

நபிகளார் ஒரு நாள் இரவு மக்காவின் தெரு வழியாகச் சென்று கொண்டிருந்தார். மக்கள் நடமாட்டமில்லாத ஓரிடத்தில் ஒரு மூதாட்டி மூட்டைகளுடன் தூக்க இயலாச் சுமைகளோடு நின்று கொண்டிருந்தார்
அந்த மூதாட்டியிடம் நபி(ஸல்) அவர்கள், “தாங்கள் எங்கே செல்ல வேண்டும்?’’ எனக் கேட்டுச் சுமைகளை தன் தலை மீது வைத்துக்கொண்டார். இருவரும் நடந்து செல்லும்போது, “இந்த இரவு நேரத்தில் தூக்க இயலாத சுமைகளோடு எங்கே செல்கிறீர்கள்?’’ என அண்ணலார் கேட்டார்கள்.
“இந்த ஊரில் யாரோ முஹம்மது என்பவர், புதிய கொள்கை ஒன்றினைக் கூறி மக்கள் மனதை மாற்றி வருகிறாராம்.
எங்களது மூதாதையர் வணங்கி வந்த தெய்வங்களை எல்லாம் வணங்கக் டாது என்கிறாராம். அல்லாஹ் ஒருவரை மட்டுமே வணங்கி வழிபட வேண்டுமென்று சொல்கிறாராம். நான் அவரைப் பார்த்ததுகூட இல்லை. எனவே நான் அந்த முஹம்மதை சந்தித்தால், மனம் மாறி எங்களது மூதாதையரின் கொள்கைகளை விட்டு விடுவேனோ என்கிற அச்சத்தால் தான், இந்த ஊரை விட்டே செல்ல இருக்கிறேன்’’ என்று படபடவெனப் பொிந்து தள்ளினார் அந்த மூதாட்டி.
நபிகளார் தலைச் சுமையொடு ஊருக்கு வெளியே மூதாட்டியுடன் நடந்து செல்லும்போது ஒரு குறிப்பிட்ட இடம் வந்ததும் அந்த மூதாட்டி, “போதும், இனி நான் தனியாகப் பிரயாணம் செய்து கொள்வேன். நீங்கள் என்னுடன் வர வேண்டாம்” எனக் றிவிட்டு,
“ஆமாம், இந்த இரவு நேரத்தில் நான் தங்களிடம் உதவி கேட்காமலேயே எனக்கு உதவி செய்தீர்களே, தாங்கள் யார்? ” என்று கேட்டார் மூதாட்டி.
“ நீங்கள் இவ்வளவு நேரம் எந்த முஹம்மதைப் பற்றிக் கூறி, அவரை சந்திக்கவே கூடாது என்று இந்த ஊரை விட்டே வெளி யேறுகிறீர்களோ, அந்த முஹம்மது (அல்லாஹ்வின் தூதர்) நான்தான்’’ என நபிகள் நாயகம் பணிவாகக் கூறி முடித்தார்கள்.
அந்த மூதாட்டி, நபியின் அன்பைக் கண்டு பெரிதும் ஆச்சரியமடைந்தார்.