

செப்டம்பர் 16: எம்.எஸ்.சுப்புலஷ்மி பிறந்த நாள்
பாடல்களுக்கு சுருதி கூட்டுவதுதான் வழக்கம். ஆனால் பாடல்களுக்கு பக்தியின் சாரம் ஊட்டினார் எம்.எஸ்.சுப்புலக்ஷ்மி. பாடல்களில் வெளிப்படும் பக்தியைக் கொண்டே ரசிகர்களைப் பரவசம் எய்தச் செய்தார். அந்தப் பக்திப் பரவச நிலையே ரசிகர்களைக் கட்டிப் போட்டு அவர்பால் இழுத்துச் சென்றது. அவர்களை மெய்மறக்கச் செய்தது.
அந்தக் காலத்தில் பட்டி தொட்டி எல்லாம் பரவிக் கிடந்தது எம்.எஸ். பாடிய சுப்ரபாதம். திருப்பள்ளி எழுச்சி ஸ்லோகம் பாட்டாகவே ஒலித்தது பாமரரின் காதுகளில். அந்த அளவிற்கு, சுப்ரபாதத்தில் சுருதி, தாளத்துடன் பக்தியையும் பாவத்தையும் குழைத்துக் கொடுத்திருந்தார் எம்.எஸ்.
பாக்யாத லக்ஷ்மி பாரம்மா
கிராமங்களில் எங்கிருந்தோ கேட்கும் குயிலின் இனிய குரலோசை போல, காற்றினில் வரும் அவரது கீதத்தில்கூடப் புது நெல் வாசம், நெய் வாசமாக வீசும். அக்காலத்தில் கிராமஃபோன் தட்டுக்களில் பதிவு செய்து வெளியிடப்பட்ட எம்.எஸ். சுப்புலஷ்மியின் பாடல்கள், கிராமஃபோன் தட்டுக்கள் தேயும் வரை வீடுதோறும் ஒலித்தன. அக்கால ரசிகர்களின் நாடி நரம்புகளில் கூட பக்தியை இட்டுச் சென்றன அப்பாடல்கள். அதில் முக்கியமானது ஸ்ரீரங்கபுர விஹாரா என்று தொடங்கும் ஸ்ரீரங்கம் ரங்கநாதரைக் குறித்த பாடல் மிகப் பிரசித்தம். பாவயாமி ரகுராமம் காற்றினில் பறந்து வந்த கீதமாக இருந்ததில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. ஸ்ரீவிஷ்ணு பக்தி அடிமட்ட தொண்டர்கள் வரை பரவக் காரணம் சுப்ரபாதமும், ஸ்ரீவிஷ்ணு சகஸ்ரநாமமும்தான் என்றால் மிகையில்லை. இவற்றிற்கு இசையில் பெரும்பங்கு இல்லை என்றாலும், சொற்களுக்கு இடையில் ஒலிக்கும் தம்புரா சுருதிகூட பக்தியில் உருகச் செய்தது என்றுதான் சொல்ல வேண்டும். ‘பாக்யாத லஷ்மி பாரம்மா’ என்ற புரந்தர தாசரின் கன்னட மொழிப் பாடலின் வேகம், மகாலஷ்மி மீதான பக்தித் திளைப்பில் வேகம் கூட்டியது நிதர்சனம்.
இசையோடு பக்தி வளர்த்தவர்
ஸ்ரீமன் நாராயண என்று தொடங்கும் பாடல், அடி மனதை வருடி, நாராயண நாமத்தை அங்கேயே செதுக்கிச் சென்றது. கடவுளரின் பாடல்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களிடையே, தன்னை அறியாமலேயே பக்தியையும் சேர்த்து வளர்த்து வந்த எம்.எஸ்., அறக்கட்டளைகள் மூலம் அளப்பரிய தான தர்மங்கள் செய்துவந்தார். பரந்துபட்ட உலக மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற இவரது சமூக நல எண்ணத்தை அறிந்த காஞ்சி மகா பெரியவர், உலக அமைதி வேண்டி எம்.எஸ். குரலில் பாடுவதற்கு தோதான மைத்ரீம் பஜத எனத் தொடங்கும் பாடலை இயற்றிக் கொடுத்தார். அப்பாடல் உலக ஐக்கிய நாடுகள் சபையில் உலக அமைதி வேண்டி இயற்கையை முன்னிட்டுப் பாடப்பட்டது பக்தி வழியின் ஒரு புதிய பரிணாமம்.
தினந்தோறும் திருமலையில் ஒலிக்கச் செய்யும் அளவிற்கு முக்கியத்துவம் பெற்றது இவர் பாடிய சுப்ரபாதம். இன்றளவும் கோடிக்கணக்கான பக்தர்களால் சுப்ரபாதம் சொல்லப்படுகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் எம்.எஸ்.சுப்புலஷ்மியின் பதிவுகளே. புரட்டாசி மாதம் பிறந்துவிட்டது கோவிந்த நாமத்துடன். எனில் நாள்தோறும் காற்றில் கலந்து வரும், பக்தியைப் பரவசமாக்கி வழங்கியவரின் இனிய குரல். குறையொன்றுமில்லை கோவிந்தா.