

பூஞ்சோலையில் இருந்து நகர்வலமாக அரண்மனைக்கு வந்த சித்தார்த்தர், தேரை விட்டு இறங்கி அரண் மனைக்குள் சென்று ஆசனத்தில் அமர்ந்தார். அப்போது அழகு வாய்ந்த பெண்கள், நல்ல ஆடை, அணிகளை அணிந்து கண்ணையும் கருத்தையும் கவரும் இனிய தோற்றத்துடன் இசைக் கருவிகளை வாசித்தும் ஆடியும் பாடியும் அவருக்கு மகிழ்ச்சி ஊட்டினார்கள்.
ஆனால், மக்களுடைய வாழ்க்கையின் துன்பங்களைக் கண்டு வாழ்க்கையில் வெறுப்பு கொண்டிருந்த சித்தார்த்தருக்கு, ஆடல் பாடலில் மனம் செல்லவில்லை. இனிய பாடல்கள் செவிக்கு இன்பம் ஊட்டவில்லை. உலக வாழ்க்கையை வெறுத்தவராகச் சித்தார்த்தர் கட்டிலில் உறங்கினார்.
உள் சிந்தனை
சித்தார்த்தர் உறங்கியதைக் கண்டு ஆடல் பாடலை நிறுத்தி விட்டு, இசைக் கருவிகளைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு பெண்களும் அங்கேயே உறங்கிவிட்டார்கள். நள்ளிரவிலே சித்தார்த்தர் விழித்தெழுந்தார். பெண்கள் உறங்குவதைக் கண்டார். அந்தக் காட்சி அவருக்கு வெறுப்பை உண்டாக்கியது. சிலர் வாயைத் திறந்துகொண்டு உறங்கினர். சிலரது வாயிலிருந்து எச்சில் ஒழுகிக் கொண்டிருந்தது. சிலர் வாய் பிதற்றினர். அவர்களின் கூந்தல் அவிழ்ந்தும் ஆடைகள் விலகியும் கிடந்தன. இந்தக் காட்சிகளைக் கண்ட சித்தார்த்தர் தனக்குள் இவ்வாறு எண்ணினார்.
இல்லற விலகல்
சற்று முன்பு இவர்கள் தேவலோகப் பெண்களைப் போலக் காணப்பட்டனர். இப்போது வெறுக்கத்தக்கவர்களாக காட்சியளிக்கின்றனர். சற்று முன்பு இந்த இடம் தெய்வ லோகம் போன்று இருந்தது. இப்போது இடுகாடு போலக் காணப்படுகிறது. தீப்பிடித்து எரியும் வீடு போலிருக்கிறது. இப்படி அவர் தனக்குள் எண்ணிக் கொண்டபோது, இப்போதே இல்லற வாழ்க் கையைவிட்டு விலக வேண்டும் என்ற எண்ணம் உண்டானது.
உடனே சித்தார்த்தர் கட்டிலை விட்டெழுந்து மண்டபத்தைக் கடந்து வாசல் அருகே வந்து, "யார் அங்கே" என்று பணியாளர்களை விளித்தார். "அரசே! அடியேன் சன்னன்," என்று கூறித் தேர்ப்பாகன் அவரை வணங்கி நின்றான். "சன்னா! இப்பொழுது நான் அரண்மனையை விட்டுப் புறப்படப் போகிறேன். குதிரையை இங்குக் கொண்டுவா" என்று கட்டளையிட்டார். சன்னன் தலைவணங்கிக் குதிரைக் கொட்டிலுக்குச் சென்றான்.
குழந்தை ராகுலன்
சித்தார்த்தர் தனது குழந்தை ராகுலனைப் பார்க்க நினைத்து, யசோதரை உறங்குகிற அறையை நோக்கிச் சென்றார். ஓசைபடாமல் மெல்லக் கதவைத் திறந்தார். மங்கலான ஒளியுடன் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
விளக்குகளுக்கு இடப்பட்டிருந்த எண்ணெயிலிருந்து இனிய நறுமணம் அந்த அறையில் கமழ்ந்து கொண்டிருந்தது. அந்த அறையில் இருந்த கட்டிலில், மல்லிகைப் பூக்களைத் தூவிய மெல்லிய பஞ்சணையின் மேலே யசோதரை, தனது குழந்தையை வலது கையால் அணைத்துக்கொண்டு உறங்கிக் கொண்டிருந்தார்.
சித்தார்த்தர் அறைக்குள்ளே செல்ல வாயில் நிலையின் மேல் அடி வைத்தார். அப்போது அவர் உள்ளத்தில் ஓர் எண்ணம் தோன்றியது. "உள்ளே போய்த் தேவியின் கையை விலக்கிக் குழந்தையைப் பார்க்கும்போது, தேவி விழித்துக் கொள்ளக் கூடும்.
அதனால், என்னுடைய துறவுக்குத் தடை ஏற்படக்கூடும். ஆகவே, முதலில் சென்று புத்த நிலையை அடைந்த பிறகு, என் மகனை வந்து காண்பேன்," என்று தனக்குள் எண்ணிப் புறப்பட்டார்.
நன்றி: மயிலை சீனி. வேங்கடசாமியின் ‘கவுதம புத்தர்’
- தொகுப்பு: ஆதி