

‘ரமலான்’ ஹிஜ்ரி ஆண்டின் ஒன்பதாவது மாதம். ரமலான் என்பதற்கு ‘சுட்டெரித்தல்’ என்று பொருள். மாதங்களுக்கு பெயர் வைத்த வேளையில் இந்த ஒன்பதாவது மாதம் சுட்டெரிக்கும் கோடைக்காலமாக இருந்ததால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதால் பாவங்கள் எரிக்கப்பட்டுவிடுகின்றன.
ரமலான் மாதத்தில், ‘லைலத்துல் கத்ர்’ எனும் கண்ணியமிக்க இரவில் குர்ஆன் அருளப்பெற்றது. “நிச்சயமாக நாம் இதை அருள் வளம் நிறைந்த இரவில் அருளினோம்” ரமலான் மாதத்தில் குர்ஆன் மட்டுமின்றி பல்வேறு வேதங்களும் அருளப்பட்டன. ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நற்செயலுக்கும் பத்து முதல் எழுநூறு மடங்கு நன்மைகள் வழங்கப்படுகின்றன.
நோன்பாளிகளுக்கு விடுதலை
இம்மாதத்தில் நரக வாசல்கள் அடைக்கப்பட்டு சொர்க்க வாசல்கள் திறக்கப் படுகின்றன. நோன்பாளிகளுக்கு நரகத்திலிருந்து விடுதலையளிக்கப்படுகிறது. நோன்பிருப்போரின் நிலை இறைவனிடம் உயர்த்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகள் இந்த மாதத்திற்கு உண்டு.
ரமலான் வழிபாடுகள்
பகலில் நோன்பு நோற்பதும் இரவில் சிறப்புத் தொழுகையை மேற்கொள்வதும் ரமலான் மாதத்தின் முக்கியமான வழிபாடுகள்.
குர்ஆன் அருளப்பட்ட மாதம் என்பதால், இந்த மாதத்தில் முஸ்லிம்கள் அதிகமாகக் குர்ஆன் ஓதுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு தடவையாவது குர்ஆனை ஓதி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இம்மாதம் முழுவதும் குர்ஆன் ஓதுகின்றனர். மேலும் குர்ஆனை மனனம் செய்தல், குர்ஆன் மொழிபெயர்ப்புகளைப் படித்தல் ஆகியவற்றிலும் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். குர்ஆன் வகுப்புகளும் அதிக அளவில் இம்மாதத்தில் நடைபெறுகின்றன. முப்பது நாட்கள் இரவில் நடைபெறும் சிறப்புத் தொழுகையில் குர்ஆன் முழுமையாக ஓதி முடிக்கப்படுகிறது.
‘திக்ர்’ எனும் இறைவனைத் துதிபாடும் வணக்கமும் ரமலான் மாதத்தில் அதிகமாக நடைபெறுவதுண்டு. மேலும் ‘தவ்பா’ எனும் பாவமன்னிப்புக் கோரும் வழிபாட்டில் முஸ்லிம்கள் தொடர்ச்சியாக ஈடுபடுகிறார்கள்.
இஃதிகாஃப் - பள்ளிவாசலில் தங்குதல்
ரமலான் மாதத்தில் நோன்பாளிகள் மேற்கொள்ளும் ஒரு முக்கியமான வழிபாடு ‘இஃதிகாஃப்’. இதற்குத் தங்குதல் என்று பொருள். பள்ளிவாசலில் குறிப்பிட்ட வழிமுறையில் ஒருவர் தங்கியிருப்பதற்கு ‘இஃதிகாஃப்’ என்பர். அத்தியாவசியத் தேவைகளுக்குத் தவிர வேறு எதற்காகவும் வெளியே போகாமலும், அத்தியாவசியப் பேச்சுகளைத் தவிர வேறு எந்தப் பேச்சுகளைப் பேசாமலும் பள்ளிவாசலுக்குள்ளேயே தங்கியிருந்து தொழுகை, தியானம், குர்ஆன் ஓதுதல், பிரார்த்தனை போன்ற வழிபாடுகளில் ஈடுபடுவதே ‘இஃதிகாஃப்’ ஆகும்.
பெருமானார்(ஸல்) அவர்கள் ரமலான் மாதம் இறுதிப் பத்து நாட்களில் ‘இஃதிகாஃப்’ இருந்துவந்தார்கள். ‘லைலத்துல் கத்ர்’ எனும் புனித இரவைப் பெறும் நோக்கத்தில் இந்த நாட்களில் நோன்பாளிகள் ‘இஃதிகாஃப்’ இருக்கிறார்கள்.
இறையச்சம், மனக் கட்டுப்பாடு, நன்மைகளில் ஈடுபாடு, தீமைகளிலிருந்து விலகுதல், ஏழைகள் மீது அன்புகாட்டுதல், வறியவர்களுக்கு உதவுதல், உறவைப் பேணுதல், உடல்நலனில் கவனம் செலுத்துதல் உள்ளிட்ட உயர் பண்புகளை நோன்பின் மூலம் யார் பெறுகிறார்களோ, ரமலான் அல்லாத பிற மாதங்களிலும் யார் அவற்றைக் கடைபிடிக்கிறார்களோ, அவர்கள்தாம் உண்மையில் நோன்பின் பலனை அடைந்தவர்கள். உண்மையான நோன்பாளிகள்.