

திருமுருகன் அறுபடை வீடு கொண்டவன். அருளை வாரி வழங்குபவன். அறுபடை வீட்டில் ஒன்றான திருத்தணி, தேவர்களின் அச்சம் நீக்கிய இடம். ஆற அமர உக்கிரம் தணிந்து குமரன் இங்கே குடி கொண்டதால் இது திருத்தணிகை.
பயம் நீங்கியது
சூரபதுமன் என்ற அரக்கன் சிறந்த சிவ பக்தன். அவன் மிகப் பெரிய யாகங்கள், தவங்கள் செய்து சிவபெருமானின் நன்மதிப்பைப் பெற்றான். அவனுக்கு வரமளிக்க விரும்பினார் சிவன். ஈசன் உட்பட யாருக்கும் தன்னைக் கொல்ல வல்லமை இருக்கக் கூடாது என்று வேண்டினான் சூரன்.
வரம் பெற்ற சூரபதுமன் தேவர்களையும் வேட்டையாடத் தவறவில்லை. இந்தத் துன்பத்திலிருந்து தேவர்களை மீட்டு, சூரபதுமனை வதம் செய்யத் தோன்றினான் முருகன். தேவர்களின் பயம் நீக்கி நிம்மதி அளித்தான். வள்ளியை மணந்து ஆனந்தமயமாகக் காட்சியளித்தான் திருத்தணிகையில். கவலை, பிணி, வறுமை முதலியவற்றைத் திருத்தணி யாத்திரை தீர்க்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
கணக்கற்ற காவடிகள்
திருத்தணியில் ஆடிக் கிருத்திகை, தை கிருத்திகை, மாசி, கிருத்திகை ஆகியவை முருகனுக்கான சிறப்பு நாட்கள். இந்த நாட்களில் பக்தர்கள் முருகனுக்குப் பால் காவடி, பன்னீர் காவடி, புஷ்பக் காவடி, மச்சக் காவடி, சேவல் காவடி, தீர்த்தக் காவடி ஆகியவற்றை வேண்டுதலின் பேரில் தோளில் தூக்கிச் செல்வார்கள். முருகன் சூரபதுமனை அழித்ததன் மூலம் தேவர்களுக்கு உதவியதால், முருகனிடம் வேண்டுபவை அனைத்தும் தேவர் அனைவரின் சக்தியால் கைகூடிவிடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிறுவர் முதல் பெரியவர்கள்வரை காவடி தூக்கி, அலகு குத்தி அணிவகுத்துச் செல்வது தொன்றுதொட்டு நடந்துவருகிறது.
குமரனைப் பாடிய மகான்கள்
பாம்பன் குமரகுருதாச சுவாமிகள், வடலூர் ராமலிங்க அடிகள், கந்தபைய தேசிகர், கச்சியப்ப முனிவர், கச்சியப்ப சிவாச்சாரியார் மற்றும் அருணகிரிநாதர் ஆகியோர் முருகன் புகழ் பாடிய மகான்கள். இதில் பாம்பன் குமரகுருதாச சுவாமிகள் முருகனின் ஆறு திருமுகங்களின் பெருமையைக் குறிப்பிடும் வண்ணம் பாடல்களை இயற்றியவர். குமரகுருதாச சுவாமிகள் ராமேஸ்வரம் பாம்பன் என்ற ஊரில் பிறந்தார். சம்ஸ்கிருதம், தமிழ் இரண்டிலும் புலமைபெற்றிருந்த இவர், தமிழ்க் கடவுளான முருகப் பெருமான் குறித்து ஆறாயிரத்து அறுநூற்று அறுபத்தி ஆறு பாடல்களை இயற்றியிருக்கிறார். ஆறுமுகன் எனச் சிறப்பு பெற்று, சரவணபவ என்ற ஆறு எழுத்துகள் கொண்ட மந்திரம் கொண்டவன் என்பதை இந்த எண்ணிக்கை குறிக்கிறது.
குன்றுதோறும் குடிகொண்டவன் குமரன் என்பார்கள். குமரன் குடிகொண்டுள்ள அனைத்துக் கோயில்களிலும் ஆடிக் கிருத்திகையன்று அபிஷேக ஆராதனைகள் சிறப்பாக நடைபெறும். இதயமே கோயில் எனப் பூசலார்நாயனார் நிரூபித்தார். கோயிலுக்குப் போக இயலாதவர்கள், உள்ளத்தில் முருகனைக் கண்டு, உள்ளம் உருக அவன் நாமத்தை உச்சரித்து அருள் பெறலாம்.