

பிறருக்கு உபகாரம் செய்வதற்கே நமது சரீரம் ஏற்பட்டிருக்கிறது என்பது ஆன்றோர் மொழி. ‘பரோபகாரார்த்த இதம் சரீரம்’ என்பார்கள். தேகத்தில் நல்ல தெம்பு இருக்கிறபோதே, யுவர்கள் சேவை நெறியில் ஈடுபட வேண்டும். பிறருக்குச் சேவை செய்வதற்காகவே தேக பலத்தை நன்கு காத்துக்கொள்ள வேண்டும். தேக பலத்தைவிட ஒழுக்க பலம் முக்கியம்.
நமது மதம் கூறுகிற சாஸ்திர தர்ம நெறியின்படி சுத்தமான வாழ்வு வாழ வேண்டும். இப்படி நாம் தூய்மையாக இருந்தால்தான் பிறருக்கு நல்ல முறையில் சேவை செய்ய முடியும். காமக் குரோதாதிகள் இருந்தால், எப்படி நல்ல முறையில் சேவை செய்வது?
சமூகசேவை உண்மையாக இருக்க வேண்டுமாகில் சேவை செய்கிறவர்களுக்கு தர்மத்திலும் சத்தியத்திலும் தளராத பிடிப்பு இருக்க வேண்டும். அவர்களுக்குப் பயம் என்பதே கூடாது. பயமற்ற நிலை வேறு; ஹிம்ஸை வழியில் நடப்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.
ஆஞ்சநேய ஸ்வாமியின் பலம்
யுவர்களுக்கெல்லாம் உதாரணமாக இருப்பவர் ஆஞ்சநேய ஸ்வாமி. அவருக்கு இருந்த பலம் மிகப் பெரியது. சுபாவத்திலோ சாந்தராக இருந்தார். கோபித்து எழ வேண்டிய சமயத்தில் மஹாவீரராக எழும்பி ஹதாஹதம் செய்தார். அவருடைய புத்தி பலம் பெரிது. ஆயினும் பக்தியில் தோய்ந்து அடக்கத்துடன், விநயமே ஸ்வரூபமாகச் சேவை செய்து கொண்டிருந்தார். பயமென்பதே அவருக்கு இல்லை.
ஆனாலும், தாமாக ஹிம்ஸை வழியில் அவர் சென்றதில்லை. பிறருடைய ஹிம்ஸைக்கு எதிர் மருந்தாகவே தாமும் எதிர்த்தார். அவர் சொந்த நலனுக்காக பலத்தைப் பிரயோஜனப்படுத்தவில்லை. துர்பலருக்குக் கொடியவரால் கஷ்டம் ஏற்பட்டால், தம் நலனையும் பொருட்படுத்தாமல் பலவீனரை ரட்சிப்பதில் அஞ்சா நெஞ்சராகச் சேவை செய்தார். சிவாஜியும் இப்படிப்பட்ட ஓர் உதாரண புருஷர். ஆஞ்ச நேயரின் அவதாரமாக மதிக்கப்படும் ஸமர்த்த ராமதாஸரின் அத்யந்த சிஷ்யராக இருந்ததாலே சிவாஜிக்கு இப்படிப்பட்ட குணசம்பத்து இருந்தது.
தேக பலம், அஹிம்ஸை, பயமற்ற நிலை இவற்றோடு சொந்தக் கஷ்டங்களைப் பாராட்டாமல் பிறரைக் காக்கும் மனப்பான்மையும் சேர்ந்தால் அது மிகப் பெரிய சீலமாகும். இதற்கே ‘க்ஷத்ர தர்மம்’ என்று முன்னாளில் பெயர் சொல்லப்பட்டது. ‘க்ஷதாத் கில த்ராயதே; இதி க்ஷத்ரம்’ — ‘பிறரைத் தீமையிலிருந்து காப்பதே க்ஷத்ரம்’ என்பது இதன் பொருள்.
இப்போது நம் நாட்டு யுவர்கள் இந்த க்ஷத்ர தர்மத்தை மேற்கொள்ள நிரம்ப அவசியமாயிருக்கிறது. பலிஷ்டர்களைக் கண்டு பயப்படக்கூடாது. பலவீனர்களை வெறும் மிருக பலம் படைத்தவர்கள் கொடுமைப்படுத்தாத படி சர்வ தியாகம் செய்து காப்பாற்ற வேண்டும். மெஜாரிட்டி, மைனாரிட்டி என்ற பயம் இல்லாமல், தர்மத்துக்கு ஆபத்து வந்தால் உயிரைத் திருணமாக மதித்துப் போராடுகிற நெறி இளைஞர்களுக்கு இருக்க வேண்டும். இதுவே சேவையில் ஈடுபட்ட யுவர்களின் தர்மம்.
துரதிர்ஷ்டவசமாக இதற்கு நேர்மாறான போக்கைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. பலவீனர்களைப் பயமுறுத்தி ஹிம்ஸை முறையால் பணிய வைக்கிற போக்கு நல்லதல்ல. இந்த மாதிரி செய்கிற ஸ்டிரைக், உண்ணாவிரதம், கொடும்பாவி கொளுத்துதல், கிளர்ச்சி இவையெல்லாம் உண்மையில் இவற்றைச் செய்கிறவர்களின் பல வீனத்தைத்தான் காட்டுகிறது.
தங்களுடைய லட்சியத்திலுள்ள சத்தியத்தின் சக்தியில் நம்பிக்கை இல்லாததால்தான், இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். பெரும்பான்மை (மெஜாரிட்டி) பலம் படைத்தவர்கள் பலத்தை துஷ்பிரயோகம் செய்யும்போது அதைக்கண்டு பயப் படுவதும், அதேபோல் தங்கள் பலத்தை துஷ்பிரயோகம் செய்து பலவீனர்களைப் பயமுறுத்துவதும் தேசத்துக்கு நல்லதல்ல.
மக்களின் இந்த பலவீனம் சர்க்காரிலும்தானே பிரதிபலிக்கிறது. மறுபடி நாம் இந்த தேசத்தில் பயமில்லாத பிரஜைகளாகத் தலையை நிமிர்த்தி நடக்க வேண்டுமானால் க்ஷத்ர தர்மத்தை விருத்தி செய்ய வேண்டும்.
தனிமனிதர்கள் உறுதியும் ஆத்ம பலமும் கொண்டிருப்பது, அவர்கள் கட்டுப்பாட்டுடன் ஒன்றுகூடி ஐக்கியமாக உழைப்பது, தீமையையும் அடக்குமுறையையும் கண்டு அஞ்சாத நெஞ்சு உறுதியுடன் போராடுவது, இவையெல்லாம் இந்த தர்மத்தில் அடக்கம். லோக க்ஷேமம் ஒன்றே லக்ஷியமாகக் கொண்டு இந்த தர்மத்தை நடத்திக் காட்டினால், நாட்டின் ஒழுக்கம் மிக உயர்ந்த நிலையை அடையும். அரசாங்கத்தின் தரமும் தானாகவே உயரும்.
தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)