காணாமல் போன ஆடு

காணாமல் போன ஆடு
Updated on
1 min read

ஒரு மேய்ப்பனின் பொறுப்பில் நூறு ஆடுகள் இருந்தன. தினமும் அவற்றைப் பரந்து விரிந்த புல்வெளிக்கு ஓட்டிச் செல்வான். அவை வயிறாரச் சாப்பிட்டு முடித்த பிறகு அவற்றை மீண்டும் ஓட்டிக்கொண்டு வீடு திரும்புவான்.

ஒரு நாள், மேயப் போன ஆடுகளில் ஒன்று திரும்பி வரவில்லை. காணாமல்போய்விட்டது அவன் பதறிவிட்டான். மேய்ச்சலை முடித்துவிட்டு ஒழுங்காகத் திரும்பி வந்த தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் அந்த இடத்திலேயே விட்டுவிட்டு, காணாமற்போன ஆட்டைத் தேடி அலைந்தான். புல்வெளியைத் தாண்டி மலைப்பகுதி. அதைத் தாண்டி அடர்ந்த மரங்கள் நிறைந்த பகுதி. அங்கெல்லாம் சுற்றித் திரிந்தான்.

ஒரு மரத்தடியில் தன் ஆடு சோர்ந்து படுத்திருந்ததைக் கண்டு அவனுக்குப் பெரும் மகிழ்ச்சி உண்டாயிற்று. வேகமாக ஓடிச் சென்று அதைத் தூக்கி அணைத்துக்கொண்டான்.

அந்த ஆடு பிற ஆடுகளை விட்டுத் தனியே மேயச் சென்றதையும் பேராசையின் காரணமாக வெகு தூரம் தனியே சென்றுவிட்டதையும் அவன் உணர்ந்துகொண்டான். அந்த ஆட்டுக்கு ஏதோ அடி பட்டிருந்ததையும் உணர்ந்தான். அடி பட்டதனாலேயே திரும்பி வர முடியவில்லை.

ஆடு தவறு செய்துவிட்டதே என்னும் கோபத்தை விட, அது உயிருடன் இருக்கிறதே என்பதை எண்ணி மகிழ்ச்சி அடைந்தான். அதைத் தன் தோள்களின் மேல் போட்டுக்கொண்டு சந்தோஷத்துடன் திரும்பி வந்தான்.

நூறு ஆடுகளையும் வழக்கம்போலப் பத்திரமாக அழைத்துவந்து அவற்றுக்குரிய இடத்தில் விட்டான். காயம் பட்ட ஆட்டுக்கு மருந்து போட்டான்.

பிறகு பக்கத்து வீட்டில் இருப்பவர்களை அழைத்தான். “காணாமல்போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்” என்று மகிழ்ச்சி பொங்க அறிவித்தான். தன் நண்பர்களின் வீட்டுக்குச் சென்று அவர்களிடமும் இதைச் சொல்லி மகிழ்ந்தான்.

மனம் திரும்ப வேண்டிய அவசியமில்லாத தொண்ணூற்றொன்பது நீதிமான்களைக் குறித்த மகிழ்ச்சியை விட, தவறு செய்துவிட்டு மனம் திரும்பும் ஒரே ஒரு மனிதனைக் குறித்தே கடவுள் மிகுந்த சந்தோஷம்கொள்வார்.

(லூக்கா 15:4-7)

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in