அருள் பொழியும் ஆடி மாதம்

அருள் பொழியும் ஆடி மாதம்
Updated on
1 min read

ஜூலை 16: ஆடிப் பண்டிகை

ஆடி மாதம் அம்மன் அருள் பொழியும் அற்புதமான மாதம். கோயில்களில் அம்மன்களும், அம்மன் கோயில்களும் தனிக்கவனம் பெறும் காலம் இது.

ஆடி மாதத்தில் பல முக்கியமான விழாக்கள் உள்ளன. ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிக் கிருத்திகை, ஆடி அமாவாசை, ஆடிப் பௌர்ணமி, ஆடித் தபசு, ஆடிப் பெருக்கு, ஆடிப் பூரம் ஆகியவை ஆடிப் பண்டிகைகளாகும்.

ஆடிப் பிறப்பு

மாதத்தின் முதல் நாளான ஆடிப் பிறப்பன்று, புது மாப்பிள்ளையைப் பெண்ணுடன் அழைக்கும் பெண் வீட்டார், அறுசுவை உணவளித்து கெளரவிப்பர். பின்னர் மாப்பிள்ளையை மட்டும் திருப்பி அனுப்பிவிடுவர். அம்மாதம் முழுவதும் மணமான புதுப் பெண், தன் தாய் வீட்டிலேயே தங்கிவிடுவாள். ஆடி மாதம் பெண்கள் மாதமாதலால், பெண் தெய்வங்களைக் கொண்டாடி மகிழ்வர்.

ஆடித் தபசு

சிவனும் விஷ்ணுவும் ஒன்றாயிருந்த காட்சியைப் பார்வதி தேவி காண விரும்பினார். அவர் விருப்பத்திற்கு ஏற்ப ஆடி மாதம் பெளர்ணமி அன்று இடது பாகம் சங்கரனாகவும் அதாவது சிவனாகவும், வலது பாகம் நாராயணனாகவும் காட்சி அளித்தார் சிவபெருமான்.

ஆடிப் பெருக்கு

நுரை பொங்க இரு கரைகளையும் தொட்டுப் பொங்கிப் பெருகி ஓடும் காவேரியை மக்கள், “வாழி காவேரி” என்று வாழ்த்தி பூக்களால் அர்ச்சித்து வணங்குவார். குடும்பத்துடன் நீராடி மகிழ்வார்கள். வளத்தைத் தரும் நீராதாரம் நாட்டின் செல்வம் என்பதால் இந்தக் கொண்டாட்டம்.

ஆண்டாளின் ஆடிப் பூரம்

ஆண்டாளின் ஜென்ம நட்சத்திரமான ஆடிப் பூரத்தன்று ஆண்டாள் திருக்கல்யாணம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும். பொதுவாகப் பெருமாள் கோயில்களில் ஆண்டாளுக்குத் தனிச் சன்னிதி இருக்கும். இந்த நாளில் ஆண்டாளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு ஆராதிக்கப்படுவாள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in