Last Updated : 04 May, 2017 10:27 AM

 

Published : 04 May 2017 10:27 AM
Last Updated : 04 May 2017 10:27 AM

வான்கலந்த மாணிக்கவாசகம் 27: விளங்கு தில்லைக் கண்டேனே

இறைவனின் படைப்பில் மலைகளும், அருவிகளும், பள்ளத்தாக்குகளும், கடல்களுமாய் ஏற்ற-இறக்கங்களான பன்மைத்துவமே உலகின் அழகு! இறைநீதிக்கு எதிராக மனிதர்கள் உருவாக்கியுள்ள ஏற்றத்தாழ்வுகள் சாதித் துயரம்! இவை விளக்கும் மணிவாசகரின் திருவாசகங்களை இங்கு சிந்திப்போம்!

இறைவன் பேதமிலாப் பெருமையன்!

“பேதங்கள் அனைத்துமாய், பேதம் இலாப் பெருமையனை!” என்றார் இறைவனை! வேறுபாடுகள்(பேதங்கள்) அனைத்தும் தானேஆகி, தான் எந்த வேறுபாடும் அடையாத பெருமையுடையவன் இறைவன்.

இறைவன் கொள்ளும் வேறுபாடுகள் யாவை? நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் பூதங்கள் ஐந்து ஆகி, சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்ற ஐம்புலன்களாகி, உலகின் ஏனைய எல்லாப் பொருள்களும் ஆகி, அவைகளில் இரண்டறக் கலந்திருக்கிறான் இறைவன்; இதை, “பூதங்கள் ஐந்து ஆகி! புலன் ஆகி! பொருள் ஆகி, பேதங்கள் அனைத்துமாய்!!” என்றார் மணிவாசகர். அவ்வாறு இரண்டறக் கலந்திருந்தும், இறைவன் அப்பொருட்களின் தன்மைகளால் பற்றப்படாதவன், மாற்றமடையாதவன் என்பதைப் “பேதமிலாப் பெருமையனை!” என்று வியக்கிறார் பெருமான். எம் துன்பங்களைப் போக்கி, ஆண்டுகொண்ட, கிளர்ந்து எழும் ஒளியாக, பச்சை மரகதமணியாக, சிவசக்தி வடிவானவனை தில்லையில் கண்டேன் என்றார் மணிவாசகர்.

பூதங்கள் ஐந்து ஆகி! புலன் ஆகி! பொருள் ஆகி!

பேதங்கள் அனைத்துமாய்! பேதம் இலாப் பெருமையனை!

கேதங்கள் கெடுத்து ஆண்ட கிளர்ஒளியை!-மரகதத்தை!

வேதங்கள் தொழுது ஏத்தும், விளங்கு தில்லைக் கண்டேனே! (திருவாசகம்:31.10)

மேற்கூறியவைகள் இன்னும் சற்று ஆழமாய் ஊன்றிக் கவனிக்கப்படவேண்டியவை. கண்ணுக்குப் புலனாகாத சடப்பொருளான மாயையிலிருந்தே, கண்ணுக்குப் புலப்படும் ஐம்பூதங்களால் ஆன உலகங்கள் இறைவனால் படைக்கப்படுகின்றன. இவ்வுலகங்கள், உயிர்களின் அறியாமையை நீக்க, இறைவனால் படைக்கப்பட்ட கல்விக்கூடங்கள். ஐம்பூதங்களால் ஆன உடல்களிலேயே உயிர்கள் வாழ்ந்து, தங்கள் அறிவுப்பயணத்தைத் தொடர்கின்றன; மனிதப்பிறவியில்தான், தன்னையும், தன் தலைவனாம் இறைவனையும் அறிந்து, முழுமையான அறிவு பெற்று விடுதலையடைந்துப் பேரின்பம் என்னும் இறைமுத்தி அடைகின்றன.

இறைவனே பிறவிச் சங்கிலியை நீக்குவான்!

ஒரு உயிர், பலபிறவிகளில் ஈட்டிய ஒட்டுமொத்த நல்வினை-தீவினைகளில்(பழவினைகள்/சஞ்சிதகர்மம்) சிலவற்றை துய்த்துத் தீர்ப்பதற்கே(ஊழ்வினைகள்/பிராரர்த்தகர்மம்) உடல்பிறவி ஏற்படுகிறது. எடுத்த பிறவியில் செய்யும் நல்வினைகள்-தீவினைகள்(வருவினைகள்/ஆகாமியகர்மம்), அவ்வுயிரின் பழவினைக் கணக்கில் ஏறிக்கொள்ளும். இவ்வாறு, வினைகளால் பிறவி, பிறவியால் வினைகள் என்று பிறவித்தொடர்-சங்கிலி விடாது துரத்தும். அச்சங்கிலியை அறுக்க வல்லவன் இறைவன் ஒருவனே! அவ்வுயிர் இறைவனிடம் மனமார வேண்டினால் மட்டுமே இறைவன் பிறவித்தொடரை நீக்குவான். உலகியல் பொருட்களை வேண்டியே வழிபாடும், வேண்டுதல்களும் நடக்கும்வரை உடல்பிறவிகளும் தொடரும்.

“எல்லா உயிர்களும் வசதியோடு, செல்வச் செழிப்பாக வாழவே விரும்பும். பிறவிச் சூழ்நிலையை, தாய்-தந்தையரைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உயிர்களிடம் இல்லை! ஏற்றத் தாழ்வுகளோடு பிறவிகளைத் தந்த இறைவனை “வேண்டுதல்-வேண்டாமை இல்லாதவன்” என்று கூறுவது தவறு”, என்று சிந்தனை செல்கிறதல்லவா?

மோசமான பிறப்பு வருவது என்?

உண்மை! மோசமான பிறவிச் சூழ்நிலையை எந்த உயிரும் தேர்வுசெய்வது இல்லைதான். ஆனால், மோசமான பிறவி பெறுதற்குரிய தீவினைகளை மகிழ்வோடு செய்துவிட்டு, நற்கதியை விரும்பினால் எவ்வாறு கிடைக்கும்? எல்லா மாணவர்களும் மாநிலத்தில் முதலாவதாக வரவே விரும்புவார்கள். ஆனால், அதற்கான உழைப்பைச் செய்யாமல், இனிமையாகப் போழுதுபோக்குவதிலேயே காலத்தைப் போக்கினால் விரும்பியது கிடைக்காதல்லவா!

விருப்பத்துக்கும், செயலுக்குமான இடைவெளியே வெற்றி-தோல்வியைத் தீர்மானிக்கிறது! அதை உருவாக்கியது நாமே! இறைவனல்லன்! நம் தீவினைக்கான பலனைச் சந்திக்க நேரிடும்போது, விதி (ஊழ்வினை) அல்லது இறைவன்மேல் பழியைப் போட்டுத் நம்மையே ஏமாற்றிக்கொள்ளுகின்றோம்.

விதியை மதியால் வெல்க!

ஒரு உயிர், ஏழ்மைச் சூழலில் அல்லது செல்வச்செழிப்பில் பிறப்பதற்கு மட்டுமே அவ்வுயிரின் ஊழ்வினை காரணமாகிறது. இவ்வூழ்வினை, அவ்வுயிர் செய்த பழவினைகளின் ஒரு பகுதியே! இதையே, “தீதும் நன்றும் பிறர்தர வாரா!” என்றார் கணியன் பூங்குன்றனார். கிடைத்த பிறவியில் நன்கு செயல்பட்டு விதியை வெல்லவோ, அல்லது விதியில் ஒன்றி வீழவோ, அவ்வுயிருக்கு, முழுமையான சுதந்திரம் உண்டு. இங்குதான் உயிர்கள் தங்களுக்குத் தரப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்தி முத்தி என்னும் விடுதலை அடைவதோ, தீவினைகள் செய்து, மீண்டும் பிறவிகள் பெறுவதோ நிகழ்கின்றன.

விதியை வெல்லும் தொண்டு!

செல்வச் சூழலில் பிறந்த உயிர்கள், அன்பே சிவமாம் கருணையுடன் துன்புறும் பிற மனிதர்களுக்கும், பிற உயிர்களுக்கும், தொண்டு செய்தால், இறைவன் உள்ளம் குளிர்ந்து, முத்தி என்னும் வீடுபேறு நல்குவான். மாறாக, வேதத்தின் பெயராலும், இறைவனின் பெயராலும் சாதி, குலம், பிறப்பு என்று பொய்நீதி நூல்கள் செய்து, பிற மனிதர்களையும், உயிர்களையும் அடிமைப்படுத்தும் தீவினைகள் செய்தால், விலங்கினும் கீழ்நிலையடைந்து, கடும்நரகில் சிக்கி உழல்வர்.

உண்மையுமாய்! இன்மையுமாய்!

வான் முதலிய ஐம்பூதங்களாக மட்டுமல்லன், ஊன்உடலாகவும், உயிரில்-உயிராகவும் உள்ளான் இறைவன்; இறைவன் “மெய்யன்பர்களுக்கு” உண்மை என்னும் உள்பொருளாகவும், “இறைவன் இல்லை” என்போர்க்கு இன்மை என்னும் இல்பொருளாகவும் உள்ளான். (இக்கருத்தையே, திருவம்மானை-13ம் பாடலில் ‘அல்லாதார்க்கு அல்லாத வேதியனை’ என்று தெளிவாக விரித்துக் கூறியுள்ளார் மணிவாசகர்.) உலகப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்துக்கும் தலைவனாகி, இவைகளின் ஊடே பயணிக்கும் ஒவ்வொரு உயிரையும் ‘யான்’, ‘எனது’ என்று கூத்தாட்டுபவனும் அவனே; இவைமூலம் உயிர்கள் தம்மையும், தம்தலைவனையும் அறியுமாறு செய்து நின்ற இறைவனை என்ன சொல்லி வாழ்த்துவேன் என்று நெகிழ்கின்றார் மணிவாசகர்.

வான் ஆகி! மண் ஆகி! வளி ஆகி! ஒளி ஆகி!

ஊன் ஆகி! உயிர் ஆகி! உண்மையும் ஆய்! இன்மையும் ஆய்!

கோன் ஆகி! யான், எனது என்று அவர்அவரைக் கூத்தாட்டு-

வான் ஆகி நின்றாயை! என் சொல்லி வாழ்த்துவனே! (திருவாசகம்: 5-15)

தீமையான வல்வினைகள் காரணமாக ஒரு உயிர் மிக மோசமான சூழ்நிலையில் பிறக்கின்றது; அப்பிறவிக்கு அவ்வுயிரின் தலைவிதி (ஊழ்வினை) காரணம். ஆனால், அவ்வுயிர்-உடலுடன் உடன் கலந்து வாழ இறைவனுக்கு என்ன தலையெழுத்து? வசதியாக வாழும் மகன் வீட்டில் ஓரிருநாள் மட்டுமே வாழும் தாய்-தந்தையர், வறுமையில் வாடும் மகனுக்குத் தம் ஓய்வு ஊதியத்தைத் தந்து, அவனுடன் கடினவாழ்க்கை வாழ்வது கருணையால் அல்லவா?

இறைவனை அறியாதவர்கள்!

வேண்டுதல் வேண்டாமை இல்லாமல், உயிரின் வினைப்பயனில் ஒருபகுதியை, ஊழ்வினையாகத் தருபவன் இறைவன்; ஊழ்வினையால் ஏழ்மையில் வாடும் மனிதர்கள் மீது மிக்க கருணைகொண்டு, அவர்களுடன் தானும் வாழ்கின்றான். நல்-ஊழ்வினையால் நற்பிறவி பெற்றவர்கள், பிறவியையும், செல்வத்தையும் காரணங்களாக்கி, பொய்நீதி செய்து, சாதியால் ஏழைகளை அடிமைப்படுத்தும்போது இறைவனுக்கே கொடுமை செய்கின்றனர்; ஏனெனில், அவர்கள் செய்யும் சாதி அநீதியை முதலில் நுகர்பவன் அந்த ஏழைகளுடன் உறையும் இறைவனே! அனைத்து உயிருடம்புகளிலும், அனைவர் உள்ளங்களிலும் இறைவனே உறைகின்றான் என்பதை இத்தகையோர் உணர்வதில்லை என்கிறார் திருமூலர்.

உள்ளத்து ஒருவனை! உள்ளுறு சோதியை!

உள்ளம்விட்டு ஓரடி நீங்கா(த) ஒருவனை!

உள்ளமும் தானும் உடனே இருக்கினும்

உள்ளம் அவனை உருவு அறியாதே! – திருமந்திரம்: 417

உயிருக்கு உயிராய் உள்ளத்தில் நீங்காது நிற்கின்ற ஒப்பிலாத இறைவனையே உள்ளத்து ஒருவன், உள்ளுறு சோதி என்றார் திருமூலர். இறைவன் ஒவ்வொருவர் உள்ளத்தையும் விட்டு ஓரடிகூட விலகாமல் நின்றருள்கின்றான். உயிர்-உள்ளமும் சிவமும் இரண்டறக் கலந்திருந்தாலும், உள்ளமாகிய உயிர், தன் சுட்டறிவைக்கொண்டு இறைவனைக் காண்பதில்லை. கருணையும், அன்புமே இறைநீதி. சித்தம் என்னும் உறுதியான கயிற்றைக்கொண்டு, இறைவனின் திருவடிகளைக் கட்டிப்போடும் வித்தையைக் நமக்குக் கற்பிக்கும் மணிவாசகம் உங்களுக்காக அடுத்தவாரம் துளிர்க்கும்.



தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x