

சூரியன் மறைவதால் நம் கண்கள் காணும் ‘புறஇருள்’, எல்லாப் பொருள்களின் ‘இருப்பை’ கண்ணுக்கு மறைத்தாலும், ‘இருள் உள்ளது’ என்னும் ‘தன்னிருப்பை’ மனிதர்களுக்கு வெளிப்படுத்துவதால், நாம் செயற்கை மின்னொளியை உருவாக்கி, இருள் நீக்கி வாழ்கிறோம்.
‘அறியாமை’ என்னும் ‘அகஇருள்’ நம்மைப் பிடித்துள்ளது என்பதே நமக்குத் தெரியாததால், நாம் அறியாமையில் இருந்து விடுபட இயலாது; நம்மிடம் பெருங்கருணை கொண்ட இறைவன் நம்மைப் பிடித்த ‘அறியாமை’ என்னும் அகஇருளை நீக்க, கண் முதலிய அறிவுக்கருவிகளுடன் கூடிய உடல் பிறவிகளைத் தருவதால், நல்வினை, தீவினை செய்து அதன் பலன்களைப் பெறுவதன் மூலம், நாமே நம்மை அறிகிறோம்; நம் தலைவனாம் இறைவனையும் அறிகிறோம்.
கருணையினால் நம்முள்ளே மறைந்து வாழும் இறைவன், நாம் அறியாமலேயே நமக்கு அருள் வழங்குகிறான். அறியாமை நீங்கிய நாம், இதே இறைப்பண்புடன், வலதுகை கொடுப்பதை இடதுகை அறியாமல் துன்புறும் சகமனிதர்களுக்குச் செய்யும் தொண்டினால் இறைவனின் அன்புக்கு உரியவர்களாகி ஆட்கொள்ளப்படுவோம். இச்செய்தியின் உள்ளீடே திருவாசகத்தில் பல இடங்களிலும் பேசப்படுகின்றது.
உருத்தெரியாக் காலத்தே உள்புகுந்து
இறைவன் எப்போது உயிரில் கலந்து உறவானான் என்பதை மணிவாசகர் தில்லையில் அருளிய கண்டபத்துப் பதிகத்தில் அற்புதமாக விளக்குகிறார். உடல் பிறவிக்கு வருவதற்கு முன்பே, அதாவது, உடலற்ற அருவமாக, அறியாமை இருளில் மூழ்கியிருக்கும் போதே, கருணை கொண்டு உள்புகுந்தான் இறைவன்; தன் உள்ளத்தில் நிலையாக அமர்ந்து, ‘கருத்து’ என்னும் சிந்தனையை வைத்து, பின் உடலில் புகுந்து, பெருங் கருணையினால் ஆண்டுகொண்டு, தன்னுடைய மறைப்புச் சக்தியினால் உயிர்களுக்குத் தெரியாமலேயே அவைகளுடன் இறைவன் வாழ்கிறான்; உயிர்களின் செயல் சுதந்திரங்களில் இறைவன் தலையிடுவதில்லை.
வாழ்வின் நெடும் பயணத்துக்குப் பின், மணிவாசகர் இறையருளால் தன் பிறவி நோக்கத்தை அறிந்துகொண்டது போல், நாமும் ஊனுக்குள் உறையும் இறைவனைக் கண்டுகொள்ள வேண்டும்; “திருத்துருத்தி என்னும் ஊரில் குடிகொண்டிருக்கும் தித்திக்கும் சிவபதத்தை, ஆசை(அருத்தி)யினால் நாயடியேன் தில்லையில் கண்டுகொண்டேன்”, என்றார் மணிவாசகர். (மன்னி-நிலைத்து)
உருத் தெரியாக் காலத்தே, உள் புகுந்து, என் உளம் மன்னி,
கருத்து இருத்தி, ஊன் புக்கு, கருணையினால் ஆண்டுகொண்ட
திருத்துருத்தி மேயானை, தித்திக்கும் சிவபதத்தை
அருத்தியினால் நாய் அடியேன் அணிகொள் தில்லைக் கண்டேனே!
– திருவாசகம்: 31-3
ஒருவர் இவ்வுலக வாழ்நாளில் செய்யும் நன்மை-தீமைகளின்(வினை) பயன் அவரை மட்டுமே சேரும். குழந்தைகளுக்காகவும், வாழ்க்கைத் துணைக்காகவும் சொத்துசேர்ப்பதில் கவனமாக இருப்பவர்கள், வினைகள் சேர்வதைக் கவனிப்பதில்லை. அறமற்ற வழியில் ஒருவர் சொத்து சேர்க்கும்போது, அதனால் விளையும் தீவினைகள் அவரிடம் தானாகவே வந்துசேரும். துன்பத்திலும், மகிழ்ச்சியிலும் பங்கெடுக்கும் வாழ்க்கைத் துணையும், குழந்தைகளும், சுற்றமும், நட்பும் ஒருவரின் வினைப்பயனில் பங்கெடுக்க முடியாது; ஒருவர் உண்ட உணவை எப்படி வேறொருவர் செரிமானம் செய்ய முடியாதோ, அதைப் போன்றதே வினைப்பயன்.
ஒரு உயிரின் வினைப்பயனை வேறு உயிர்கள் பங்கிட இயலாது. ஆதலால், மணிவாசகர் உயிரை ‘ஆதம் இலியான்’(ஆதரவற்றவன்) என்கிறார்; கடலிற்பெருகிய நஞ்சை உண்ட என்னுடைய பரம்பரனே! வினைப்பயனால், சுற்றத்தார் யார் துணையும் இல்லாமல் ‘பிறப்பு இறப்பு’ என்னும் தப்ப முடியாத அருநரகில் அழுந்தி மூழ்கிக்கொண்டிருந்த அடியேனுக்கு, ஐயோ என்று இரங்கி, உன் திருவடி மலர் காட்டி ஆட்கொண்டது உனது திருவருள் அல்லவா என்று பரவசம் அடைகிறார் மணிவாசகர். (ஓதம் மலி - கடலிற்பெருகிய, ஆர் தமரும் இன்றியே - சுற்றத்தார் ஒருவரும் இல்லாமலே)
ஆதம் இலி யான், பிறப்பு, இறப்பு, என்னும் அரு நரகில்,
ஆர் தமரும் இன்றியே அழுந்துவேற்கு, `ஆ! ஆ!' என்று,
ஓதம் மலி நஞ்சு உண்ட உடையானே! அடியேற்கு உன்
பாத மலர் காட்டிய ஆறு அன்றே எம் பரம் பரனே!
- திருவாசகம்:38-3
இங்கு பெருமான், மிகவும் துன்பமுடைய பிறப்பு இறப்புகளையே நரகம் என்று கூறினார். அழிக்க வந்த நஞ்சைத் தான் உண்டு தேவர்களைக் காத்ததைபோல, பிறவியாகிய நரகத்தில் விழுந்து அழுந்துகின்ற என்னையும் திருவடியைக் காட்டிக் காத்தது உன் திருவருளே என்று வியக்கிறார்.
இறைவனே தனித்துணை!
இறைவன் ஒருவனே உயிருக்கு வினைப்பயன்களில் இருந்து விடுதலை தந்து பிறவித் துன்பத்தில் அழுந்தாமல் காக்க வல்லவன் என்பதால், இறைவனைத் ‘தனித்துணை’, ‘மனத்துணை’, ‘வாழ்வுக்குமுதல்’, ‘எய்ப்பில்-வைப்பு (துன்பத்தில் வாடும்போது உதவும் என் வைப்புநிதி ஆனவனே!)’ என்றழைக்கும் பெருமான், வினையையே துணையாகக் கொண்டு பிறந்த தாம், இறைவன் துணை கிடைத்தமைக்குத் தலைக்கர்வம் கொண்டு நடந்ததால், இறைவன் தன்னை விட்டுப் பிரிந்ததாகவும் நீத்தல்விண்ணப்பப் பதிகத்தில் கதறியழுகிறார்.
வாழ்க்கையில் எத்தகைய கடினமான சூழ்நிலையில் வாழ்ந்தாலும், அவரவர் தகுதிக்கு ஏற்ப, பேரன்போடு செய்த மக்கள் தொண்டையே சிறப்பித்து, நாயன்மாராக உயர்த்திய இறைவன் தரும் செய்தி ‘அன்புடன் செய்யும் மக்கள் தொண்டே என்னை அடையும் வழி’ என்பதே.
திருவடிப் பேறு கிடைத்ததும் உணர்ந்த விஸ்வரூப இறைக்காட்சி குறித்து அடியவர்களுக்கு விளக்கிய மணிவாசகரின் அனுபவங்களைப் பேசும் திருவாசகத் தேனை அடுத்த வாரங்களில் சுவைப்போம்.
தொடர்புக்கு:krishnan@msuniv.ac.in
(வாசகம் தொடரும்)