Published : 03 Oct 2014 03:01 PM
Last Updated : 03 Oct 2014 03:01 PM

வார ராசிபலன் 02-10-2014 முதல் 08-10-2014 வரை (மேஷம் முதல் கன்னி வரை)

மேஷராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 6-ல் சூரியன், புதன், ராகு ஆகியோர் சஞ்சரிப்பது சிறப்பாகும். வார முன்பகுதியில் சந்திரனின் சஞ்சாரமும் சாதகமாக இருப்பதால் புனிதமான காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரப் பயணம் நலம் தரும். தந்தையால் அனுகூலம் உண்டாகும். அரசாங்கத்தாரால் எதிர்பார்த்திருந்த காரியங்கள் நிறைவேறும். முக்கியஸ்தர்கள் சந்திப்பு நிகழும். அதனால் அனுகூலமும் ஏற்படும்.

எலெக்ட்ரானிக், கம்ப்யூட்டர் துறைகளைச் சேர்ந்தவர்கள் முன்னணிக்கு உயர்வார்கள். நிலபுலங்களால் ஆதாயம் கிடைக்கும். 6-ல் சுக்கிரனும் 7-ல் சனியும் இருப்பதால் வாழ்க்கைத்துணை நலனில் அக்கறை செலுத்த வேண்டிவரும். பெண்களால் ஆடவர்களுக்குத் தொல்லைகள் கூடும். பக்குவம் தேவை. கூட்டுத் தொழிலில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,அக்டோபர் 3, 6 (முற்பகல்).

திசைகள்: கிழக்கு, வடக்கு, தென்மேற்கு. .

நிறங்கள்: வெண்மை, பச்சை, வெளிர்கறுப்பு, ஆரஞ்சு.

எண்கள்: 1, 4, 5, 9.

பரிகாரம்: மகாலட்சுமியை வழிபடுவது நல்லது. ஏழைப் பெண்களுக்கு உதவி செய்யவும்.



ரிஷப ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 5-ல் சுக்கிரனும் 6-ல் சனியும் 11-ல் கேதுவும் உலவுவது சிறப்பாகும். முக்கியமான எண்ணங்கள் சில நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் ஓரளவு உதவுவார்கள். நல்ல தகவல் வந்து சேரும். கலைத்துறையினருக்கு வளர்ச்சி தெரியவரும். சமுதாய நலப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு வரவேற்பு கூடும். 3-ல் குரு இருப்பதால் பொருளாதாரம் சம்பந்தமான காரியங்களில் விழிப்புத் தேவை.

ஏமாற்றப்பட நேரலாம். 5-ல் சூரியன், ராகு ஆகியோர் இருப்பதால் மக்களால் சிறு பிரச்னைகள் ஏற்படும். ஆன்மிகப்பணிகளில் ஈடுபாடு உள்ளவர்களுக்குத் தெளிவான சூழ்நிலை நிலவிவரும். வாரத்தின் பின்பகுதியில் நற்காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சாதுக்களின் தரிசனம் கிடைக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,அக்டோபர் 3, 6 (முற்பகல்).

திசைகள்: வடமேற்கு, தென்கிழக்கு, வடக்கு, மேற்கு.

நிறங்கள்: மெரூன், வெண்மை, பச்சை, நீலம்.

எண்கள்: 5, 6. 7, 8.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடவும். குருவுக்கும் தட்சிணாமூர்த்திக்கும் அர்ச்சனை, ஆராதனைகள் செய்வது நல்லது. வேதம் படித்தவர்களுக்கு உதவி செய்வது நல்லது.



மிதுன ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் குருவும் 4-ல் புதனும் சுக்கிரனும் 6-ல் செவ்வாயும் 10-ல் கேதுவும் சஞ்சரிப்பதால் வாழ்வில் முன்னேற்றம் காண நல்ல வாய்ப்புக்கள் கூடிவரும். எதிரிகள் விலகிப் போவார்கள். வழக்கில் வெற்றி கிட்டும். பொருளாதார நிலை உயரும். புதிய சொத்துக்கள் சேரும். மனத்தில் தெளிவும் தன்னம்பிக்கையும் கூடும். இயந்திரப்பணிகள் லாபம் தரும்.

வியாபாரம், கணிதம், பத்திரிகைத் துறைகளைச் சேர்ந்தவர்கள் வளர்ச்சி காண்பார்கள். சட்டம், காவல், இராணுவம் போன்ற துறைகளைச் சேர்ந்தவர்கள் அங்கீகாரம் பெறுவார்கள். வாரத்தின் ப்பின்பகுதியில் தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். பக்தி மார்க்கத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்லோர் தொடர்பு கிட்டும். 4-ல் சூரியனும் ராகுவும் இருப்பதால் அலைச்சல் அதிகரிக்கும். தாய் நலனில் கவனம் தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,அக்டோபர் 6 (முற்பகல்), 8 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, வடமேற்கு, தெற்கு, வடக்கு.

நிறங்கள்: இளநீலம், வெண்மை, மெரூன், பச்சை, பொன் நிறம், மஞ்சள்.

எண்கள்: 3, 5, 6, 7, 9.

பரிகாரம்: துர்க்கை அம்மனை வழிபடவும்.



கடக ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 3-ல் சூரியனும் ராகுவும் உலவுவது சிறப்பாகும். எதிர்ப்புக்களைச் சமாளிக்கும் சக்தியைப் பெறுவீர்கள். வழக்கில் நல்ல திருப்பம் உண்டாகும். அரசியல் ஈடுபாடு ஆக்கம் தரும். முக்கியஸ்தர்கள், மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அரசு உதவி பெற வாய்ப்பு உண்டாகும்.

நிறுவன, நிர்வாகத்துறையினருக்கு முன்னேற்றமான சூழ்நிலை நிலவிவரும். மக்களால் பெற்றோருக்கும், பெற்றோரால் மக்களுக்கும் நலம் உண்டாகும். பெற்றோரால் சில இடர்ப்பாடுகளும் ஏற்பட்டு விலகும். வாரக்கடைசியில் தொலைதூரத் தொடர்பால் அனுகூலம் உண்டாகும். தெய்வப்பணிகளிலும் தர்மப்பணிகளிலும் ஈடுபாடு கூடும். மனத்தில் தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,அக்டோபர் 3, 8 (முற்பகல்).

திசைகள்: தென்மேற்கு, கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: சாம்பல் நிறம், ஆரஞ்சு. சிவப்பு.

எண்கள்: 1, 4, 6, 9.

பரிகாரம்: ஆஞ்சநேயருக்கும் விநாயகருக்கும் நெய்தீபம் ஏற்றவும். ஏழை, எளியவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் உதவவும்.



சிம்ம ராசி வாசகர்களே!

உங்கள் ராசிக்கு 2-ல் புதனும் சுக்கிரனும் 3-ல் சனியும் 4-ல் செவ்வாயும் உலவுவதால் பொருளாதார நிலை உயரும். ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களால் வருவாய் கிடைத்துவரும். உழைப்புக்கும் திறமைக்கும் உரிய பயன் கிடைக்கும். தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோருக்கு முன்னேற்றம் உண்டு. நிலபுலங்களின் சேர்க்கை நிகழும். வம்பு, வழக்குகளைத் தவிர்க்கவும்.

மக்களால் செலவுகள் அதிகரிக்கும். வாரப்பின்பகுதியில் 8-ல் உள்ள கேதுவுடன் சந்திரன் சேருவதால் மன அமைதி குறையும். புதிய முயற்சிகளை ஒத்திப்போடுவது நல்லது. விஷத்தாலும் விஷ ஜந்துக்களாலும் பாதிக்கப்பட நேரலாம்; எச்சரிக்கை தேவை.

அதிர்ஷ்டமான தேதிகள்: ,அக்டோபர் 3, 6 (முற்பகல்).

திசைகள்: தென்கிழக்கு, வடக்கு, தெற்கு, மேற்கு.

நிறங்கள்: நீலம், சிவப்பு, வெண்மை .

எண்கள்: 5, 6, 8, 9.

பரிகாரம்: நாக வழிபாடு செய்யவும். துர்க்கைக்கும், விநாயகருக்கும் அர்ச்சனை, ஆராதனைகளைச் செய்வது நல்லது. குரு ஸ்தானத்தில் உள்ளவர்களை வணங்கி, அவர்களது நல்வாழ்த்துக்களைப் பெறவும்.



கன்னி ராசி வாசகர்களே!

உங்கள் ராசியில் சுக்கிரனும் 3-ல் செவ்வாயும் 11-ல் குருவும் உலவுவதால் நல்லவர்கள் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பார்கள். புதிய சொத்துக்களின் சேர்க்கை நிகழும். நிலபுலங்களால் ஆதாயமும் கிடைத்துவரும். மக்களால் மனமகிழ்ச்சி கூடும். பொருளாதார நிலை உயரும். ஸ்பெகுலேஷன், கொடுக்கல்-வாங்கல் இனங்கள் லாபம் தரும். விஞ்ஞானிகளுக்கு வரவேற்பு கூடும்.

மருத்துவர்கள் புகழ் பெறுவார்கள். ஜன்ம ராசியில் சூரியனும் ராகுவும், 7-ல் கேதுவும் உலவுவதால் உஷ்ணாதிக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். பிறரிடம் சுமுகமாகப் பழகுவது நல்லது.

அதிர்ஷ்டமான தேதிகள்: அக்டோபர் 3, 6 (முற்பகல்).

திசைகள்: வடகிழக்கு, தென்கிழக்கு, தெற்கு.

நிறங்கள்: வெண்மை, இளநீலம், பொன் நிறம், சிவப்பு.

எண்கள்: 3, 6, 9.

பரிகாரம்: ராகு, கேது, சூரியன், சனி ஆகியோருக்குப் பிரீதி, பரிகாரங்களைச் செய்து கொள்வது நல்லது. நாகர் வழிபாடு நலம் தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x