

காரைக்காலம்மையார் காலத்தில் சிவனுடைய தோற்றத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதைக் காண்கிறோம். சிவன் மார்பில் பாம்புகளையும், உடல் முழுவதும் நீற்றையும் அணிந்தவராகக் காட்சி அளிக்கிறார். மேலும் அவர் கபாலம் ஏந்தி பிச்சை எடுப்பவராகவும், இடுகாட்டில் பேய்களுடன் நடனமாடுபவராகவும் காட்டப் பெறுகிறார். இது கூற்றுவன் வழிபாட்டுத் தாக்கத்தைக் காட்டுகிறது.
அம்மையாரும் ஆடல்வல்லானும்
உலகின் மிகப் பழமையான இலக்கியமாகவும், இந்து சமயத்தின் அடிப்படையாகவும் விளங்கும் வேதத்தில் கூறப்பட்டுள்ள எந்த தெய்வமும் நடனம் ஆடுவதாகக் குறிப்பு இல்லை. வேதத்துக்கு அடுத்தபடியாகப் பழமை வாய்ந்த இலக்கியமான தொல்காப்பியத்திலும் அத்தகைய தெய்வம் கூறப்படவில்லை. கடைச் சங்ககால நூலான திருமுருகாற்றுப்படை, பரிபாடல், பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை ஆகிய நூல்களில் சிவன் என்ற பெயர் காணப்படாவிடினும் இன்று நாம் சிவனுக்குரியதாகக் கருதும் பல தோற்றங்களும், செயல்களும், பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால் அவற்றிலும், ஆடற் பெருமான் என்ற பொருள் தரும் பெயரோ சிவனின் நாட்டியத் தோற்றம் பற்றியோ கூறப்படவில்லை.
ஈசனை ஆடல் வல்லானாகக் கருதி வழிபடும் வழக்கம் எப்படி ஏற்பட்டிருக்கக் கூடும்? சங்க காலத்தில் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்த நிலையில் வணங்கப்பட்ட சிவன், அம்மையார் காலத்தில் சுடுகாட்டை ஒட்டிய ஆலங்காட்டில் நடனமாடுவதாக வர்ணிக்கப்பட்டார். இந்த இரண்டு நிலைகளுக்கும் இடையில் வேறு ஒரு நிலை இருந்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
திருக்கடையூர்
காரைக்காலிலிருந்து 20 கி.மீ. தொலைவில் திருக்கடையூர் என்னும் தலம் உள்ளது. இங்கு மார்க்கண்டேயன் என்ற பக்தனுக்காக இறைவன் இடது திருவடியைத் தூக்கி யமனை உதைத்ததாகப் புராணம் கூறுகிறது. மற்ற முரண்பட்டோரை எல்லாம் கையினால் அழித்த சிவன் யமனை மட்டும் காலினால் செற்றார். வேறு எந்தத் தெய்வமும் காலினால் பகை வென்றதாகப் புராணம் இல்லை. ஆலமரத்தடியில் உட்கார்ந்த நிலையில் இருந்த தெய்வம் திடீரெனக் கோபத்துடன் எழுந்து காலைத் தூக்கினால் எப்படி இருக்கும் என்று மனதுக்குள் ஓவியம் தீட்டிப் பார்த்ததன் விளைவாக அதே மயானத்தில் நடனமாடுபவராக அவரை மக்கள் கற்பனை செய்திருக்கக் கூடும். அம்மையார் காலத்தில் மயானத்தை ஒட்டிய ஆலங்காட்டில் நடனமாடுபவராகக் கருதப்பட்டார்.
இறைவனின் பல கோலங்களைப் பேசிய அம்மையார் ஆலமர் கோலத்தைக் குறிப்பிடவில்லை. மாறாக ஆலங்காட்டில் ஆடற்கோலத்தில் காட்சி தருபவராகவே அவர் போற்றி வழிபட்டார். ஆனால் ஆடற் பெருமான் என்ற பெயரையோ, தற்போது வழங்கும் நடராஜா என்ற பெயரையோ அவர் எங்கும் பயன்படுத்தவில்லை.
வேதமும் சைவமும்
சு.கோதண்டராமன் கிரி டிரேடிங் ஏஜென்ஸி, விலை ரூ.100 தொலைபேசி: 044- 6693 9393.