Last Updated : 02 Jun, 2016 04:47 PM

 

Published : 02 Jun 2016 04:47 PM
Last Updated : 02 Jun 2016 04:47 PM

நியுஜெர்சியில் ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் - ஆன்மிக நிகழ்வு

கடந்த வருடம் மே மாதத்தில் அமெரிக்காவில் ஸ்ரீ சத்குரு சேவா சமாஜம் நடத்திய ஸ்ரீ ராதா கல்யாணத்தை தொடர்ந்து இந்த வருடமும் வெகு விரிவாகவும், விமரிசையாகவும், தை தழுவி, ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் மே 28-29ல் நியுஜெர்சி மார்கன்வில் ஸ்ரீ குருவாயூரப்பன் கோயிலில் நடைபெற்றது.

பல நூறு வருடங்களாக வழக்கத்திலிருந்து வரும் ப்ராசீன நாமசங்கீர்த்தன சம்பிரதாயத்தை, அமெரிக்காவில் வாழும் இந்தியக் குடும்பங்களுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்ற குறிக்கோளோடு ஸ்ரீ சத்குரு சேவா சமாஜம் ஒவ்வொரு மாதமும் நியுஜெர்சியில் நாமசங்கீர்த்தனம் நடத்தி வருகிறது.

இந்த வருட ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் நியுஜெர்சி ஸ்ரீ சுவாமிநாத பாகவதர் தலைமையில், பல வருடங்களாக நாமசங்கீர்த்தனத்தில் ஈடுபட்டு வரும், சென்னையைச் (தற்போது பெங்களூர்) சேர்ந்த ஸ்ரீ ராமன் பாகவதரின் மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் பங்கேற்புடன் சிறப்பாக நடந்தேறியது.

நியுஜெர்சி மற்றும் அமெரிக்காவில் பல இடங்களில் வாழும் சில பாகவதர்கள், சுவாமிநாத பாகவதரோடு இணைந்து, ராதா கல்யாணத்தில் நாமசங்கீர்த்தன பஜனை செய்தனர். அமெரிக்காவில் வசிக்கும் பல குழந்தைகளும் இந்த மஹோத்ஸவத்தில் நாமசங்கீர்த்தன பஜனை செய்து தங்கள் பக்தியையும் ஆற்றலையும் வெளிப்படுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் ஆலங்குடி கிராமத்தில் பல வருடங்களாக நடந்து வரும் ராதா கல்யாணம், நியுஜெர்சி சுவாமிநாத பாகவதருக்கு (இவரது பூர்வீகம் சுவாமிமலை) ஒரு பெரிய உந்துதல் என்பது குறிப்பிடத்தக்கது.

தோடயமங்களம், குருகீர்த்தனம், சம்பிரதாய அஷ்டபதி பஜனை, தரங்கம், குழந்தைகள் நாமசங்கீர்த்தனம், பஞ்சபதி கீர்த்தனம், தேவதா தியானம், திவ்யநாமம், தீப ப்ரதக்ஷிணம் என்றபடி முதல் நாள் மஹோத்ஸவம் நிறைவேறியது. தேவதா தியானம் நிகழ்ச்சியின் பொழுது குழந்தைகள் பிள்ளையார், முருகர், கிருஷ்ணர் போன்று அலங்கரித்துக் கொண்டு மேடையேறி பக்தர்களை ஆனந்தமடையச் செய்தனர்.

இரண்டாம் நாளன்று ஸ்ரீ ராதா கல்யாண வைபவம் 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கூடியிருக்க நடந்தது. இரண்டாம் நாள் மாலை ஆஞ்சநேய உத்ஸவத்தோடு, ஸ்ரீ சத்குரு சேவா சமாஜம் நடத்திய இரண்டாம் வருட ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம் நியுஜெர்சியில் கோலாகலமாக இனிதே நடந்து முடிந்தது.

நாமசங்கீர்த்தன சம்பிரதாயத்தை வளர்ப்பது மட்டுமின்றி, பாகவதர்களுக்கு நிதி உதவி (குழந்தைகள் படிப்பு, மருத்துவ உதவி) அளிப்பது, வேத பாடசாலைகளுக்குப் பொருளாதார உதவி செய்வது, ஓதுவார்களுக்கு மாதாந்தரப் பொருளாதார உதவி (சைவ சமய ஆலயங்களில் ஓதுவார்கள் ஆற்றும் பணிக்கு ஆதரவாக) செய்வது எனப் பல காரியங்களுக்கு சத்குரு சேவா சமாஜம் முயன்று வருகிறது.

சத்குரு சேவா சமாஜத்தை பற்றி மேலும் தெரிந்துகொள்ளவும், நியுஜெர்சி ஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவத்தின் புகைப்படங்களையும், வீடியோ பதிவுகளையும் கண்டு மகிழவும் www.satguruseva.org என்ற இணைய தளத்திற்குச் செல்லவும்.

சம்சாரக் கடலில் மீண்டும் மீண்டும் உழன்று தவிக்காமல் இருக்க, மோட்சம் (வீடு பேறு) அடைவதே வழி. மோட்சத்தை நோக்கி அடி எடுத்து வைக்கும் முயற்சியில், தூய்மையான புத்தியை (மனசு) அடைவது ஒரு முக்கியமான படியாகும். பல கலக்கங்கள் நிறைந்த இந்தக் கலியுகத்தில், தூய்மையான புத்தியை அடைய நாமசங்கீர்த்தனம் ஒரு முக்கியமான சுலபமான மார்க்கம் என்ற தாத்பர்யத்தை இந்த மஹோத்ஸவத்தில் கலந்து கொண்ட “தர்மாத்மா” ஸ்ரீ யக்னசுப்ரமணியன் விளக்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x