பைபிள் கதைகள் 34: கழுதை பேசியது!

பைபிள் கதைகள் 34: கழுதை பேசியது!
Updated on
3 min read

பாம்புக்கடியிலிருந்து மீண்ட இஸ்ரவேல் மக்கள், கடவுளின் சக்தியைக் கண்டுவியந்து அவரைப்போற்றிப் பாடினர். பின்னர் அவ்விடத்தை விட்டுக் கிளம்பி ஓபோத் என்ற இடத்தில் கூடாரம் போட்டனர். பிறகு அங்கிருந்து மோவாபிற்குக் கிழக்கே அய் அபாரீமின் என்ற பாலைவனப்பகுதியில் தங்கினார்கள். வறட்சி வாட்டத் தொடங்கியதால் அங்கிருந்து புறப்பட்டு சாரோத் பள்ளத்தாக்கில் சிலமாதங்கள் தங்கினர். பின்னர் அங்கிருந்தும் புறப்பட்டு அர்னோன் ஆற்றைக் கடந்து அதன் மறுகரையில் தங்கினார்கள். அந்த ஆற்றின் நீர் குடிப்பதற்கு உகந்ததாக இல்லை.

இதனால் அங்கிருந்து கிளம்பி பேயீர் என்ற பகுதிக்குப் போய்ச் சேர்ந்தார்கள். அங்கே கிணறு இருந்தது. இந்த இடத்தில் கடவுள் மோசேயிடம், “மக்களை இங்கே கூட்டிக்கொண்டு வா.. அவர்களுக்கு தண்ணீர் வழங்கு வேன்” என்றார். அவ்வாறே மோசே மக்களுக்கு கிணற்றைக் காட்டினார். அதைக் கண்ட மக்கள் மகிழ்ச்சிபொங்கிட...

“தண்ணீரால் நிரம்பி வழிகிறது இந்தக் கிணறு,!

பாடுங்கள் இதைப் பற்றி!

பாலைவனத்தில் இது கடவுளின் அன்புக் கொடையாகும்”

-எனப் புகழ்ந்து பாடினர். அதன்பின் அந்தக் கிணற்றை அவர்கள் ‘மாத்தனா’ என்று அழைத்தனர். சில காலத்துக்குப் பின் மாத்தனாவிலிருந்து நகாலியேலுக்கும், பிறகு நகாலியேலிலிருந்து பாமோத் துக்கும் பாமோத்திலிருந்து மேவாப் பள்ளத்தாக்குக்கும் மனம் தளராமல் பயணம் செய்து எமோரியர்களின் அரசனாகிய சீகோன் வசித்து வந்த எஸ்போன் நகரத்துக்கு புறத்தே பாலைவனத்தில் முகாமிட்டனர்.

சீகோனிடம் சிலரை அனுப்பிய மோசே, “ உங்கள் நாட்டின் வழியாக நாங்கள் பயணம் செய்ய அனுமதி தாருங்கள். நாங்கள் வயல் வழியாகவோ திராட்சைத் தோட்டத்தின் வழியாகவோ செல்ல மாட்டோம். உங்கள் கிணறுகளிலுள்ள தண்ணீரைக் குடிக்க மாட்டோம். உங்கள் நாட்டைக் கடந்து செல்லும்வரை நாங்கள் சாலையிலேயே தங்குவோம்” என்று அனுமதி கேட்டார். ஆனால் சீகோன் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அத்துடன் நில்லாமல் தன் படைகளைத் திரட்டிச் சென்று இஸ்ரவேல் மக்களுடன் ‘யாகாஸ்’ என்னும் இடத்தில் போரிட்டான். அந்தப் போரில் சீகோன் கொல்லப்பட்டான். இவ்வாறு எமோரியரின், எஸ்போன் உள்ளிட்ட அனைத்து நகரங்களையும் கைப்பற்றிய இஸ்ரவேல் மக்கள், அங்கே தற்காலிகமாக வாழத் தொடங்கினார்கள்.

பிறகு அங்கிருந்து கிளம்பி பாசான் எனும் பெரிய நகருக்குச் செல்லும் சாலையில் பயணம் செய்தனர். இதையறிந்த பாசானின் அரசனாகிய ஓக், தனது படைகளைத் திரட்டிக்கொண்டு இஸ்ரவேல் மக்களை எதிர்கொண்டு போர்புரிந்தான். இங்கேயும் கடவுள் இஸ்ரவேல் மக்களுக்கு வெற்றியைத் தந்தார். சீகோனைப் போலவே ஓக்கும் அவனது படைகளும் இஸ்ரவேலரிடம் வீழ்ந்தனர்.

தந்திரம் செய்த அரசன்

பின் பாசன் நகரிலிருந்து புறப்பட்ட இஸ்ரவேல் மக்கள், மோவாப் எனும் வளமையான நகரம் அமைந்திருந்த யோர்தான் பள்ளத்தாக்கு நோக்கிப் பயணம் செய்து, எரிகோ எனும் பலம் பொருந்திய கோட்டை நகரின் அருகிலுள்ள யோர்தான் நதியின் இக்கரையில் தங்கள் முகாம்களை அமைத்தனர். அந்த நேரத்தில் பாலாக் என்பவன் மோவாப் நகரின் அரசனாக ஆட்சி செய்துவந்தான்.

சீகோன், ஓக் ஆகிய இருபெரும் அரசர்களை இஸ்ரவேலர்கள் வீழ்த்திவிட்டு முன்னேறி வந்திருக்கும் செய்திகள் அவனைக் கலங்கடித்திருந்தன. இதனால் மிகவும் பயந்தான். காரணம் இஸ்ரவேல் மக்கள் அனைவருக்கும் போர்புரியும் திறத்தை கடவுள் அளித்திருந்தார். அவர்களது எண்ணிக்கையும் அதிகரித்திருந்தது. இதனால் மோதுவதற்கு முன் இஸ்ரவேலர்களுக்கு வெற்றி கிடைக்காதவாறு அவர்களை சபிக்கச் செய்துவிடலாம் என்று தந்திரம் செய்தான்.

சபிக்க ஒருவன்

தனது நகரை ஒட்டியிருந்த பெத்தூர் என்ற ஊரில் வசித்துவந்த பிலேயாம் என்பவரை சரியான நபர் எனக் கண்டறிந்தான் பாலாக். ஆம்! பிலேயாத்தின் சாபத்தைப் பெற்றவர்கள் வாழ்ந்ததில்லை. அவனுக்கு அப்படியொரு நாக்கு! உடனே அவனுக்கு அவசரச் செய்தி அனுப்பினான் அரசன்.

“ பிலேயாமே நீ வந்து எனக்கு உதவிசெய். எங்களைவிட இஸ்ரவேலர்கள் பலமிக்கவர்களாக உள்ளனர். உனக்குப் பெரும் வல்லமை உண்டு என்பதை அறிவேன். நீ ஒருவரை ஆசீர்வதித்தால் அவருக்கு நன்மைகள் ஏற்படும். நீ ஒருவருக்கு எதிராகப் பேசினால் அவருக்குத் தீமை ஏற்படும். எனவே நீ வந்து அவர்களைச் சபித்துவிடு. அதனால் நான் அவர்களை எளிதில் தோற்கடித்துவிடுவேன். இதற்கு உனக்குக் கைமாறாக என்ன வேண்டுமோ கேட்டுப் பெற்றுக்கொள்” என்று செய்தி அனுப்பினான்.

வாய் திறந்த கழுதை

பாலாக், கைநிறைய அள்ளிக் கொடுப்பான் என்று நம்பிய பிலேயாம் தன் கழுதை மேலேறி அவனைக் காணக் கிளம்பினான். ஆனால் பிலேயாம் தன் மக்களைச் சபிப்பதற்கு கடவுள் விரும்பவில்லை. அதனால் பிலேயாமைப் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்த நீண்ட வாளுடன் கூடிய ஒரு தேவதூதனை அனுப்பினார். கண்களைக் கூசச்செய்யும் வாளுடன் தேவதூதன் கழுதையின் முன்பாகத் தோன்றினார். அந்தத் தேவதூதனை பிலேயாமால் பார்க்க முடியவில்லை, ஆனால் அவனுடைய கழுதையினால் அவரைப் பார்க்க முடிந்தது. கழுதை எவ்வளவோ முயன்றும் தேவதூதனைத் தாண்டி ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியவில்லை. இதனால் கழுதை வழியிலேயே படுத்துவிடுகிறது. ஆத்திரம் தலைக்கேற பிலேயாம், தன் கோலால் கழுதையை மும்முறை அடித்துத் துவைத்தான். அப்போது கழுதை வாய் திறந்து பேசும்படியான அற்புதத்தை கடவுள் அரங்கேற்றினார்.

“என் எஜமானே என்ன தவறு செய்தேன் என்று என்னை இப்படி நையப் புடைக்கிறாய்?” என்று கழுதை கேட்டது. கழுதை பேசுகிறதே என்று ஆச்சரியப்படுவதை விடுத்து “என் கையில் ஒரு வாள் மட்டும் இருந்திருதால் உன்னை இந்நேரம் கொன்று போட்டிருப்பேன்!” என்று பிலேயாம் ஆத்திரம் பொங்கக் கத்துகிறான். அப்போது தேவதூதனை பிலேயாத்தின் கண்களுக்கும் தெரியும்படி செய்த கடவுள், “ எதற்காக உன் கழுதையை அடித்தாய்? உன்னைத் தடுக்கவே நான் வந்தேன். இஸ்ரவேல் மக்களை சபிக்கச் செல்லாதே. உன் கழுதைதான் உன்னை கீழே இறக்கிவிடாமல் காப்பாற்றியது. அதுமட்டும் உன்னை விட்டு விலகியிருந்தால் நான் உன்னைக் கொன்று போட்டிருப்பேன்” என்று அந்த தேவதூதன் வழியாகப் பேசினார். அதைக் கேட்ட பிலேயாம் நடுங்கிப்போனான்.

(பைபிள் கதைகள் தொடரும்)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in