Last Updated : 09 Feb, 2017 10:34 AM

 

Published : 09 Feb 2017 10:34 AM
Last Updated : 09 Feb 2017 10:34 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 16: சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

இறையனுபவப் பேரின்பம் சொல்லால் விளக்க இயலாதது; ஏனெனில், மனிதஉடலில் வாழும் எவருக்கும் அது வாய்ப்பதில்லை; வாய்த்த அருளாளர்கள் யாரும் நமக்குச் சொல்லால் விளக்கியதில்லை; மனித உடலிலேயே தாம் பெற்ற இறையனுபவப் பேரின்பத்தைப் பெருவிளக்கமாக அண்டப் பகுதியில் நமக்குத் தந்தார் மணிவாசகர்.

மனித குலத்துக்கான இறைநெறி

இம்மாமனிதரைக் கொண்டே மனித குலத்துக்கு இறைநெறி வழிகாட்ட கருணை கொண்ட இறைவன், ‘பூமியில் சிலநாள் வாழ்ந்து, பின் தில்லை வருக’ என்று பணிக்கிறார். மாபெரும் இறையனுபவக் கண்ணைக் கொடுத்துவிட்டு, அந்தக் கண்ணைப் பிடுங்கிக்கொண்டும் போய்விட்டான் இறைவன். பிறவியிலேயே பார்வையற்றவனுக்குக் கண்ணைத் தந்த பின், கண்ணைப் பறித்தால் எவ்வளவு துன்பப்படுவான்? இறைவனைப் பிரிந்த பேரிழப்பு, நரகத்தைவிடக் கொடியதாக, பேரிருளாக, மணிவாசகரை வருத்தியது. உலக வாழ்வில், உடல் சார்ந்த உலகச் சிற்றின்பங்கள் தம்மை விடாது துரத்துமே என்ற பெருங்கவலை மணிவாசகரை வாட்டியது.

குழந்தையின் நலன் கருதித்தான், பெற்றோர் தம் குழந்தையைப் பிரிந்து, பள்ளிக்கூடத்திற்கு அனுப்புகிறார்கள். இறைவன், தான் ஆட்கொண்ட மணிவாசகரைப் பிரிந்து, உலக வாழ்வுக்கூடத்துக்கு அனுப்பியது, மனித குலத்தின் நலம் கருதியதுதான்; மணிவாசகரின் நலன் கருதி அன்று. மனிதக் குழந்தைகளின் அழுகை, காலத்தில் கரைந்து மறைந்து போகும்; மணிவாசகக் குழந்தையின் அழுகை காலத்தை வென்று, எங்கும் நிறைந்து, நமக்கான ‘இறைநெறி ஆற்றுப்படை’ திருவாசகமாக என்றும் நிற்கும்.

ஊனுருக்கும் திருவாசகம்

மார்பிலும், தோளிலும் உறவாடித் தாய், தந்தை அன்பில் தோய்ந்த குழந்தை, பள்ளிக்கூடம் செல்ல மாட்டேன் என்று அழுது முறையிடுகிறது; ஆட்கொள்ளப்பட்டு, இறைவனின் பேரன்பில் தோய்ந்த மணிவாசகர், இறையின்பத்தைத் தவிர்த்த உடல் வாழ்வில் தமக்குச் சிறிதும் பற்றுதல் இல்லை என்றும் இவ்வுலகில் தம்மால் வாழ இயலாது என்றும் இறைவனிடம் முறையிட்டுக் கல் மனமும் கசிந்துருகும் வண்ணம் அழுது அரற்றுகிறார்; வாழாப்பத்து என்னும் பத்துத் திருவாசகங்கள் திருப்பெருந்துறையில் பிறந்தன; நம் ஊனையும், உயிரையும் உருக்குகின்றன; நமக்கான ஆன்ம விடுதலையையும் தருகின்றன.

யாரிடம் நொந்துகொள்வது

இப்பிரபஞ்சம் முழுவதும், அதற்கு அப்பாலும் நீ ஒருவனே பரந்தும்-விரிந்தும்,உள்ளும்-புறமும், ஒளித்தும்-வெளிப்பட்டும் இருக்கிறாய்; ஆயினும் உன்னை அறிந்தவர் யாரையும் நான் காண்கிலேன்; ஆகையினால், நீ என்னை ஆட்கொண்ட பின், பூவுலகில் இருத்திச் சென்றதை நான் யாரிடம் சொல்லி நொந்து கொள்வது? நான் இறைப்பேரின்ப வாழ்வு வாழ்ந்ததை யாருக்கு எடுத்துச் சொல்வது? அப்படி நான் எடுத்துச் சொன்னாலும் அவர்களுக்கு என் நிலைமை புரிந்துகொள்ள முடியாததாகவே இருக்கும்; ஏனென்றால், அவர்கள் அறிந்திராத ‘இறைப் பேரின்பம்’ என்பதை அவர்கள் அறிந்த ‘உலகியல் இன்பங்களை’க் காட்டித்தான் நான் விளக்க இயலும்; இறையின்பத்தின் வேட்கை அவர்கள் அறியாத ஒன்றாகையால், என் பரிதாப நிலையை உலகோர் அறிய மாட்டார்கள். எம்மைத் திருப்பெருந்துறையில் ஆட்கொண்டருளிய சிவபுரத்து அரசர்பெருமானார் நீவீரே அருளவில்லையானால், இனி இக்கடல் சூழ்ந்த உலகில் வாழ்தல் எம்மால் இயலாது என்பதை அறிந்து கொள்ளும்; ஆகையினால், எம்மை உன் திருவடிக் கண் வருக என்று அருள் புரிய வேண்டும் என்று உருகி வேண்டுகிறார் மணிவாசகனார்.

பாரொடு விண்ணாய்ப் பரந்த எம் பரனே பற்று நான் மற்று இலேன் கண்டாய்

சீரொடு பொலிவாய் சிவபுரத்து அரசே திருப்பெருந்துறை உறை சிவனே

ஆரொடு நோகேன் ஆர்க்கு எடுத்து உரைக்கேன் ஆண்ட நீ அருளிலையானால்

வார் கடல் உலகில் வாழ்கிலேன் கண்டாய் வருக என்று அருள் புரியாயே. (திருவாசகம்:வாழாப்பத்து-1)

நீ என்னை ஆட்கொண்டதால் நான் உன் உடைமை; எனது நன்மை தீமைகள் அனைத்தும் உனது; அவை குறித்து நான் செய்யக்கூடியது ஒன்றுமில்லை; உன் திருவடியைத் தவிர எனக்கு வேறு பற்றுக்கள் இல்லை; நீ அருளாமல் என்னைப் புறக்கணித்தால், உன்னைக் குறை கூறுவதையும் நான் உன்னிடம் மட்டுமே கூற இயலும் என்கிறார் மணிவாசகர்.

மணிவாசகர் ‘ஆண்ட நீ அருளிலையானால், ஆரொடு நோகேன்! ஆர்க்கெடுத்து உரைக்கேன்!’ என்று அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளார்.

தொழுவனோ! பிறரைத் துதிப்பனோ!

வாழாப்பத்துப் பதிகத்தின் இறுதிப் பாட்டில், “குற்றமற்ற தொன்மையான புகழையுடைய உமையம்மையின் பங்கனே! இளங்காளையை ஊர்தியாகவுடையவனே! செழுமையாகிய பிறையை அணிந்தவனே! சிவலோக நாதனே! திருப்பெருந்துறையுறை சிவனே! உன்னையன்றி வேறு ஒரு பற்றுக்கோடும் எனக்கு இல்லை; நீ என்னை ஆண்டுகொண்டதால் என் உடல், மொழி, மனம் மூன்றும் உன் உடைமை; ஆகையால், பிறரைத் தலையால் வணங்குவதும், வாயால் வாழ்த்துவதும், எனக்குத் துணை என்று மனத்தால் நினைப்பதும் என்னால் இயலுமா என்று நீயே சொல்வாயாக! இவ்வுலகத்தில் நான் வாழ மாட்டேன்! ஆகவே, வருக என்று நீ உடனே அருள் புரிய வேண்டும்”, என்று, தம்மை உலக வாழ்வில் நீடிக்கச் செய்தல் வேண்டாம் என்னும் விண்ணப்பத்தை வெளிப்படுத்துகிறார் மணிவாசகர்.

பழுதில்தொல் புகழாள் பங்க நீயல்லால் பற்று நான் மற்றிலேன் கண்டாய்

செழுமதி அணிந்தாய் சிவபுரத்தரசே! திருப்பெருந்துறையுறை சிவனே!

தொழுவனோ! பிறரைத் துதிப்பனோ! எனக்கோர் துணையென நினைவனோ! சொல்லாய்!

மழவிடையானே! வாழ்கிலேன் கண்டாய்! வருக என்றருள் புரியாயே. – (திருவாசகம்:வாழாப்பத்து-10)

‘மற்று நான் பற்றிலேன் கண்டாய்’ என்னும் திருவாசக அடியின் தாக்கமாக, தமிழறிஞர் பேராசிரியர் தொ.பரமசிவன் அவர்கள் தாமெழுதிய ஒரு நூலுக்கு, ‘மற்றுப் பற்றில்லாத மக்கள் பற்றாளர் தோழர் நல்லகண்ணு அவர்களுக்கு சமர்ப்பணம்’ என்று குறித்துள்ளார். ‘கன்னித்தமிழ் தந்ததொரு திருவாசகம்; கல்லைக் கனியாக்கும் உந்தன் ஒரு வாசகம்’ என்று கவியரசர் கண்ணதானின் காதல் கவிதையிலும் திருவாசகம் ஊடுருவி நிற்கின்றது. தமிழ்ப் படைப்பாளிகளின், தமிழ் மக்களின் உணர்வோடு கலந்து உருக்கும் தன்மை கொண்டது திருவாசக மொழி.

இவ்வுலகில் தாம் வாழ இயலாமைக்கு மேலும் ஐந்து முக்கியக் காரணங்களைக் கூறும் மணிவாசகரின் திருவாசகங்கள் இலக்கியச் சுவையும், பக்திச் சுவையும் கலந்து தேனாய்த் தித்திப்பன; சாமானியரான நம்மை ஆட்கொள்ளும் தன்மையுடையன; அத்திருவாசகத் தேனைத் தொடர்ந்து சுவைக்கலாம்.

தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x