பைபிள் கதைகள் 46: ஒதுக்கப்பட்டவனே தலைவன்

பைபிள் கதைகள் 46: ஒதுக்கப்பட்டவனே தலைவன்
Updated on
3 min read

இஸ்ரவேலர்களின் விளைச்சலைக் கவர்ந்து சென்றுவிட வேண்டும் என்பதில் அந்நியர்கள் குறியாக இருந்தார்கள். வயலில் இறங்கி உழைப்பதற்குப் பதிலாக, இஸ்ரவேலர்களின் கடும் உழைப்பில் விளைந்து நிற்கும் கதிர்களையும் தானியக் குதிர்களையும் கவர்ந்துசெல்வது அவர்களுக்குச் சுலபமாக இருந்தது. இப்படிக் கொள்ளையடித்துச் செல்ல, இஸ்ரவேலர்கள் போரில் வென்று 500 ஆண்டுகளைக் கடந்து பலதலைமுறைகளாக வாழ்ந்து வந்த பகுதிகளை தங்கள் பூர்வீக இடமென்று சொந்தம் கொண்டாடினார்கள்.

இவ்வாறு அவர்கள் இஸ்ரவேலர்களின் பகுதிகளைக் கைப்பற்றிக்கொள்ளத் துடித்ததன் பின்னணியில், யோசுவாவுக்குப் பிறகு வீரம் நிறைந்த தலைவர்கள் இல்லாமல் போனாதும் ஒரு காரணமாக இருந்தது. இருப்பினும் தன்னை மறக்காமல் மிஸ்பாவுக்கு வந்து (மிஸ்பா - கடவுளுடன் தனிமையில் பிரார்த்தனை மூலம் உரையாடும் இடம்) தன்னிடம் பேசுகிற மிக எளிய இஸ்ரவேல் மனிதர்களை கடவுள் உயர்த்தினார். அவர்களைக் கொண்டு இஸ்ரவேலர்களை மீண்டும் மீண்டும் அந்நியப் படையெடுப்புகளிலிருந்து கடவுள் காத்துவந்தார்.

கிதியோன் போன்ற ஏழை விவசாயியைக் கடவுள் இவ்வாறு பயன்படுத்திக்கொண்டார். கிதியோனுக்குப் பிறகு தோலா, யாவீர் போன்ற நியாயாதிபதிகளை இஸ்ரவேலர்களுக்குக் கடவுள் கொடுத்தார்.

கற்பனைத் தெய்வங்கள்

ஆனால் தீமையான காரியங்கள் என்று கடவுளால் குறிக்கப்பட்ட அனைத்தையும் இஸ்ரவேலர் மீண்டும் செய்ய ஆரம்பித்தனர். அவற்றில் முக்கியமானது அந்நிய தெய்வங்களை வழிபடத் தொடங்கியது. அந்நியப் படையெடுப்பாளர்கள் கொண்டுவந்த கற்பனை தெய்வங்களாகிய பாகாலையும் அஸ்தரோத்தையும் வணங்கத் தொடங்கினர். மேலும் அவர்கள் ஆராமின் தெய்வங்களையும், சீரியாவின் தெய்வங்களையும் சீதோனின் தெய்வங்களையும் மோவாபின் தெய்வங்களையும் அம்மோனியரின் தெய்வங்களையும், பெலிஸ்தரின் தெய்வங்களையும் வணங்க ஆரம்பித்தார்கள்.

எகிப்தின் 400 ஆண்டுகால அடிமைத் தளையிலிருந்து மீட்டு அழைத்துவந்து, பாலைவனத்தில் ‘மன்னா’ உணவிட்டு, மூதாதையர்கள் நிலமாகிய கானானை வென்று தந்த பரலோகத் தந்தையாகிய யகோவாவை அடுத்தடுத்து வந்த இஸ்ரவேல் தலைமுறையினர் மறந்துபோனார்கள். ஆனால் சில குடும்பங்கள், சில மனிதர்கள் என்று இஸ்ரவேல் மக்களில் கடவுளை மறக்காதவர்கள் இருக்கவே செய்தனர்.

அம்மோனியர்களின் ஆதிக்கம்

இப்போது இஸ்ரவேலர்களைக் கொன்று, அவர்களது விளைச்சலைக் கவர்ந்து, செல்வங்களைக் கொள்ளையிட்டுச் செல்ல அம்மோன் தேசத்தைச் சேர்ந்த அம்மோனியர்கள் அடிக்கடி வரத் தொடங்கினார்கள். இப்படி இஸ்ரவேலின் கீலேயாத் தேசமானது 18 ஆண்டுகாலம் அம்மோனியர்களால் அடிக்கடி நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள், கொள்ளைகள், இன அழித்தல் என பெரும் பாதிப்பைச் சந்தித்துக்கொண்டிருந்தது.

இந்நிலையில்தான் தங்கள் உண்மைக் கடவுளாகிய யகோவாவின் நினைவு இஸ்ரவேலர்களுக்கு வருகிறது. மூப்பர்கள் வழியே தங்கள் கடந்த கால வரலாற்றைத் திரும்பப் படித்தார்கள். கண்ணின் இமைபோல் காத்துவந்த தங்களது கடவுளின் கிருபையை அறிந்து, மறந்துபோன தங்கள் கடவுளை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்.

“ எங்களைக் காத்துவந்த தெய்வமே; வாக்களித்த தேசத்தைத் தந்தவரே, உமக்கு விரோதமாக நாங்கள் பாவம் செய்தோம். நீரே எங்களின் தஞ்சம், அம்மோனியர்களிடனிருந்து எங்களைக் காப்பாற்றும் தந்தையே” என்று கெஞ்சுகிறார்கள். அவர்களது இறைஞ்சுதலைக் கேட்ட பரலோகத் தந்தையாகிய யகோவா அவர்களுக்காக மனமிரங்கினார். அமோனியர்களை எதிர்த்துப் போர்புரிந்து வெற்றிகொள்ள யெப்தா என்பவரைத் தேர்ந்தெடுக்கும்படி கடவுள் வழிகாட்டுகிறார். யெப்தா என்றதும் கீலேயாத்தில் தேசத்தில் வசித்துவந்த மக்களுக்கும் மூப்பர்களும் அதிர்ச்சி அடைகிறார்கள். ஏனெனில், “ நீயொரு பாலியல் தொழிலாளியின் மகன், கீலேயாத்தை விட்டு விலகிச் செல். எங்களை விட்டு தூரமாய்ப்போ” என்று இஸ்ரவேலர்களால் துரத்தியடிக்கப்பட்டவன்தான் யெப்தா.

யார் இந்த யெப்தா?

இஸ்ரவேலர்களின் கீலேயாத் கோத்திரத்தைச் சேர்ந்தவன் யெப்தா. அவனது தந்தையான கீலேயாத் என்ற செல்வந்தன் திருமணம் முடித்துப் பல ஆண்டுகள் ஆகியும் பிள்ளைபேறு இல்லாதவனாக இருந்தான். மனைவியின் மீது நம்பிக்கையற்றவனாக இருந்த அவன், வாடகைத் தாய் மூலம் தனது வாரிசைப் பெற விரும்பினான். அவனுக்காக பாலியல் தொழிலாளிப் பெண்ணொருத்தி முன்வந்தாள். அவனுக்கு யெப்தா என்ற மகனைப் பெற்றுத்தந்தாள். கிலேயாத் தனக்கு தலைமகன் கிடைத்துவிட்டதாக மகிழ்ந்தான்.

ஆனால் அவனது மகழ்ச்சி நெடுநாள் நீடிக்கவில்லை. கீலேயாத் தன் முதல் மனைவியை குழந்தை பாக்கியம் இல்லாதவள் என்று கருதியது பொய்யாப் போனது. அவனது முதல் மனைவிக்கு அடுத்தடுத்துப் பிள்ளைகள் பிறந்தனர். அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனதும் யெப்தாவையும் அவனது தாயையும் விட்டை விட்டுத் துரத்தியடித்தனர். அவர்கள் எவ்வளவோ கெஞ்சி மன்றாடியும் அவர்கள் இரங்கவில்லை. அவர்கள் யெப்தாவை நோக்கி, “நம் தந்தையின் சொத்திலிருந்து உனக்கு எதையும் தர மாட்டோம். ஏனென்றால் எங்கள் தந்தைக்குப் பிறந்திருந்தாலும் நீ ஒரு பாலியல் தொழிலாளின் மகன்” என்று இழிவாக பழித்துரைத்தனர். அப்போது கீலேயாத்தில் இருந்த மூப்பர்களும், தலைவர்களும் யெப்தாவுக்கு ஆதரவாக எதுவும் பேசவில்லை.

நீ இங்கிருந்து வெளியேறுவதே சிறந்தது என்றார்கள்” வேறு வழியின்றிப் பிறந்து வளர்ந்த தன் சொந்த வீட்டையும், மண்ணையும் தன்னை விரும்பாத சகோதரர்களையும் பிரிந்து சென்ற யெப்தா அருகாமையில் இருந்த தோப் என்ற தேசத்தில் குடியேறி வாழ்ந்து வந்தான். என்றாலும் அவனது தாயும் தந்தையும் அவனுக்குக் கற்பித்த பரலோகத் தந்தையாகிய யோகாவை அவன் மறக்கவில்லை. சிலை வழிபாட்டை அவன் நாடவில்லை. அதே நேரம் அவன் பெரும் பலசாலியாகவும் வீரனாகவும் மாறினான்.

அவனது வீரத்தைக் கண்டு தோப் தேசத்தில் பல முரட்டு மனிதர்கள் அவனைப் பின்பற்றத் தொடங்கினார்கள். முரட்டு மனிதர்களின் படையணியை உருவாக்கிய யெப்தா ஒரு கூலிப்படையின் தலைவனைப் போல் ஆனான். அவனது வீரமும் மூர்க்கமும் இஸ்ரவேல் முழுக்கப் பிரபலமானது.

எங்களுக்குத் தலைவனாக இரு

உறவுகளாலும் ஊர்க்காரர்களாலும் கைவிடப்பட்டதாலேயே யெப்தா இப்படி முரட்டு மனிதனாக மாறிப்போனான். யாரால் அவன் புறக்கணிக்கப்பட்டானோ அவர்களையே யெப்தாவிடம் திருப்பி அனுப்பினார் கடவுள். கீலேயாத்தின் மூப்பர்கள் திரண்டு சென்று யெப்தாவைச் சந்தித்தனர். “ யெப்தாவே உன் வீரம் குறித்து நாங்கள் நன்கு அறிவோம். நீ எங்கள் ஊரின் மைந்தன். இந்த தேசத்தை விட்டு விலகி நம் கீலேயாத்துக்கு திரும்பி வா. நம் படையின் தளபதியாக இருந்து அம்மோனியர்களை எதிர்த்துப் போரிடு” என்றனர்.

அப்போது யெப்தா கீலேயாத் தேசத்து மூப்பர்களிடம், “எனது தந்தையின் வீட்டிலிருந்து வெளியேறும்படி என்னைக் கட்டாயப்படுத்தினீர்கள். உங்களுக்கு இப்போது துன்பம் வந்ததும் என்னிடம் வந்திருக்கிறீர்கள்” என்று சொன்னான்.

கீலேயாத்தின் மூப்பர்கள் மனவருந்தி, “பழைய நாட்களை மறந்து, எங்களை மன்னித்துவிடு. எங்களோடு வந்து அம்மோனியர்களை எதிர்த்துப் போராடு. நமக்கான வெற்றியைக் கடவுள் உன்வழியாகத் தருவார் என நம்புகிறோம். கீலேயாத்தில் வாழும் மக்கள் அனைவருக்கும் நீ அதிபதியாக இருக்கச் சாம்மதிக்கிறோம்” என்றனர். அதற்குச் சம்மதித்த யெப்தா, “நம் கடவுளாகிய பரலோகத் தந்தை நாம் வெற்றி பெற உதவினால், நான் உங்கள் புதிய தலைவனாக இருப்பேன்” என்று ஒப்புக்கொண்டு போருக்குத் த யாரானான். போர்முனைக்குச் செல்லும்முன் மிஸ்பாவுக்குச் சென்று கடவுளுடன் பேச விரும்பினான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in