

தமிழகத்திலேயே நவபாஷாணங்களால் உருவாக்கப்பட்ட திருச்சிலை ரூபம் என்றால் அது பழநி முருகன் கோயிலில் உள்ள முருகன் திருச்சிலை ரூபம்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்த பொதுத் தகவல். ஆனால், பழநி மட்டுமன்றி, பரபரப்பான சென்னை மாநகரில் உள்ள குரோம்பேட்டையில் வடபழனி சித்தர் உருவாக்கிய நவபாஷாண முருகன் திருச்சிலை ரூபம் கொண்டுள்ளார்.
பழநி தண்டாயுதபாணி கோயிலில் உள்ள முருகன் சிலை நவபாஷாணங்களால் உருவாக்கப்பட்டது. அதனை போகர் சித்தர் வடிவமைத்தார். நவம் என்றால் ஒன்பது, பாஷாணம் என்றால் விஷம். போகர் சித்தரின் வாக்குப்படி 64 பாஷாணங்கள் உள்ளன. அதில், முப்பத்திரண்டு பாஷாணங்கள் செயற்கையாகவும், மீதமுள்ள பாஷாணங்கள் மூலிகை வடிவிலும் கிடைக்கின்றன. அதில், குறிப்பிட்ட ஏதேனும் ஒன்பது பாஷாணங்களைத் தேர்வுசெய்து போகர் சித்தர் பழநி முருகன் திருச்சிலையை வடிவமைத்ததாக ஆன்மிக அறிஞர்கள் கூறுகின்றனர்.
நவபாஷாணச் சிலை என்பது நச்சுத்தன்மை நீங்கி உடல் ஆரோக் கியத்துக்கு நன்மை விளைவிக்கும் அற்புத ஆற்றல் கொண்டதாக நம்பப்படுகிறது. இத்தகைய சிலை பழநியில் இருப்பதாலேயே, பழநி முருகனுக்கு செய்யப்பட்ட அபிஷேக தீர்த்தங்களை அருந்தினால், உடல் பிணிகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது.
இந்த நிலையில், பழநி தவிர்த்த மற்ற அறுபடை வீடுகளில் இல்லாத ஒரு சிறப்பு சென்னை குரோம்பேட்டையை அடுத்த அஸ்தினாபுரம் வடக்கு மசூதித் தெருவில் உள்ள முருகனுக்கு உள்ளது. முருக பக்தராக வாழ்ந்த வடபழனி சித்தர், போகரைப் பின்பற்றி நவபாஷாண முருகன் திருச்சிலையை உருவாக்கினார். நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்ட அக்கோயில் நவபாஷாண தண்டாயுதபாணி திருக்கோயில் என்று பெயர் பெற்றது.
நெருக்கடியான வீடுகளுக்கு இடையே குடியிருக்கும் இந்த நவபாஷாண முருகன் பற்றிய தகவல்கள் சென்னையை இன்னும் தாண்டவில்லை. இந்தச் சூழலில், குடிசையில் இருந்த முருகனுக்குக் கட்டிடங்கள் எழுப்பப்பட்டு, கடந்த 2015-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20-ம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இக்கோயிலில் உள்ள நவபாஷண தண்டாயுதபாணிக்கு ஒவ்வொரு மாதமும் பிரதோஷங்கள் மற்றும் பரணி நட்சத்திரத்தில் அபிஷேகமும், ஆராதனையும் நடைபெறுகின்றன.
நவபாஷண தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் செய்த பால், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி ஆகிய பிரசாதங்களைப் பல நோய்களைத் தீர்க்கும் அபூர்வ மூலிகையாகவே பக்தர்கள் கருதுகிறார்கள். கோயிலில் உள்ள பாதரசத்தாலான சிவலிங்கம் (ஜலகண்டேஸ்வரர்) மேலும் சிறப்பைச் சேர்க்கிறது. இச்சிவலிங்கத்தை வழிபடுபவர்களுக்குப் படிப்பில் உள்ள அனைத்துத் தடைகளும் நீங்கும் என்பது ஐதிகம்.
108 சங்கு அபிஷேகம்
கும்பாபிஷேகம் முடிந்து ஓராண்டு நிறைவையொட்டி செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று கொண்ட்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை ஒன்பது மணிக்கு சுப்பிரமணிய ஹோமம், 11.30 மணிக்கு 108 சங்கு அபிஷேகம், 12.30 மணிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, 1 மணிக்கு அன்னதானமும் நடைபெறும்.