

உபமன்யு என்ற அரசன் துர்வாச முனிவரின் சாபத்தால் தன் சக்தியை இழந்தான். சாபத்திலிருந்து விடுபட, தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்துவந்தார். சாபத்தைப் போக்குவதற்காக ஸ்ரீமன் நாராயணன், வயதான தோற்றத்தில் வந்தார். அரசனைச் சந்தித்து எனக்குப் பசிக்கிறது என்றார். ஆயிரம் பேருக்கு சமைத்த உணவு அனைத்தையும் உண்டார். ஆனால், பசியாறாமல் எனக்கு அப்பம் வேண்டும் என்று
கேட்க அரசன் அப்பக் குடத்துடன் வந்தார். அப்பக் குடத்தை வாங்கிக் கொண்டு பெருமாள் சயனித்துவிட்டார். உபமன்யு சாபம் தீர்ந்தது. உபமன்யுவிடமிருந்து அரங்கன் அப்பக் குடத்தை பெற்றதால் எம்பெருமானுக்கு ‘அப்பக் குடத்தான்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. வலது திருக்கரத்தில் அப்பக் குடத்தை அணைத்தவண்ணம் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறார். அன்றிலிருந்து தினமும் மாலை வேளையில் பெருமாளுக்கு அப்பம்
அமுது செய்யப்படுகிறது.
புஜங்க சயனத்தில் மேற்கே திருமுக மண்டலத்துடன் பெருமாள் அருள்பாலிக்கிறார். நம்மாழ்வார் முக்தி பெறுவதற்கு முன் கடைசியாக பதிகம் பாடிய திருத்தலம் என்கிறது தல புராணம். இத்திருத்தலத்தில் வந்து பெருமாளை வணங்கினால் மறுபிறவியே கிடையாது என்பது நம்பிக்கை. பெருமாளின் வலது ஹஸ்தத்தால் ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷிக்கு எம பயத்தை நீக்கியும், இடது ஹஸ்தத்தால் தேவேந்திரனுக்கும் அனுக்கிரகம் செய்கிறார்.
ஸ்ரீ மார்க்கண்டேய மகரிஷிக்கு எம பயம் நீக்கி அருளியதால் நோய் வாய்பட்டவர்கள் இங்கு வந்து வழிபாட்டால் மிக விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை. கமலவள்ளி தாயார் அமர்ந்த கோலத்தில் அருள்பாலிக்கிறார். ஆபத்து என்றால் அப்பால அரங்கனின் திருவடி நினையுங்கள், அந்த விநாடியே அருகில் வந்து நிற்பான் அருள்தரும் துணையாக! என்பது பக்தர்கள் நம்பிக்கை.
தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி கல்லணை சாலையில் கல்லணையில் இருந்து 7 கி.மீ. தூரத்திலும், திருச்சியிலிருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் கோயிலடி என்ற ஊரில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். 108 திவ்ய தேசங்களில் 8-வது திருத்தலம் ஆகும். இத்திருத்தலத்தில் நான்கு ஆழ்வார்கள் மங்களாசாசனம் பாடியுள்ளனர். அவர்கள் திருமழிசை ஆழ்வார், நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமங்கையாழ்வார். இத்திருத்தலம் பஞ்சரங்க க்ஷேத்திரங்களில் ஒன்று.
மைசூர் ஸ்ரீரங்கபட்டிணம், கோயிலடி அப்பக்குடத்தான், ஸ்ரீரங்கம் ரங்கநாதர், கும்பகோணம் சாரங்கபாணி, திரு இந்தளூர் பாரிமளரெங்கநாதர் ஆலயங்கள் தான் பஞ்ச ரங்க க்ஷேத்திரங்கள். ஸ்ரீரங்க ஷேத்திரத்திற்கு முன்பே இத்திருத்தலம் அமையப் பெற்றதால் அப்பாலரங்கன் என்று அழைக்கப்படும் இததிருத்தலம் காவிரிக் கரையில் அமையப் பெற்றிருப்பது கூடுதல் சிறப்பாகும்.