக்கும், பெண்கள் எல்லாம் வீட்டில் விளக்கேற்றுவார்கள். அதைப் பார்க்காமல் மாண்டு போனாயே. இந்த ஊரில் தைப்பூசம் நடக்கும். பெண்கள் எல்லாம் பொங்கல் வைத்துக் கொண்டாடுவார்கள். அதை எல்லாம் பார்க்காமல் மாண்டு போனாயே” என்று பாடுகிறார்.

சம்பந்தர் பாடி முடித்ததும் அப்போது பூம்பாவை உயிரோடு இருந்திருந்தால் என்ன வயது இருக்குமோ அந்த வயதோடு குடத்தை உடைத்துக்கொண்டு வெளியே வந்தாள். அங்கம் என்றால் எலும்பு. எலும்பு உயிர்ப்பெற்று வந்ததால் அங்கம் பூம்பாவை என்று அழைக்கப்பட்டாள். இந்தச் சம்பவம் பெரிய புராணத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. பூம்பாவை, அவளுடைய அப்பா சிலைகளை வைத்து இந்த நிகழ்வு கதையாகச் சொல்லப்படும்.

அறுபத்து மூவர் பெருவிழா

அன்று மாலை 4 மணிக்கு அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெறும். மாலை நான்கு மணிக்குத் தொடங்கி இரவு 9 மணி வரை நீளும் இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துவிடுவார்கள். கோலவிழி அம்மன், விநாயகர் இவர்களைத் தொடர்ந்து அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெறும். திருவள்ளுவர், திரௌபதி, கிருஷ்ணர் புறப்பாடும் இருக்கும்.

ஒவ்வொரு வருடமும் சிந்தாரிப்பேட்டையில் இருந்து முருகன் திருவுருவம் எடுத்துவரப்படும். முன்பெல்லாம் வைரத்தில் அலங்காரம் செய்திருப்பார்கள். அதனால் சிந்தாரிப்பேட்டை முருகனை ‘வைர சாமி’என்றே அழைப்பார்கள். இப்போது வைர அலங்காரம் இல்லையென்றாலும் பிரமாண்ட அலங்காரத்தில்தான் முருகன் வலம் வருவார். மற்ற திருக்கோயில்களில் இருந்து விநாயகர் சிலைகளும் எடுத்துவரப்படும்.

அன்னமிடுதல் கோடிப் புண்ணியம்

அன்று நடைபெறும் அன்னதானம் சிறப்பு வாய்ந்தது. பெரிய அளவில் அடியவர்களுக்கு அன்னமிட இயலாதவர்களும் இரண்டு பிஸ்கட் பாக்கெட்டாவது தானம் அளிப்பார். ராயப்பேட்டையில் தொடங்கி மந்தைவெளி வரை இந்த அன்னதானம் நீளும்.

ஒன்பதாம் நாள் சிவபெருமான் பிட்சாடனார் வடிவிலும் மகாவிஷ்ணு மோகினி வடிவிலும் காட்சியளிப்பர். அப்போது மோகினி வடிவில் இருக்கும் மகாவிஷ்ணு நடனமாடிக்கொண்டே வருவார்.

பத்தாம் நாள் காலை கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பிறகு மயில் உருவில் புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடுவார். மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பார். திருமணம் முடிந்து

இரவு கொடியிறக்கம் நடைபெறும்.

தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களைத் தரிசித்துப் பல நூல்களை எழுதியிருக்கும் அருணவசந்தன், மயிலை திருவிழா மகிமை குறித்துச் சொல்கிறார்: “ஒவ்வொரு நாள் விழாவுக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. இந்த நிகழ்வுகளைக் காணக் கண் கோடி வேண்டும். அம்பாள் திருக்கல்யாணத்தைப் பார்க்கிறவர்களுக்குத் திருமணத் தடை நீங்கி, விரைவில் மாங்கல்ய பாக்கியம் கைகூடும். நோய் நொடிகள் நீங்கி, ஆயுள் அதிகரிக்கும். அம்பாள் திருமணம் முடிந்த அன்று அன்னதானம் செய்வதால் புத்திர பாக்கியம் கிட்டும் என்பது ஐதீகம்” என்கிறார் அருணவசந்தன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x